தமிழக அரசின் ஊரக வளர்ச்சி துறையில் பணியாற்றிய
மக்கள் நல பணியாளர்கள் சுமார் 13 ஆயிரம் பேர் கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி
நீக்கப்பட்டனர். இதுதொடர்பாக மக்கள் நல பணியாளர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில்
வழக்கு தொடரப்பட்டது. இதற்கு தமிழக அரசு சார்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. தங்களை மீண்டும் பணியில் சேர்த்திடக்கோரி தமிழ்நாடு
மக்கள் நல பணியாளர்கள் சங்கம் சார்பில் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் ஆர்ப்பாட்டம்
நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் நல்.செல்லப்பாண்டியன் தலைமை தாங்கினார்.
பொதுச்செயலாளர் வே.புதியவன், பொருளாளர் கோ.ரெங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டம் குறித்து செல்லப்பாண்டியன் கூறுகையில்,
‘‘எங்கள் பணி நீக்கம் குறித்து உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்துள்ள மேல் முறையீட்டு
வழக்கினை முதல்அமைச்சர் கருணை உள்ளத்தோடு திரும்பப்பெற வேண்டும். மீண்டும் எங்களைப்
பணியில் சேர்த்திடவேண்டும்’’, என்றார். போராட்டத்தின்போது பெண் ஒருவர் உடலில் மண்எண்ணெய்
ஊற்றி தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவரைக் காவல்துறையினர் காப்பாற்றினர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 250-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



