தினகரன் தரப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் அதிமுகவிலேயே நீடிப்பதால், தன்னால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க முடியாது என்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் மறுத்துவிட்டதால் தமிழக அரசியல் கட்சிகள் டெல்லியை நோக்கி படையெடுக்கவுள்ளனர். சசிகலாவின் நேரடி தலையீட்டுக்குப் பிறகு பிரிந்த அதிமுகவின் பன்னீர் செல்வம் அணியைத் தற்போது இணைத்துக் கொண்டது சசிகலாவால் முன்மொழியப் பட்ட எடப்பாடி அணி. இதைத் தொடர்ந்து பன்னீர்செல்வம் அணிக்கு துணை முதல்வர் பதவியும், அமைச்சரவையில் இடமும் கிடைத்தன. பன்னீர்செல்வம் அணியின் நிபந்தனைகளில் ஒன்றான சசிகலாவின் தலைமையை விலக்கிக் கொள்வது என்ற நிலையை எளிதாக கையாள முடியும் என்று நினைத்தது தான் தவறாகிப் போனது. சசிகலா தலைமையில் இருந்து கொண்டே ஆட்சியைப் பிடித்து விட்டதால் சசிகலா தலைமையை விலக்கிக் கொள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும ஒத்துழைப்பார்கள் என்று நினைத்தது தான் தவறாகிப் போனது. சசிகலாவை நீக்கும் நடவடிக்கைக்கு எடப்பாடி- பன்னீர் அணிகள் நடவடிக்கையில் இறங்கியதால் தினகரன், சசிகலா தலைமையை விலக்கிக் கொள்ள விரும்பாத சட்டமன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைத்து, ஆளுநரை சந்தித்துத் தனித் தனியாக கடிதம் கொடுத்து முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என்று தெரிவித்ததால் சிக்கல் அதிகரித்தது. தினகரன் தரப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநரை கடந்த வாரம் சந்தித்து முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என்றும் அவருக்கு கொடுத்த ஆதரவை திரும்பப் பெறுகிறோம் என்றும் முதல்வரை மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். 19 சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு ஆதரவாக இல்லாத காரணத்தால் சட்டப்படி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது. இதையடுத்து திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆளுநரை சந்தித்தனர். சட்டமன்றத்தை கூட்டி எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரினர். ஆனால் 8 நாட்கள் கழித்தும் ஆளுநர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளான திருமாவளவன், முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன், ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் சந்தித்து இதே கோரிக்கை வலியுறுத்தினர். ஆனால் அதிமுகவின் 19 சட்டமன்ற உறுப்பினர்களும் வேறு கட்சிக்கு போகவில்லை. மேலும் முதல்வரை மாற்ற வேண்டும் என்பது மட்டுமே அவர்களது கோரிக்கையாக உள்ளதால் எடப்பாடி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாக அறிவிக்க இயலாது. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இரு பிரிவுகளாக பிரிந்து விட்டதால் அது அவர்களின் உள்கட்சி பிரச்சினையாகிவிட்டது. இதில் நான் தலையிட முடியாது என்று ஆளுநர் கைவிரித்துவிட்டார். இன்று ஆளுநர் தங்களை அழைத்து தாங்கள் கொடுத்த கோரிக்கைக்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் நாளை குடியரசுத் தலைவரிடம் முறையிடுவோம் என்று தினகரன் தரப்பு சட்டமன்ற உறுப்பினர் தங்கதமிழ் செல்வன் கூறியிருந்தார். அதே நேரம் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த கோரி திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், சிபிஎம் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் நாளை டெல்லி செல்லவுள்ளனர். தற்போது ஆளுநர் தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக தெரிவித்துவிட்டதால் தினகரன் அணியும் நாளை குடியரசுத் தலைவரைச் சந்திக்க டெல்லிக்கு புறப்படும். அதிமுக அரசு கலையாமல், பன்னீர் செல்வம் சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதி இழப்பு செய்து விட்டு எடப்பாடி அரசு சசிகலா அணியாகவே ஆட்சியைத் தொடர வேண்டும் எனக் கருதும் தினகரன் அணி- அதிமுக ஆட்சியைக் கலைத்து விட்டு தேர்தல் நடத்துவதற்கு சரியான தருணம் என்று கருதும் திமுகவோடு இணைந்த எதிர்கட்சி அணி- சசிகலாவை (வீரபாண்டிய கட்டபொம்மன்) மட்டும் சிறைப் பறவை ஆக்கி விட்டு எட்டப்பர் பன்னீர் செல்வத்தோடு, சசிகலாவின் படைபலத்தை எட்டப்பர் அணியாக ஒருங்கிணைத்து அதிமுகவை பாஜகவின் பினாமி அரசாக நான்காண்டுகளுக்கு ஆளவிடலாம் என்று கருதியிருக்கிற பாஜக- பாஜக அரசின் குடியரசுத்தலைவர் என்ன செய்யப் போகிறார் பொறுத்திருந்து பார்ப்போம்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



