Show all

நீட் தேர்வு பாதிப்பு குறித்து! ஏ.கே. ராஜன் தலைமையிலான குழு இன்று 165 பக்க அறிக்கையை பதிகை செய்தது.

நீட் தேர்வு பாதிப்பு குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஓய்வு பெற்ற அறங்கூற்றுவர் ஏ.கே. ராஜன் தலைமையிலான குழு இன்று 165 பக்க அறிக்கையை பதிகை செய்தது.

31,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5123: நீட் தேர்வு பாதிப்பு குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஓய்வு பெற்ற அறங்கூற்றுவர் ஏ.கே. ராஜன் தலைமையிலான குழு இன்று 165 பக்க அறிக்கையை பதிகை செய்தது.

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. இதன் முதல் கட்டமாக நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய அறங்கூற்றுவர் ஏ.கே. ராஜன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவில் மொத்தம் 9 பேர் இடம் பெற்றனர். நீட் தேர்வுக்குப் பின்னர் மருத்துவ படிப்புகளில் தமிழக மாணவர்கள் சேர்க்கை எப்படி வீழ்ச்சி அடைந்திருக்கிறது என்பது குறித்து இக்குழு ஆராய்ந்தது.

இந்த நிலையில், நீட் தேவையில்லை என்பதற்கான ஆய்வுக்கு அமைக்கப்பட்ட அறங்கூற்றுவர் குழுவிற்கு எதிராக, பாஜகவின் தமிழ்நாட்டுக் கிளையின் பொதுச்செயலாளர் கரு. நாகராஜன், சென்னை உயர்அறங்கூற்று மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்அறங்கூற்றுமன்றம், நீட் தேர்வு பாதிப்புக்கான குழுவை தமிழக அரசு அமைத்தது செல்லும்; வெறும் விளம்பரத்துக்காக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என கூறி கரு. நாகராஜன் மனுவை சென்னை உயர்அறங்கூற்று மன்றம் தள்ளுபடி செய்தது.

இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை அறங்கூற்றுவர் ஏ.கே. ராஜன் குழு சந்தித்தது. இந்த சந்திப்பின் போது தமது குழுவின் அறிக்கையை பதிகை செய்தார் அறங்கூற்றுவர் ஏ.கே. ராஜன். இக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் தமிழக அரசு அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும்.

கடந்த கால திமுக ஆட்சியில் நீட் தேர்வுக்கு விலக்கு பெற்றதை முன்னுதாரணமாக காட்டியே உச்சஅறங்கூற்று மன்றத்தில் வாதாடினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்கிற கருத்தை ஏற்கனவே பொது மேடைகளில் அறங்கூற்றுவர் ஏ.கே. ராஜன் வலியுறுத்தி இருந்தார். இதனால் ஏ.கே. ராஜன் குழுவின் பரிந்துரைகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலினிடன் அறிக்கை பதிகை செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அறங்கூற்றுவர் ஏ.கே. ராஜன், மொத்தம் 165 பக்க அறிக்கையைப் பதிகை செய்திருக்கிறோம். சுமார் 85,000 பேரிடம் கருத்து கேட்டுள்ளோம். பெரும்பாலானோர் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எங்கள் குழுவின் பரிந்துரை விவரங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் விவரிப்பார் என்றார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.