Show all

கச்சத்தீவையும், தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமையையும் மீட்க ரோசய்யா வலியுறுத்தல்

கச்சத்தீவையும், தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமையையும் மீட்க இலங்கை அரசுடன் இணைந்து நடுவண் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சட்டசபையில் ஆளுநர் ரோசய்யா பேசினார்.

     இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரின் இறுதிக்கட்டத்தில் நடந்த போர்க்குற்றங்கள் மற்றும் இனப் படுகொலைக்குக் காரணமானவர்களைப் பொறுப்பாக்காமல் நல்லிணக்கம் குறித்த சர்வதேச தீர்மானங்களையும், உணர்வுகளையும் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வரும் இலங்கை அரசின் போக்கினைக் கண்டு உலகெங்கிலும் உள்ள தமிழினம் வெகுண்டெழுந்துள்ளது.

 

இதைத் தணிக்கும் விதமாக, அன்றைய இலங்கை அரசு புரிந்த போர்க்குற்றங்கள், ஜெனிவா ஒப்பந்த விதிமீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டுமென ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையத்தில் தீர்மானத்தை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கும்படி நடுவண் அரசை வலியுறுத்தி, இந்த மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

     இலங்கை தமிழர்கள் மீது இத்தகைய கடுங்குற்றங்களைப் புரிந்தவர்கள் உரிய நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்பட்டு நீதியை நிலைநாட்டிட வேண்டுமென்று இன்றைய இலங்கை அரசை நடுவண் அரசு தொடர்ந்து வற்புறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

 

இந்த மாமன்றத்தில் இதுகுறித்து நிறைவேற்றப்பட்ட பல்வேறு தீர்மானங்களை நடுவண் அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு, தமிழர்களுக்கு அவர்களின் நிலங்களைத் திரும்ப அளித்து அவர்கள் சம வாழ்வுரிமையுடன் கண்ணியமாகவும், அமைதியாகவும் வாழ ஒரு வாய்ப்பையும் ஏற்படுத்தித்தர வேண்டுமென இலங்கை அரசை வற்புறுத்த வேண்டும்.

 

     பாக் நீரிணைப்புப் பகுதியின் பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களைத் தொடர்ந்து கைது செய்து, அவர்களின் படகுகளைச் சிறைப்பிடிக்கும் இலங்கை கடற்படையினரின் செயல்கள் கடும் கண்டனத்திற்குரியவை. இந்த மீனவர்கள் விடுதலையான பின்னரும் சிறைப்பிடிக்கப்பட்ட படகுகளை விட மறுக்கும் இலங்கையின் போக்கு, பாதிக்கப்பட்ட தமிழக மீனவர்களுக்கு முடிவில்லாத் துயரத்தை ஏற்படுத்தி வருகிறது.

 

எனவே, கச்சத்தீவை மீட்டு, நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை மீண்டும் நிலைநாட்டி இப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வைக் காணவேண்டும். இப்பிரச்சினையின் முக்கியத்துவத்தினை கருத்தில் கொண்டு வெகு விரைவில் ஒரு இணக்கமான நிரந்தரத் தீர்வை எட்ட நடுவண் அரசும், இலங்கை அரசும் இணைந்து முயற்சி செய்யும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.