Show all

தமிழாய் வாழ்ந்த சான்றோர் பெருந்தகை ம.கோ.இராமச்சந்திரன் பிறந்தநாள்!

03,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழ்த் திரைப்பட நடிகராகவும், இறக்கும் வரை தமிழ்நாட்டின் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராகவும் இருந்து, எம்ஜிஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, ம.கோ.இராமச்சந்திரன் அவர்களின் பிறந்தநாளை உலகத் தமிழர்கள், இன்று காணும் பொங்கலோடு, மேலும் ஒரு விழாவாக கொண்டாடி மகிழ்கின்றனர்.

ம.கோ.இராமச்சந்திரன் இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டியில் மருதூர் கோபாலமேனனுக்கும் சத்தியபாமாவுக்கும் மகனாக நாளது  03,தை,தமிழ்தொடர்ஆண்டு-5018 (17.01.1917) அன்று பிறந்தார்கள்.

நாடகத்துறையில் நன்கு அனுபவமான நிலைமையில் திரைப்படத்துறைக்கு வந்தார். திரைப்படத்துறையில் தனது அயரா உழைப்புக் காரணமாக முன்னேறி முதன்மை நடிகரானார். இவரது நடிப்பு பெரும் எண்ணிகையிலான மக்களைக் கவர்ந்தது. எம்.ஜி.ஆர். திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளருமாவார். எம்.ஜி.ஆர் எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்கவைத்தார். அதில் முதன்மையான இரண்டு பேர், அரசியலைக் கலக்கிய துரைமுருகன் மற்றும் திரைத்துறையில் வலம் வந்த கோவை சரளா என்று ஆனந்த விகடன் இதழ் குறிப்பிட்டுள்ளது.

எம்.ஜி.ஆர் ராஜா-ராணி என்ற பெயர்களுடைய இரண்டு சிங்கங்களை வளர்த்தார். ராணி சிங்கம் இறந்துவிட ராஜா சிங்கமும் உடல் தளர்ந்திருந்தது. அது தனியாக இருக்க வேண்டாமென வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு அளித்தார். நெடுநாட்கள் வாழ்ந்த ராஜா மறைந்த போது, அதன் உடலைத் தகுந்த ஆவணத்துடன் பெற்று, பாடம் செய்து தன் தி.நகர் வீட்டில் வைத்துக் கொண்டார்.

சிங்கங்களைத் தவிர எம்.ஜி.ஆர் தனது வீடு அமைந்திருந்த ராமாவரம் தோட்டத்தில் ஆடு, மாடு, கோழி, நாயுடன் ஒரு கரடியும் வளர்த்தார். இவற்றைக் கவனிக்க தனி மருத்துவரைப் பணியமர்த்தியிருந்தார்.

அவர் நடித்த ராஜகுமாரி படம் வெளிவரும்வரை அதிகம் புகழ் கிடைக்கவில்லை. தொடர்ந்து வந்த அடுத்த 25 ஆண்டுகள், தமிழ் திரைப்பட உலகில் உச்சாணிக் கொம்பில்  வைத்துப் போற்றப் பட்டார். இவருடைய சக நடிகர்களுள் ஒருவரான எம். ஆர். ராதாவினால் சுடப்பட்டுத் தெளிவாகப் பேசும் திறனை இழந்தபோதும் அவருடைய திரைத்துறை வலிமை குறையவேயில்லை.

அவர் நடித்துக் கடைசியாக வெளி வந்த திரைப்படம் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் ஆகும். தனது திரைப்பட நிறுவனத்தின் கீழ் எம்.ஜி.ஆர். மூன்று படங்களைத் தயாரித்தார்: நாடோடி மன்னன், அடிமைப் பெண் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன். நாடோடி மன்னன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய திரைப்படங்களை அவரே இயக்கினார்.

திரைப்படங்களின் மூலம் அவரடைந்த புகழும், அவருடைய அழகான தோற்றமும், சமூகத் தொண்டனாகவும், ஏழைகள் தோழனாகவும், கொடையாளியாகவும், வீரனாகவும் நடித்ததன் மூலம் பெற்றுக் கொண்ட நற்பெயரும், அவர் மிக விரைவில் மக்களாதரவைப் பெற உதவின. 

சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்றுத் தமிழ் நாட்டின் முதலமைச்சரானார். கடுமையாக நோய்வாய்ப்பட்டும், தமிழக அரசியல் வரலாற்றில் தேர்தல் கருத்துப் பரப்புதலுக்கே வராமல் முதலமைச்சர் ஆன ஒரே முதல்வர் எம்.ஜி.ஆர். இவரது ஆட்சிக்காலத்தில் மதுவிலக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சர் பதவியை வகித்துப் பதவியிலிருக்கும் போதே காலமானார். மறைவிற்குப் பின் அவருக்குப் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

சத்துணவுத் திட்டம்

விதவை ஆதரவற்ற பெண்களுக்குத் திருமண உதவி

தாலிக்கு தங்கம் வழங்குதல்

மகளிருக்கு சேவை நிலையங்கள்

பணிபுரியும் பெண்களுக்குத் தங்கும் விடுதிகள்

தாய் சேய் நல இல்லங்கள்

இலவச சீருடை வழங்குதல் திட்டம்

இலவச காலணி வழங்குதல் திட்டம்

இலவச பற்பொடி வழங்குதல் திட்டம்

இலவச பாடநூல் வழங்குதல் திட்டம்

ஆட்சிகாலத்தில் எம்ஜியார் அவர்கள் திட்டங்கள்.

