29,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து, மோடிக்கு கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ராணுவத்தின் வலிமையை, ராணுவத் தளவாட உற்பத்தியில் இந்தியாவின் வலிமையை காட்டுவதற்கு நடந்த கண்காட்சியை மொத்தமாக மறக்கும் அளவுக்கு இந்தப் போராட்டம் வானளவ உயர்ந்து விட்டது. நடுவண், மாநில அரசுகளை அதிர வைத்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து, தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. சாலை மறியல், தொடர்வண்டி மறியல் என, பல்வேறு கட்சிகள், அமைப்புகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. செவ்வாய் அன்று சென்னையில் ஐபிஎல் போட்டி நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை அண்ணாசாலையில் நடந்த புரட்சி போராட்டம் நாடு முழுவதும் பேசப்பட்டது. அதையடுத்து சென்னையில் நடப்பதாக இருந்த அனைத்து ஐபிஎல் போட்டிகளும் புனேவுக்கு மாற்றப்பட்டுள்ளன. இந்த நிலையில், சென்னை அடுத்துள்ள திருவிடந்தையில் ராணுவக் கண்காட்சி தொடக்க விழா, அடையாறு புற்றுநோய் மருத்துவமனை வைர விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக தலைமை அமைச்சர் நரேந்திர மோடி சென்னை வந்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து, மோடியின் வருகையின் போது கறுப்புக் கொடி போராட்டம் நடத்தப்படும் என பல்வேறு கட்சிகள், அமைப்புகள் கூறியிருந்தன. அதன்படி சென்னையில் காலை முதலே பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக ஜிஎஸ்டி சாலை முடங்கியது. விமான நிலையம் அருகில், வரலாற்றில் முதன் முறையாக கறுப்பு பலூன்களை பறக்க விட்டும் போராட்டங்கள் நடக்கின்றன. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பல்வேறு அமைப்புகள் சார்பில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகின்றன. இதற்கிடையில் திருவிடந்தையில், ராணுவக் கண்காட்சியை மோடி தொடங்;கி வைத்தார். இந்தியாவின் ராணுவ தேவைகள் பற்றி மட்டும் விவாதிப்பதற்காக அல்லாமல் முதன் முறையாக முற்றிலும் இந்தியாவிலேயே உற்பத்தியாகும் ராணுவ பொருட்கள் பற்றி தெரியப்படுத்தவும் இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது. ஆனால், தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களும், முகநூல், புலனம்;, கீச்சு என்று எந்த சமூகதளமாக இருந்தாலும், ராணுவக் கண்காட்சியைவிட, கறுப்புக் கொடி போராட்டம் மற்றும் இன்ன பிற மோடி எதிர்ப்பு போராட்டமே விஸ்வரூபம் எடுத்துக் காணப்படுகிறது. மோடி வெளியேறு என்ற கிச்சுப் பதிவு உலக அளவில் முதன்மை பெற்றது இந்திய வரலாற்றில் முத்திரைப் பதிவாகும். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,755.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



