Show all

பன்னீரின் தயக்கமும்.. பழனிச்சாமியின் பாய்ச்சலும்!

மூன்று முறை முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் செய்யத் துணியாத செயலை, முதல்முறையாகப் பதவியேற்ற பழனிசாமி செய்துவிட்டார்’ என்று சிலாகித்துப் பேசுகிறார்கள் அ.தி.மு.க-வின் முன்னணியினர்.

     பெரியகுளம் தொகுதியின் வேட்பாளராக 2001-ம் ஆண்டு அறிமுகமாகி,  தேர்தலில் வெற்றியும் பெற்று வருவாய்த் துறை அமைச்சராக செயலலிதாவினால் தமிழகத்துக்கு அறிமுகம் செய்யப்பட்டார் பன்னீர்செல்வம்.   செயலலிதா மீதான வழக்கைச் சுட்டிக்காட்டி அப்போது அவரின் முதல்வர் பதவி பறிக்கபட்டது. இதைச் சற்றும் எதிர்பாராத செயலலிதா, அடுத்து என்ன செய்வது, யாரை பொறுப்புக்கு நியமிப்பது என்ற நீண்ட ஆலோசனையில் ஈடுபட்டார். சசிகலாவின் அக்கா மகனாகவும் அன்றைய அ.தி.மு.க-வின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த டி.டி.வி.தினகரன், “பன்னீர்செல்வம் நமக்கு விசுவாசமாக இருப்பார்” என்று கூற எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாம் தமிகத்தின் முதல்வர்கள் பட்டியலில் பன்னீர்செல்வம் பெயரும் பதிந்தது.

     பயமும், பவ்யமும் கலந்தே முதல்வராகப் பதவியேற்றார் பன்னீர்செல்வம். ஆனாலும், முதல்வரின் அறையை அவர் பயன்படுத்த மறுத்துவிட்டார். அப்போது வருவாய்த் துறை அமைச்சராக அவருக்கு ஒதுக்கப்பட்ட அறையே முதல்வரின் அறையாகவும் செயல்பட்டது.     செயலலிதாவின் உத்தரவு இல்லாமல் எந்த உத்தரவிலும் அவர் கையெழுத்திட்டதில்லை.

‘தனக்குப் பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுக்க வேண்டாம்’ என்றுகூட அப்போது அவர் சொல்லிப்பார்த்தார். பன்னீர்செல்வம் ரப்பர்முத்திரை முதல்வராகத்தான் அப்போது இருந்தார். அதன் பிறகு, செயலலிதாவுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்ததும், தனது பொறுப்பை அவரிடமே வழங்கி, அவருடைய நல்லவர்கள் பட்டியலிலும் இடம்பிடித்தார் பன்னீர்செல்வம்.

     2014-ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, பெங்களூருவில் நடைபெற்ற சொத்துக் குவிப்பு வழக்கில் செயலலிதாவுக்கு எதிராகத் தீர்ப்புவந்து அவர் சிறைசெல்லும் நிலை ஏற்பட்டடதால், அவர் முதல்வர் பதவியை இழக்க வேண்டியதாயிற்று. அப்போது, தமிழகத்தின் நிதித்துறை அமைச்சராக பன்னீர்செல்வம் இருந்தார். இந்தநிலையில், ஆட்சியை அடுத்து யார் எடுத்துச் செலுத்துவது என்ற கேள்வி எழுந்தது. நீதிமன்ற வாயிலில் இருந்த செயலிலதா சற்றும் யோசிக்காமல் பன்னீரை அழைத்து முதல்வராகப் பதவியேற்றுக்கொள்ள உத்தரவிட்டார்.

     பெங்களூருவிலிருந்து சென்னை வந்த பன்னீர்செல்வமும், அமைச்சர் பெருமக்களும் அவசரஅவசரமாக ஆளுநர் மாளிகையில் பதவியேற்றுக்கொண்டார்கள். முதல்வராகப் பன்னீர்செல்வம் பதவியேற்றாலும் முதல்வரின் அறையை அவர் பயன்படுத்த மறுத்துவிட்டு, நிதி அமைச்சரின் அலுவலகத்திலேயே முதல்வராக அவர் தொடர்ந்தார்.

     செயலலிதா அறிமுகம் செய்த எந்தத் திட்டத்தையும் அவர் தொடங்கிவைக்க மறுத்துவிட்டார். நடப்பு விவகாரங்களுக்கு  ஒப்புதல் வழங்கியே மாதங்களைக் கடத்தினார். எதிர்க்கட்சிகள், முதல்வரின் செயல்பாடுகள் குறித்து விமர்சனம் செய்தாலும் அதைக் காதில்போட்டுக் கொள்ளாமல் செயலலிதாவுக்கு விசுவாசமாகவே நடந்துகொண்டார். அப்போது தமிழகத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட அம்மா உணவகங்கள் கட்டப்பட்டுத்  திறப்பு விழாவை நோக்கி, முதல்வரின் உத்தரவுக்காகக் காத்திருந்தன. ஆனால், ‘அம்மா வரட்டும்’ என்று அனைத்து அம்மா உணவகங்களையும் மூடியே வைத்திருந்தனர். முதல்வரின் அறையும் மூடப்பட்டு இருந்தது.