தமிழ் மொழிக்கு எனத் தனியே ஒரு தமிழ்ப் பல்கலைக் கழகம் வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிய உமாமகேசுவரனார் பிறந்த தஞ்சையில், தீர்மானம் இட்ட அறுபது ஆண்டுகள் கழித்து தமிழ்ப் பல்கலைக் கழகத்தை நிறுவினார் எம்.ஜி.ஆர். 

தமிழ்மொழி, தமிழர்களின் கலை, இசை, நாடகம், ஓவியம், சிற்பம், கட்டிடக் கலை, தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம், மொழியியல், வரலாறு, புவியியல், மெய்யியல், கடலியல், சித்த மருத்துவம், கைவினைக் கலை, உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழை மேம்படுத்த, தமிழர்களின் மரபுப் பெருமையைப் பரப்ப, முதலமைச்சராகயிருந்த திரு.எம்.ஜி. இராமச்சந்திரன் முன் முயற்சியில் தமிழக அரசால் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் உருவாக்கப்பட்டது.

இலங்கையில் இருக்கும் கண்டியில் பிறந்தமையால் தமிழ் ஈழம் குறித்தான ஆர்வமும், செயல்பாடுகளும் எம்.ஜி.ஆரிடம் அதிகம் காணப்பட்டன. ஈழத்திற்காக வெளிப்படையான ஆதரவினை எம்.ஜி.ஆர் தமிழக முதலமைச்சராக இருக்கும் போது தந்தார்.

ஈழப்போராட்டம் தீவிரமடைந்த போது அதற்கு ஆதரவளித்தார் எம்.ஜி.ஆர். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தலைமையில் தமிழர்களுக்கென்று தனி நாடு அமைய வேண்டுமென்றும் அவர் விரும்பினார் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார். பிரபாகரனின் தலைமையிலான புலிகளின் போராட்டத்துக்குத் தேவையான ஆயுதங்கள் வாங்க ரூ.7 கோடி சொந்தப் பணத்தை தந்தார் என நெடுமாறன் கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கும் பிரபாகரனுக்கும் வெளிப்படையான ஆதரவு அளித்தார் எம்.ஜி.ஆர். ஆயுதம் வாங்கி இலங்கை கொண்டு சென்று தமிழ்மக்களை காப்பாற்ற, முதலில் இரண்டு கோடி ரூபாயை தந்தார். அந்த உதவி இல்லையென்றால் இந்தளவிற்கு இயக்கம் வளர்ந்திருக்க இயலாது என்று பிரபாகரன் பேட்டியில் கூறியிருக்கிறார். மேலும் எம்.ஜி.ஆரை அண்ணன் என்றே அழைத்ததாகவும் கூறியிருக்கிறார். நடுவண் அரசு விடுதலை புலிகளுக்கு நெருக்கடி கொடுத்த காலக்கட்டத்திலும், பெரிய தொகையைக் கொடுத்து உதவி செய்தார். நடுவண் அரசு எடுக்கும் நடவடிக்கைக்கும் தனக்கும் தொடர்பில்லை என்றே எம்.ஜி.ஆர் தன் நிலையை பற்றிப் பிரபாகரனிடம் கூறியுள்ளார்.

எம்.ஜி.ஆர் உயிர் பிரிவதற்கு ஒரு கிழமை முன்புகூட ரூ. 40 லட்சம் வரை புலிகளுக்கு உதவியாக வழங்கியதாகப் பிரபாகரனே கூறியுள்ளார். எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பிரபாகரன் வெளியிட்ட இரங்கல் செய்தியில் 'தமிழீழ மக்கள் சுதந்திரமாக வாழவேண்டுமென விரும்பிய மாண்புமிகு முதலமைச்சர் எம்.ஜி.ஆர், அவர்களுக்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் கண்ணீர் அஞ்சலி செலுத்துகின்றனர்' என்று கூறியுள்ளார.

முன்னாள் தமிழக முதல்வர் தெய்வத்திரு எம்.ஜி.ஆர். போன்று ஈழத்தமிழர்களுக்கு உதவி செய்தவர்கள் யாருமில்லை. அவர் மட்டும் மேலும் 10 ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் ஈழத்தமிழர்களுக்குத் தனி நாடு கிடைத்திருக்கும். அது நடக்காததுதான் வரலாற்றுத் துயரம் என்று இயக்குனரும் நாம் தமிழர் கட்சி தலைவருமான சீமான் சென்னையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியபோது தெரிவித்தார்.

எம்.ஜி.ஆர் தனது திரைச்சேவைக்காகவும், பொதுச்சேவைக்காகவும் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். அவைகளில் குறிப்பிடத்தக்க சில மட்டும்.

பாரத் விருது - இந்திய அரசு

அண்ணா விருது - தமிழ்நாடு அரசு

பாரத ரத்னா விருது - இந்திய அரசு

பத்மசிறீ விருது - இந்திய அரசு (ஏற்க மறுப்பு)

சிறப்பு முனைவர் பட்டம் - அரிசோனா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் (ஏற்க மறுப்பு), சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக முனைவர் பட்டங்கள்.

எம்ஜியார் அவர்களை நமது வாழ்க்கையின் முன்னோடியாக கொண்டு நாமும் உயர வாழ்த்துக்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,035.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.