17,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழகத்தை பாலைவனமாக்க நடுவண் அரசு முயற்சிக்கிறது என விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு குற்றம்சாட்டியுள்ளார். அடுத்த புதன் முதல் மெரினாவில் உண்ணாநிலை போராட்டம் நடந்தே தீரும் என்றும் அய்யாக்கண்ணு திட்டவட்டமாக அறிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, சென்னை மெரினாவில் அய்யாக்கண்ணுவுக்கு ஒரு நாள் உண்ணாநிலை இருக்க தனி அறங்கூற்றுவர் அளித்த அனுமதிக்கு உயர்அறங்கூற்றுமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இந்நிலையில் இதுதொடர்பாக உச்சஅறங்கூற்றுமன்றத்தில் முறையீடு செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த நிலையில் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு தமிழகத்தை பாலைவனமாக்க நடுவண் அரசு முயற்சிக்கிறது. தங்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினாலும் சரி, ராணுவமே வந்தாலும் சரி, செத்தாலும் சாவோமே தவிர யாருக்கும் அஞ்ச மாட்டோம் என்றார். மெரினாவில் போராட்டம் நடத்த அனைத்து தரப்பினரும் ஆதரவு தர தயாராக உள்ளதாகவும் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார். காவல்துறை அனுமதி அளிக்காவிட்டாலும் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட போவதாக அய்யாக்கண்ணு உறுதிபட தெரிவித்தார். மேலும் தமிழக முதல்வரை மோடி மதிப்பதில்லை என்று அய்யாக்கண்ணு கூறியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உச்சஅறங்கூற்றுமன்றத் தீர்ப்பு. ஆனால் உச்சஅறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டும் நடுவண் அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுத்து வருகிறது என அய்யாக்கண்ணு பேட்டியளித்துள்ளார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,773.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.