Show all

நல்லவரா, கெட்டவரா அறங்கூற்றுமன்றம் சொல்லட்டும். நியாயத்திற்கு தலை வணங்குகிறேன்! வைரமுத்து காணொளி வெளியீடு

28,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தற்போது சமூக வலைதளங்களில் உச்ச பட்ச தலைப்பாகி வருவது 'எனக்குந்தான்' என்கிற பாதிக்கப்பட்ட பெண்களின் பாலியல் குற்றச்சாட்டுக்கள்.  
இந்தத் தலைப்பில், கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுகளை அடுக்கினார் பிரபல பாடகி சின்மயி. இந்த விவகாரத்தில் பலர் சின்மயிக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இதில் சின்மயியும், வைரமுத்துவும் தங்கள் பக்கம் உள்ள நியாங்களை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர். 

அதன் வரிசையில் தற்போது வைரமுத்து ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார். அதில், 'என் மீது சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள் முழுக்க முழுக்க பொய்யானவை. முற்றிலும் உள்நோக்கம் உடையவை. அவை உண்மையாக இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் என்மீது வழக்கு தொடரலாம். சந்திக்கக் காத்திருக்கிறேன். மூத்த வழக்கறிஞர்களோடும் அறிவுலகத்தின் ஆன்றோர்களோடும் கடந்த ஒருகிழமையாக ஆலோசித்து வந்தேன். அசைக்கமுடியாத ஆதாரங்களைத் தொகுத்து திரட்டி வைத்திருக்கிறேன். நீங்கள் என் மீது வழக்கு தொடரலாம். நான் நல்லவரா.. கெட்டவரா.. என்பதை யாரும் இப்போது முடிவு செய்ய வேண்டாம். அதை அறங்கூற்றுமன்றம் சொல்லட்டும். நீதிக்குத் தலை வணங்குகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,940.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.