23,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: லயோலா கல்லூரி மாணவர்கள் எடுத்த கருத்துக் கணிப்பை பார்க்கும்போது மீனவர்கள் பிரச்சினை இரா.கி.நகர் இடைத்தேர்தலில் கட்டாயம் எதிரொலிக்கும் என்றே தெரிகிறது. இரா.கி.நகர் இடைத்தேர்தலில்- நாம் தமிழர், தினகரன், திமுக, அதிமுக, பாஜக, அணி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. பண்பாடு மக்கள் தொடர்பகம், லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் திமுகவுக்கே அதிக வெற்றி வாய்ப்பு என்று தெரியவந்துள்ளது. அந்த கணிப்பில் திமுகவுக்கு 33விழுக்காடு வாக்குகளும், தினகரனுக்கு 28விழுக்காடு வாக்குகளும் கிடைக்கும் என்று தகவல் கிடைத்துள்ளது. இந்த கணிப்பில் தினகரன் அணி இரண்டாவது இடத்துக்கு முன்னேறும் என்றும் அதிமுக 26 விழுக்காடு வாக்குகளுடன் 3-ஆவது இடத்துக்கு தள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை கூர்ந்து ஆராய்ந்தோமேயானால் மக்களின் அதிருப்தியை சம்பாதித்த காரணத்தால் அதிமுகவுக்கு இரா.கி.நகரில் பேரிடி காத்திருக்கிறது கண்கூடாக தெரிகிறது. ஓகி புயலால் காணாமல் போன மீனவர்கள் இன்னும் மீட்கப்படவில்லை என்று கன்னியாகுமரி மக்கள் கதறுகின்றனர். அவர்களை மீட்பதிலும் சரி நிவாரணப் பணிகளை செய்வதிலும் சரி தமிழக அரசு மெத்தனம் காட்டி வருவதாக மக்கள் புகார் எழுந்துள்ளது. 8 நாட்கள் ஆகியும் மீனவர்களின் பிரச்சினைகளை காது கொடுத்து கேட்காமல் நடுவண்- மாநில அரசுகள் அலட்சியம் காட்டி வருவதாகவும் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கன்னியாகுமரி மீனவர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் சேர்ந்து குற்றம்சாட்டி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கன்னியாகுமரி மீனவர்களின் அழுகுரல் கேட்டு சென்னை மீனவர்கள் அவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதிக்க ஆயத்தமாகினர். ஆனால் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் சென்னை மீனவர்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். இந்தக் கொந்தளிப்பு இரா.கி.நகர் இடைத்தேர்தலில் கட்டாயம் எதிரொலிக்கும் என்று தெரிகிறது. இது கருத்து கணிப்பின் மூலம் தற்போது வெளிப்படுத்தப் பட்டு விட்டது. இடைத்தேர்தல் நடைபெறவுள்ள தொகுதியில் ராயபுரம், காசிமேடு, திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் மீனவ மக்கள் அதிகம் பேர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு மீனவர்களின் வாக்கு வங்கியும் கணிசமாக உள்ளது. நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன் திட்டம், எதையும் கண்டுகொள்ளாத அலட்சியபோக்கு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் அதிமுக அரசின் மீது மக்கள் அதிருப்தி கொண்டுள்ளனர். எனவே கன்னியாகுமரி மக்களின் குரல் இரா.கி.நகர் இடைத்தேர்தலில் கட்டாயம் ஓங்கி ஒலிக்கும் என்பதில் கிஞ்சித்தும் ஐயம் இல்லை. ஒருவேளை மாயாவதி அவர்கள் குற்றஞ்சாட்டுவது போல, மின்னணு இயந்திர வாக்குப் பதிவில் பாஜகவின் தில்லாலங்கடி இருக்குமானால்... கருத்துக் கணிப்பெல்லாம் புஸ்ஸ். இரட்டை இலை பட பட பட பட -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,631
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



