11,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கொசஸ்தலை ஆற்றில் சாம்பல் கழிவுகள் கொட்டப்படுவதாக புகார் தெரிவித்த நடிகர் கமல்ஹாசன் இன்று துறைமுக கழிமுக பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார். செயலலிதாவின் மறைவுக்கு பிறகு ஆட்சியாளர்களின் தவறுகளைக் சுட்டிக்காட்டி வந்த கமல்ஹாசன், அரசியலில் களமிறங்கப் போவதாக கூறிவந்த கமல்ஹாசன், தொடர்ந்து அரசியல் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் நேற்று தனது கீச்சுப் பக்க பதிவில், கொசஸ்தலையாறு சென்னை அருகே இன்னும் முழுவதும் சாக்கடையாகாமல் மீனவர்களின் வாழ்வாதாரமாக உள்ளது. அது கூவம் அடையாற்றைவிட பன்மடங்கு பெரிய ஆறு. அதன் கழிமுகத்தின் 1090 ஏக்கர் நிலத்தை சுற்றுச்சூழல் சிந்தனையில்லா சுயநல ஆக்கிரமிப்பாளர்களால் இழந்து விட்டோம். என்று கூறியருந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை 5 மணியளவில் அந்த பகுதிகளில் நேரடியாக சென்று பார்வையிட்டார் கமல்ஹாசன். எண்ணூர் துறைமுக கழிவுமுகம், சாம்பல் குளம் உள்ளிட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்ட கமல், அப்பகுதி மக்களை சந்தித்தும் பேசி வருகிறார். அப்போது, சாம்பல் கழிவுகள் கொட்டப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடம் கேட்டறிந்தார். மக்கள் பிரச்சினைகளுக்காக சமூக வலைத்தளமான கீச்சுவில் மட்டுமே இதுவரை தனது கருத்துக்களை பதிவிட்டு வந்த கமல்ஹாசன், இன்று முதல் முறையாக களத்தில் இறங்கி மக்களை சந்தித்துள்ளது அரசியல் கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



