சென்னை சூளைமேட்டை சேர்ந்த சுவாதி என்ற இளம்பெண் கடந்த மாதம்
நுங்கம்பாக்கம் தொடர்வண்டி நிலையத்தில் வைத்து கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் செங்கோட்டையை அடுத்துள்ள மீனாட்சிபுரத்தை
சேர்ந்த ராம்குமார் என்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். ராம்குமார் சார்பில் ஜாமீன் கேட்டு சென்னை மாவட்ட முதன்மை செசன்சு
கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை வழக்கறிஞர் மகேந்திரன் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு கடந்த 5-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது, ராம்குமார் சார்பில் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி
ஆஜராகினார். அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘ராம்குமாருக்கு தெரியாமலேயே இந்த
ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விளம்பரத்துக்காக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால்,
அதை தள்ளுபடி செய்யவேண்டும்’
என்று
கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து ராம்குமாரின் தரப்பில் ஒப்புதல் பெற்ற பின்னர்தான்
இந்த ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது என்பதை மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள் நிரூபிக்கவேண்டும்
என்று மாவட்ட முதன்மை செசன்சு நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு
வந்தது. அப்போது ராம்குமாரின் வழக்கறிஞர் ஜி.கிருஷ்ணமூர்த்தி ஆஜராகவில்லை. அப்போது,
ராம்குமாரை நுங்கம்பாக்கம் காவல்துறையினர் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருவதாக
அரசு தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து இந்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி
உத்தரவிட்டார். 3 நாட்கள், காவல்துறை காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம்
அனுமதித்தது. இதையடுத்து காவல்துறையினர் ராம்குமாரை காவல்துறை காவலில் வைத்து விசாரித்து
வருகிறார்கள். கொலைக்கான காரணம் உள்பட அனைத்து விபரங்களையும் ராம்குமாரிடம்
காவல்துறையினர் கேட்டு பதிவு செய்துள்ளார்கள். நுங்கம்பாக்கம் தொடர்வண்டி நிலையத்துக்கு அழைத்து சென்று சுவாதியை
வெட்டியதை செயல் வடிவமாக அவரிடம் செய்து காட்டச் செய்யவும் காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். காவல்துறை காவல் இன்று மாலையுடன் முடிகிறது. எனவே விசாரணை முடிந்து
இன்று மாலையில் ராம் குமார் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். பின்னர் அவர் புழல் ஜெயிலில் அடைக்கப்படுகிறார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



