Show all

அற்றைத்தமிழர் இயல்அறிவு, இயல்கணக்கு பெருமிதமும்! இன்றைத்தமிழர் ஹிந்துத்துவா பேரிழிவும்

25,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இயல் என்பது தமிழில் மிக மிக அறிவார்ந்த சொல்லாகும். இயம் என்கிற கருத்தியலையும், இயக்கம் என்கிற நடைமுறையையும் உள்வாங்கியது இயல் என்ற சொல். இயல் என்ற சொல்லுக்குள் கருத்தும், இயக்கமும் இருக்கிறது. எனவே இயல் என்பது எந்த ஒன்றின் கருத்தியலையும், நடைமுறையையும் பற்றிய அறிவாகும். அதனால் இயலை இயல்அறிவு என்றும் சுட்டினர் பழந்தமிழர். 

ஆக பழந்தமிழர் இயல் என்று வழங்கிய சொல் ஆங்கிலத்தில் இருக்கிற சயின்ஸ் என்ற சொல்லுக்கு நேரானது. தனிமங்கள், ஐந்திர ஆற்றல்கள், மரம் மட்டை, குளம் குட்டை, நீங்கள் நான் என தான்தோன்றியாக அமைந்தவைகளை எல்லாம், தமிழ் இயற்கை என்றது. அந்த அடிப்படைகளில், அதாவது இயற்கை போலவே நாம் கருவிகளை உருவாக்கிக் கொள்வதை தமிழ் செயற்கை என்றது. இவைகள் எல்லாம் சயின்சை நம்பழந்தமிழர் இயல் அல்லது இயல்அறிவு என்ற தலைப்பில் கொண்டிருந்தனர் என்பதற்கான தகவல்கள் ஆகும்.

வாழ்க்கையை செம்மைப் படுத்திக் கொள்வதற்கான கோட்பாடுகளை இயல்கணக்கு என்ற தலைப்பில் தமிழர் கொண்டிருந்தனர். அந்த வகையில் தமிழர் கொண்டிருந்த தலையாய தலைப்புகள் இலக்கியம், காப்பியம், கணியம் என்பனவாகும்.

சிலப்பதிகாரம், திருக்குறள், பத்துப்பாட்டு எட்டுத் தொகை நூல்கள் எல்லாம் இலக்கியங்கள். இலக்கியம் என்பது வாழ்ந்த வரலாற்றிலிருந்து எதைச் செய்ததால் என்ன நடந்தது என்பதை விளக்குவதற்கானது. 

தொல்காப்பியம், நன்னூல், யாப்பருங்கலக்காரிகை, தண்டியலங்காரம் போன்ற நூல்கள் எல்லாம் காப்பியங்கள். காப்பியம் என்றால் காப்புக் கோட்பாடுகள். பொங்கலின் போது காப்புக்கட்டுதல். தாய் கருவுற்றிருக்கும் போது வளைகாப்பு என்று காப்பு என்கிற சொல்லை தமிழர் உயர்வாக ஆண்டு வந்தனர். பிற்காலத்தில் காப்பியத்தை இலக்கணம் என்று சொல்ல தொடங்கி விட்டோம். எழுத்து, மற்றும் சொல்லுக்கான காப்பியம், மொழி வளர்ச்சிக்கானது. பொருள் காப்பியம் வாழ்க்கைக்கானது. அந்தப் பொருள் காப்பியத்தில் அகம், புறம் என்று இரண்டு பிரிவுகள் உண்டு.

அகத்தியம் என்ற நூல் கணியம் என்ற தலைப்பிற்கானது. கணியத்தில் உடலுக்கான மருந்து மருத்துவம் என்றும், மனதிற்கான மருந்து வானியல், நிமித்தகம், எண்ணியல், பெயரியல், சோதிடம், சாதகம், மந்திரம், தவம், தெவம் என்று மிக விரிவான தலைப்பாகும். 

கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக அது முற்றாக ஆரியர் கைகளுக்குச் சென்று மதம், ஆன்மீகம் என்ற தலைப்புகளில் தமிழர்களை அடிமைகளாக வீழ்த்த ஹிந்துத்துவாவாகப் பயன்பட்டு வருகிறது. இன்றைக்கு பாஜக என்கிற அரசியல் கட்சி, வானளாவிய அதிகாரத்திற்கு சொந்தமான நடுவண் அரசை கையில் வைத்துக் கொண்டு,  தமிழினத்தின் அத்துனை பழமைகளையும் அழித்து விட கங்கணம் கட்டிக் கொண்டு தமிழகத்தில் கிளம்பியிருக்கிறது.

கடந்த நூறு ஆண்டுகளில், பெரியார், அண்ணா, கிஅபெ, மறைமலைஅடிகள், காசுப்பிள்ளை, பாவணர், பாவலரேறு, பாரதிதாசன் உள்ளிட்டோர், மேலுமாக ஜியுபோப், கால்டுவெல் உள்ளிட்ட ஐரோப்பிய அறிஞர்கள் மீட்டு உதவிய தமிழர் பெருமைகளை குழி தோண்டி புதைக்கும் முயற்சிக்கு, தமிழக குடும்ப வாழ்மான அரசியல்வாதிகளைத் தோதாக பயன் படுத்திக் கொண்டு வருகிறது. 

இந்த நிலையில் தமிழர் பெருமைகளை, தமிழை, தமிழர் அடிப்படைகளை தக்கவைத்துக் கொள்ள தமிழரில் யார் எவர் என்ன செய்யப் போகின்றனர் என்றே தெரியவில்லை.

  -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,086.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.