11,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சுமார் 12 பேர் அமராவதி ஆற்றில் தூர் வாரும் பணியில் நேற்று ஈடுபட்டனர். புதிய மற்றும் பழைய ஆற்றுப்பாலங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் பொக்லைன் இயந்திரம் கொண்டு இந்த வேலையில் இறங்கினர். அங்கு ஏராளமான குப்பைகளுடன் நிறைய வேலிமுள் மரங்களும் இருந்தன. அதனால் எல்லாவற்றையுமே 12 பேரும் அகற்றிக் கொண்டே வந்தனர். இந்தத் தகவல் அறிந்து பொதுப்பணி, வருவாய்த்துறை உள்ளிட்ட அதிகாரிகள் ஆற்றுப் பகுதிக்கே வந்துவிட்டனர். அனுமதி இல்லாமல், ஆற்றில் தூர் வாரும் பணியில் ஈடுபடக் கூடாது எனத் தடுத்தனர். இந்த தகவல் புகாராக அளிக்கப்பட்டு, கரூர் நகர காவல்துறையினர் வந்துவிட்டார்கள். அனுமதியின்றி தூர் வாரிக் கொண்டிருந்த 12 நாம் தமிழர் கட்சியினரையும் கைது செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது. ஆனால் கைது செய்யப்பட்டவர்கள் கூறும் போது, இப்படி ஆற்றில் தூர் வாரி, தூய்மைப்படுத்த மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டோம். ஆனால் எங்களுக்கு உரிய பதில் இல்லாததால் நாங்களே இப்படி தூர் வார வந்துவிட்டோம் என்றனர். கைது செய்யப்பட்ட 12 பேரும் குற்றவியல் அறங்கூற்று மன்றம் 2-ல் அணியப் படுத்தப் பட்டனர். அப்போது அறங்கூற்றுவர், இவர்கள் ஆற்றை தூய்மைப்படுத்தும் பணியில்தானே ஈடுபட்டனர்? இது ஒரு சமூக சேவைதானே அதனால், அவர்களை கைது செய்ய வேண்டிய தேவையில்லை. இப்படியெல்லாம் கைது நடவடிக்கையில் ஈடுபட்டு, இளைஞர்கள் சமூக சேவையில் ஈடுபட வருவதற்கு தடை ஏற்படுத்தக் கூடாது என்று காவல்துறையினரைக் கண்டித்தார். அதோடு கைது அனுமதி மனுவையும் தள்ளுபடி செய்து 12 பேரையும் விடுவித்து உத்தரவிட்டார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,892.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



