ஈசா யோக மையம்
நடத்தி வரும் ஜக்கி வாசுதேவுக்கு எதிராக பல்வேறு வழக்குகள் உள்ளதால் அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ள
பத்ம விபூஷண் விருதை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
தொடுக்கப்பட்டுள்ளது. கோவை அருகே வெள்ளியங்கிரி மலையில் ஈசா யோக மையம்
நடத்திவரும் ஜக்கி வாசுதேவுக்கு அவர் ஆன்மிகத் துறையில் ஆற்றிய பணிகளுக்காகப் பத்ம
விபூஷண் விருது வழங்குவதாக நடுவண் அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் ஜக்கி வாசுதேவுக்கு
அறிவிக்கப்பட்டுள்ள பத்ம விபூஷண் விருதை ரத்து செய்யக் கோரி வெற்றிச்செல்வன் என்பவர்
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். அவர் தனது மனுவில், ஜக்கி வாசுதேவ், வனப்பாதுகாப்புச்
சட்டத்தை மீறி ஒன்றே கால் லட்சம் சதுர மீட்டர் பரப்புள்ள காட்டுப்பகுதியை ஆக்கிரமித்துக்
கட்டடங்கள் கட்டியதைக் குறிப்பிட்டுச் சட்டத்தை மதிக்காத அவருக்கு விருது வழங்கக் கூடாது
என தெரிவித்துள்ளார். அதேபோல் ஜக்கி வாசுதேவ் மீது, அவரது மனைவியைக்
கொன்ற வழக்கு நிலுவையில் உள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விவரங்கள் அடங்கிய
கடிதத்தை நடுவண் அரசுக்கு அனுப்பியுள்ளதாகவும், அதன்மீது விரைந்து நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். உயர்நீதிமன்றப் பொறுப்புத் தலைமை நீதிபதி குலுவாடி
ரமேஷ், நீதிபதி கல்யாண சுந்தரம் ஆகியோர் கொண்ட அமர்வு, இந்த மனுவை விசாரித்தது. அப்போது
மனுதாரர் அனுப்பிய கடிதத்தின் மீது நடுவண் அரசு எடுக்கும் நடவடிக்கையைப் பொறுத்து இந்த
வழக்கை விசாரிப்பதாகக் கூறி, விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



