Show all

மாணவர்கள் போராட்டத்தால் மீண்டும் பரபரப்பாகிறது மெரினா

சமூக வலைதளங்களில் போராட்டம் குறித்து தகவல் பதிந்தாலே, அதை வதந்தி என கூறி நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

     சமூக வலைத்தளங்களின் பரவலால் விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டங்கள் மாநிலம் முழுக்க தீவிரமடையத் தொடங்கியுள்ளன. குறிப்பாக சென்னை மெரினா கடற்கரை மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. காளைகளை காட்சிப் பட்டியலில் சேர்த்து காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசு, தமிழர்கள் முதுகில் குத்தியதை தொடர்ந்து, சல்லிக்கட்டுக்குத் தடை ஏற்பட்டது.

     இதன்பிறகு மாநில அரசே ஒரு சட்டத்தை நிறைவேற்றி சல்லிக்கட்டை நடத்த வழியிருந்தும், திமுக மீது பழி போட இதுவும் ஒரு விஷயம் என்ற அரசியல் கோணத்திலேயே அணுகிய செயலலிதா தலைமையிலான அரசு சல்லிக்கட்டை நடத்த நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டது.

     பொறுத்து பார்த்த தமிழகம் இந்த ஆண்டு பொங்கலுக்கு பிறகு பொங்கி விட்டது. மாணவர்கள், தாய்க்குலங்கள் வீதிக்கு வர மொத்த தமிழகமும் குலுங்கியது.     அதன் மையப்புள்ளியாக தேசிய கவனத்தை ஈர்த்தது மெரினா கடற்கரையில் மாணவர்கள் நடத்திய அமைதி போராட்டம்.

     இப்போராட்டத்திற்கு பணிந்த அப்போதைய ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அரசு துரித கதியில் சட்டத்தை நிறைவேற்றி, நடுவண் அரசிடமும் உரிய அனுமதியை பெற்று, சல்லிக்கட்டு நடத்த வகை செய்தது. துரித நடவடிக்கை சல்லிக்கட்டு சட்டத்தை நிறைவேற்ற,

     மரபுக்கு மாறாக இரங்கல் தீர்மானம் நடந்து அவை ஒத்திவைக்கப்பட்ட நாளிலேயே மீண்டும் அவை கூடியது. ஆனால் அதற்கு முன்பாக, போராட்டக்காரர்கள் கடும் காவல்துறை தடியடிக்கு உட்படுத்தப்பட்டனர். காவல்துறையினரே பல வாகனங்களுக்கு தீ வைத்து அதை போராட்டக்காரர்கள் மீது பழியாக மாற்றியதாக சமூக ஊடகங்களில் காணொளிகள் மின்னலாகப் பரவின.    

     இதன்பிறகு இப்போது அதே போன்ற ஒரு பதற்றம் மெரினாவில் நிலவுகிறது. கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக தலைநகர் டெல்லியில் விவசாயிகள் தங்கள் குறைகளை தீர்த்து வைக்க கோரி நடத்தி வரும் போராட்டத்தால் உந்தப்பட்டு மாணவர்கள் மெரினாவில் இன்று போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். இந்தப் போராட்ட தீ, மதுரைக்கும் பரவியுள்ளது.    

     சமூக வலைத்தள, மெரினா 2 என்ற நடவடிக்கை மூலமாக மாணவர்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தியதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

     மெரினாவை காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர். கோவை வ.உ.சி பூங்கா, மதுரை தமுக்கம் மைதானத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு போராட்டத்தில் மாணவர்கள் குதித்து விடாமல் பார்க்கிறார்கள்.     தீவிர உஷார் நிலை எந்த நேரத்தில், எப்போது, எங்கிருந்து மீண்டும் ஒரு போராட்டம் வெடிக்கும் என்பது தெரியாமல் நிற்கிறது காவல்துறை.

     உளவுத்துறை, இதுகுறித்து தீவிர கண்காணிப்புடன் உள்ளது. ஆட்சியைக் கலைக்க இதுபோன்ற போராட்டங்கள் காரணமாகிவிடகூடாது என்பதில் எடப்பாடி அரசு உறுதியாக உள்ளது. எனவே மாணவர் போராட்டத்தை முதலிலேயே முறியடிக்க முழு வீச்சில் தயாராகி வருகிறது.

     சமூக வலைதளங்களில்; போராட்டம் குறித்து தகவல் பதிந்தாலே, அதை வதந்தி என கூறி நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.