21,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னை ஆயுதப்படையில் காவலராகப் பணியாற்றியவர் அருண்ராஜ் அகவை25. இவர் சென்னையில் உள்ள மறைந்த முதல்- அமைச்சர் செயலலிதாவின் சமாதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். முறைப்பணியில் 4 மணி நேரம் இவர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார். அதனடிப்படையில் நேற்று அதிகாலை 2 மணியில் இருந்து காலை 6 மணி வரை இவருக்கு பாதுகாப்பு பணி ஒதுக்கப்பட்டு இருந்தது. அவரும் பாதுகாப்பு பணியில் துப்பாக்கியுடன் ஈடுபட்டு இருந்தார். அவரோடு மேலும் 3 காவலர்களும் துப்பாக்கியோடு பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். பாதுகாப்பு பணியில் இருந்த அருண்ராஜ் செயலலிதா சமாதி உள்ள இடத்தில் துப்பாக்கியோடு நின்றிருந்தார். மற்ற காவலர்கள் 3 பேர் சமாதிக்கு வெளியே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். திடீரென்று நேற்று அதிகாலை 5 மணியளவில் ஒருமுறை துப்பாக்கியால் சுடும் சத்தம் செயலலிதாவின் சமாதி அருகில் இருந்து கேட்டது. ஏதோ விபரீதம் நிகழ்ந்துவிட்டது என்று பதற்றத்தோடு வெளியில் பாதுகாப்பு பணியை மேற்கொண்டிருந்த 3 காவலர்களும் துப்பாக்கியால் சுட்ட சத்தம் கேட்ட பகுதியை நோக்கி ஓடினார்கள். அங்கே கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது. அங்கே காவலர் அருண்ராஜ் ரத்த வௌ;ளத்தில் பிணமாக கிடந்தார். அவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. முகத்தில் தாடைக்கு கீழே துப்பாக்கியை நேராக பிடித்து சுட்டு இருக்கிறார். துப்பாக்கி குண்டு அவரது தலையைச் சிதறடித்து பாய்ந்து வெளியே சென்று இருந்தது. அவர் பயன்படுத்திய துப்பாக்கி 303 ரக துப்பாக்கி ஆகும். 10 குண்டுகள் நிரப்பப்பட்டிருந்த அந்தத் துப்பாக்கியில் ஒரேயொரு குண்டு மட்டும் சுடப்பட்டு இருந்தது. நடந்த சம்பவம் குறித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மற்ற 3 காவலர்களும்; உயர் காவல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், கூடுதல் ஆணையர் சாரங்கன், இணை ஆணையர் அன்பு, துணை ஆணையர் பர்வேஸ்குமார், உதவி ஆணையர் ஆரோக்கிய பிரகாசம் ஆகியோர் துப்பாக்கி சூடு நடந்த செயலலிதாவின் சமாதிக்கு விரைந்து சென்றனர். நடந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டார்கள். தடய அறிவியல் நிபுணர்களும் சம்பவம் இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். காவலரின் உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டை தடய அறிவியல் நிபுணர்கள் தேடினார்கள். அது கிடைக்கவில்லை. இந்தச் சம்பவம் தொடர்பாக அண்ணாசதுக்கம் காவலர் வழக்குப்பதிவு செய்தனர். கடந்த கிழமைதான் ஆவடியில் நடுவண் துணை ராணுவப்படை பயிற்சி காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்தச் சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்கு முன்பாக காவலர் அருண்ராஜ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னை காவல்துறை வட்டாரத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. காவலர் அருண்ராஜ் தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்பது பற்றி சென்னை காவல்துறை வட்டாரத்தில் பலவிதமாக பேசப்பட்டது. பணிச்சுமை காரணமாக அவர் இந்த துயரமுடிவை எடுத்திருக்கலாம் என்று ஒருசாரர் கருத்து கூறினார்கள். இன்னொரு சாரார் காதல் பிரச்சினையிலோ? அல்லது குடும்ப பிரச்சினை காரணமாகவோ? அவர் இந்த முடிவுக்கு வந்திருக்கலாம் என்று கூறினார்கள். இந்த சம்பவம் தொடர்பாக உயர் காவல் அதிகாரி ஒருவர் கூறியதாவது: காவலர் அருண்ராஜ் வணிகவியல் இளவல் பட்டப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, விளையாட்டு ஒதுக்கீட்டில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காவல் பணியில் சேர்ந்துள்ளார். அவர் திருமணம் ஆகாதவர். தீவிர ஆன்மிகவாதி. சிவ பக்தர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திடீரென்று காணாமல் போய்விட்டார். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அவர் காவி உடை அணிந்த நிலையில் காணப்பட்டார். அங்கிருந்து அவர் மீட்டு வரப்பட்டார். மீண்டும் காவல் பணியில் சேர்ந்து பணியாற்றி வந்தார். அவர் தனக்கு குடும்ப வாழ்க்கை பிடிக்கவில்லை என்றும், இறைபணிக்கு தன்னை அர்ப்பணித்து கொள்ளப் போவதாகவும் தனது நண்பர்களிடம் கூறி வந்துள்ளார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அந்த அதிகாரி கூறினார். இந்த நிலையில் தற்கொலை செய்துகொண்ட காவலர் அருண்ராஜின் உடல், உடனடியாக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு மருத்துவமனை தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்ட பின்னர், அருண்ராஜின் உடல் உடற்கூறு ஆய்வுக் கூடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. பிற்பகல் 1.30 மணியளவில் அருண்ராஜின் உடற்கூறு ஆய்வு தொடங்கியது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனை பேராசிரியர்கள் என மொத்தம் 5 மருத்துவர்கள் கொண்ட குழு உடற்கூறு ஆய்வில் ஈடுபட்டனர். உடற்கூறு ஆய்வுக் காட்சி காணொளிப் பதிவும் செய்யப்பட்டது. உடற்கூறு ஆய்வு முடிந்தது. அதனைத் தொடர்ந்து அருண்ராஜின் உடலை பார்க்க அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அனுமதிக்கப்பட்டனர். தான் ஆசையோடு வளர்த்த மகன் பிணமாக கிடப்பதை பார்த்த அவரது பெற்றோர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,717.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



