07,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை ஆழ்வார்ப் பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் அலுவலகத்தில் அக்கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதற்குப் பின்னர் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், துணைத் தலைவர் மகேந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒன்றாக இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். முதலில் பேசிய துணைத் தலைவர் மகேந்திரன், மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. மக்கள் நலனில் அக்கறைக்கொண்ட மக்கள் நீதி மய்யம் இதே ஒத்த கருத்துடைய அரசியல் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டுமென்ற முடிவில் உறுதியாக உள்ளது. கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தைக் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது எனக் கூறினார். இவரைத் தொடர்ந்து பேசிய கமல்ஹாசன், ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என்பதில் நாங்கள் திண்ணமாக உள்ளோம். 40 தொகுதிகளுக்கு வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க ஒரு குழு அமைக்கப்படவுள்ளது. அதன் பொறுப்பு துணைத் தலைவர் மகேந்திரனிடம் வழங்கப்பட்டுள்ளது. கூட்டணி பற்றி சொல்வதற்கு இப்போது தேவை எழவில்லை. எங்களுடைய கருத்துப் பரப்புதல் தமிழகத்தின் நலனை நோக்கியதாகத்தான் இருக்கும். தமிழகத்தின் மரபணுவை மாற்றத்துடிக்கும் எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,009.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



