நடுவண், மாநில
அரசுகளின் வேண்டுகோளை ஏற்று நெடுவாசலில் நடந்து வந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது
என்று போராட்டக் குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன்
திட்டத்திற்கு நடுவண் அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை எதிர்த்து கடந்த 22 நாட்களாக
நெடுவாசலில் இரவு பகலாக போராட்டம் நடைபெற்று வந்தது. இந்தத் திட்டத்தை முற்றிலும் கைவிடும்வரை
போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று தெரிவித்து வந்தனர். இந்தப் போராட்டத்தில் நெடுவாசலைச் சுற்றியுள்ள
கிராம மக்களும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், விவசாய அமைப்பினரும், பெண்களும்
கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனர். இதனிடையே நடுவண் அரசு சார்பில் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்
நேற்று நெடுவாசல் சென்று போராட்டக்குழுவினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினார். அதேபோல்
தமிழக அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதனையடுத்து மக்கள் விருப்பத்திற்கு மாறாக ஹைட்ரோ
கார்பன் திட்டம் செயல்படுத்தப் பட மாட்டாது என்று நடுவண் மாநில அரசுகள் தெரிவித்ததையடுத்தை
ஏற்று நெடுவாசல் போராட்டம் தற்காலிகமாக திரும்பப் பெறப்பட்டுள்ளது. மேலும் போராட்டக்களம்
அருகே அரசு பள்ளியில் பொதுத்தேர்வு நடப்பதாலும், கோரிக்கை நிறைவேறா விட்டால் போராட்டம் மீண்டும்
தொடங்கும் என்ற எச்சரிப்புடன் தற்காலிகமாக திரும்பப் பெறப்பட்டுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