     வழக்கில் இருந்து விடுதலையாகி செயலலிதா மீண்டும் முதல்வராகப் பதவியேற்றபோதுதான் அந்த முதல்வர் அலுவலகம் பயன்பாட்டுக்கு வந்தது. அதேபோல் 2016-ம் ஆண்டு செயலலிதாவின் மரணத்தைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக முதல்வர் வாய்ப்பு பன்னீருக்கு வந்தது. இரண்டு முறை முதல்வராக  இருந்தபோதாவது, செயலலிதா இருக்கிறார் என்ற பயத்தில் அவருடைய முதல்வர் அலுவலகத்தைப் பயன்படுத்தாமல் தவிர்த்தார். ஆனால், இந்த முறை முதல்வரின் அலுவலகத்தை பன்னீர்செல்வம் பயன்படுத்துவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், நிதி அமைச்சரின் அலுவலகத்தின் வாயிலில் முதல்வர் என்ற பெயர் பலகை மட்டும் மாட்டப்பட்டு முதல்வர் அலுவலகம் பன்னீரின் நிதி அமைச்சர் அலுவலகத்திலேயே செயல்படத் தொடங்கியது.

     அ.தி.மு.க-வின் தேர்தல் வாக்குறுதிகளைக்கூடச் செயல்படுத்தாமல் தமிழகத்தின் பிரதான பிரச்னைகள் குறித்து மட்டுமே கவனம் செலுத்திவந்தார். “முதல்வர் அலுவலகத்தைப் பயன்படுத்துங்கள் என்று தோட்டத்தில் இருந்து உத்தரவு வரும் என்று எதிர்பார்த்திருந்தார். ஆனால், உங்களின் முதல்வர் பதவியே நிரந்தரமானதல்ல என்று சொல்லாமல் சொல்லிவந்தனர் தோட்டத்துத் தரப்பினர். அதனால் முதல்வர் அலுவலகம் மீது அவர் ஆர்வம் காட்டாமல் இருந்துவந்தார். “முதல்வர் அலுவலகத்துக்கு மாறுவீர்களா’’ என்று கேட்டதற்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார். ஆனால் சசிகலாவுக்கு எதிராக இவர் போர்க்கொடி தூக்கியதும் அவருடைய முதல்வர் பதவி பறிபோய் புதிய முதல்வராக தமிழகத்தின் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். பதவியேற்றதும், சட்டபேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி அதில் வெற்றிபெற்றதும் உற்சாகமானார் பழனிசாமி.

     பன்னீர்செல்வத்தை முந்திட வேண்டும் என்ற நோக்கத்தோடு காய் நகர்த்தத் தொடங்கினார். அ.தி.மு.க-வின் இப்போதைய  அதிகார சக்தியாக இருக்கும் தினகரனைச் சந்தித்துப் பேசினார்.

“நம்மீது மக்களிடம் இப்போது அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அதைச் சரி செய்யவேண்டும் என்றால், உடனடியாக நாம் கவர்ச்சியான திட்டங்களை அறிவித்தால் மட்டுமே முடியும். அம்மாவினால் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட அறிவிப்புகளை நான் பதவியேற்றதும் அறிவித்தால் நம் மீதான நிழல் மாறும். கொஞ்ச நாள்களில் மக்களின் மனநிலை மாறியதும் நீங்கள் ஆட்சியைப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று சொன்னதும்,

     தினகரன் தரப்பு அதற்கு சரி சொல்லி... “உங்களுக்கு அனைத்து உரிமையும் உள்ளது. நீங்கள் எங்களுக்கு விசுவாசமாக இருந்தால் போதும்’’ என்று மட்டும் சொல்லப்பட்டது.

     உற்சாகமான பழனிசாமி, தனது செயலாளர்களை அழைத்து... “முதல்வரின் அறையை அணியப்படுத்துங்கள்;” என்று சொன்னதும் ஆச்சர்யபட்டனர் அதிகாரிகள். அவசரமாக முதல்வர் அறை அணியமானதும், திங்கள்கிழமை அன்று நண்பகலில் முதல்வர் அறைக்குள் கால் வைத்தார். அங்கிருந்த செயலலிதாவின் படத்துக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, செயலலிதா எந்த இருக்கையில் அமர்ந்தாரோ, அதிலேயே அவர் அமர்ந்து முதல்வராகப் பதவியேற்றுக்கொண்டார். அவர், பதவியேற்றபோது தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கைதட்டி வாழ்த்துகள் தெரிவித்தார். முதல்வர் அறையின் வாயிலிலும், முதல்வர் பழனிசாமி என்று மாற்றப்பட்டது. ஆறு மாதங்களாக மூடிக்கிடந்த அறையில் அமர்ந்து செயலலிதா அறிவித்த,

ஐந்து திட்டங்களின் செயல்பாட்டுக்கான ஆணை’யிலும் கையெழுத்திட்டுள்ளார்.

 

     “பன்னீரால் முடியாமல் போனது பழனிசாமியால் முடியும்” என்று பன்னீர் தரப்பை கடுப்பேற்றத்தான்... இப்படி ஓர் ஏற்பாடு நடைபெற்றது என தலைமைச் செயலகத்தில் உள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பன்னீர் பயந்தார்,.. பழனிசாமி பாய்ந்துள்ளார்.

எது எப்படியோ! மககளுக்கு நன்மை நடந்தால் சரி.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.