Show all

நெருங்கும் ஓட்டு எண்ணிக்கை! பரபரப்பு அடங்காத நிலையில் எதிர்க்கட்சிகள்; குறிப்பாக திமுக

தமிழக மக்களின் வாக்குகளை வாக்கு இயந்திரங்களில் செலுத்தி விட்டு அவர்கள் தங்கள் பொறுப்பை முடித்துக் கொள்ள, ஆட்சி மாற்றத்திற்கு தமிழக மக்கள் ஒப்புதல் தந்துவிட்டதான செய்தி- தேர்தல் ஆணையத்தின் பொறுப்பில் சிக்கிக் கொண்டிருக்க, வெற்றி நமக்கே தமிழக மக்கள் உரித்தாக்கி இருப்பார்கள் என்ற நம்பிக்கையோடு திமுக காத்திருந்தாலும், வாக்கு இயந்திரங்களில் முறைகேடு நடந்து விடக்கூடாதே என்கிற அச்சத்திலும் பரபரப்பிலும் இருந்து வருகிறது.

15,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: இருநூற்றி முப்பத்தி நான்கு பவுன் நகையை அடமானமாகப் பெற்றுக் கொண்டு, அடுத்த நாள் காலையிலேயே மீட்டுக் கொள்ளும் வகையாக, ஒருவருக்கு ஒரு பெருந்தொகை கடனாகத் தேவைப்படுகிறது. ஆனால் அவரிடம் கடன் கொடுப்பவர், நகையை இருபத்தியாறு நாட்கள் கழித்தே பெற்றுக் கொள்ள முடியும், அப்போதே பணத்தைக் கொடுத்து நீங்கள் நகையைப் பெற்றுச் செல்லலாம் என்று தன்னிடம் பணம் இருக்கும் அதிகாரத்தில் அடகுபிடிப்பவர் அவர்பாட்டுக்குத் தெரிவிக்கிறார். 

பணத்தேவை உள்ள அவர் 234பவுன் நகையைக் கொடுத்து விட்டு பணத்தைப் பெற்றுக்கொண்டார். அவரின் பணத்தேவை அவர் குறிப்பிட்டபடி அடுத்த நாளே முடிந்து விட்டது. அவர் கையில் பணத்தோடு நகைக்காக கடந்த இருபத்தியிரண்டு நாட்களாகக் காத்திருக்கிறார். இன்னும் முழுமையாக மூன்று நாட்கள் கடந்தால்தான் அந்த அடகுபிடிப்பவரிடம் நகை கேட்டுச் செல்ல முடியும். 

உண்மையில் நகையை அடகு வைத்தவருக்கு யார் மீது அச்சம் இருக்கும்? அடகுபிடிப்பவர் மீதுதானே? நகையை வாங்கி பரிசோதிக்கும் வரை அடகு பிடிப்பவரை அவர் ஐயுற முடியுமா? அப்படி ஐயுற்றால் நகைக்கு அல்லவா ஆபத்து!

இப்படித்தான் தமிழக மக்களின் வாக்குகளை வாக்கு இயந்திரங்களில் செலுத்தி விட்டு அவர்கள் பொறுப்பை முடித்துக் கொள்ள, தற்போது ஆட்சி மாற்றத்திற்கு தமிழக மக்கள் ஒப்புதல் தந்துவிட்டதான செய்தி- தேர்தல் ஆணையத்தின் பொறுப்பில் சிக்கிக் கொண்டிருக்க, வெற்றி நமக்கே தமிழக மக்கள் உரித்தாக்கி இருப்பார்கள் என்ற நம்பிக்கையோடு திமுக காத்திருந்தாலும், வாக்கு இயந்திரங்களில் முறைகேடு நடந்து விடக்கூடாதே என்கிற அச்சத்திலும் பரபரப்பிலும் இருந்து வருகிறது.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு முடிந்து இருபத்தியிரண்டு நாட்கள் கடந்துவிட்டன. இதில் பதிவான ஓட்டுக்கள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை எண்ணப்பட உள்ளன. இதனால் ஓட்டு எண்ணும் மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. 

அதிமுக, பாஜக தவிர்த்த தமிழக அரசியல் தலைவர்கள், தேர்தல் முடிந்ததிலிருந்து கடந்த இருபத்தியிரண்டு நாட்களாக கொரோனாவை விட ஆபத்தான பரபரப்பில் உள்ளனர். 

முதல்வர் பழனிசாமி, குடலிறக்கம் அறுவை சிகிச்சை முடித்து வீட்டில் இருந்தார். தற்போது கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்திருப்பதால், அது தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகிறார். இராஜேந்திர பாலாஜி திருப்பதி சென்றார். செல்லூர் ராஜூ குடும்பத்துடன் கொடைக்கானலில் ஓய்விற்கு சென்றார். இப்படி அதிமுகவினரும், பாஜகவினரும் இயல்பாக இருக்கின்றனர். 

வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் குளிர்பதன வசதிகள் இயங்குகின்றன, மையங்களின் அருகே மர்ம கொள்கலன் வாகனம் (கன்டெய்னர்) இருந்தது, மர்ம ஆட்கள் நடமாட்டம் உள்ளது, வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மைய வளாகத்தில் மடிக்கணினிகளுடன் அதிகாரிகள் சென்று வந்தனர் என திமுக தரப்பில் அன்றாடம் பல குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டு வருகின்றன. 

இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக புகார் மனு ஒன்றை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன், தலைமை தேர்தல் அதிகாரியிடம் அளித்துள்ளார். 

ஒட்டு எண்ணிக்கைக்கு இன்னும்- வியாழன் வெள்ளி சனி என்று மூன்றே நாட்கள் இடையில் உள்ள நிலையில் வழக்கம் போல் தற்போதும் வாக்கு இயந்திரங்கள் தொடர்பான பல்வேறு ஐயங்கள் கிளம்பி உள்ளன. 

ஒவ்வொரு தேர்தலின் போதும், வாக்கு இயந்திரத்தில் எந்த பித்தானை அழுத்தினாலும் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கே ஓட்டுக்கள் பதிவாகிறது, என்பதாக வாக்கு இயந்திரத்தை வடிவமைத்துள்ளார்கள். என்பதான ஐயங்கள் கிளப்பப்படுவது தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. 

தற்போது உலக அளவில் 30 நாடுகளில் மட்டுமே வாக்கு இயந்திரங்கள் தேர்தலில் பயன்படுத்தப்படுகின்றன. பல்வேறு காரணங்களால் பல்வேறு நாடுகளில், தற்போது வரை ஓட்டுச்சீட்டு முறையே பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்திய தேர்தல் ஆணையத்தின் நேரடி கண்காணிப்பில் தான் வாக்கு இயந்திரங்கள் உருவாக்கப்படுகின்றன. வாக்கு இயந்திரங்களைக் கட்டுப்படுத்தும் இயந்திரம், தேர்தல் ஆணையத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட 2 முதல் 3 பொறியாளர்கள் குழுவால் உருவாக்கப்படுகிறது. இதன் மூல குறியீடுகளும் இவர்களாலேயே உருவாக்கப்படுகிறது. இந்த மூல குறியீடுகள் தனித்துவமான எண்ணிமக் குறியீடுகளால் பாதுகாக்கப்படுகிறது. இவற்றின் மொத்த கட்டுப்பாடும் தேர்தல் ஆணையத்தில் இருக்கும் வன்வகையிலேயே (ஹார்டுவேர்) இணைக்கப்பட்டிருக்கும். பாதுகாப்பு எண்ணிமக் குறியீடுகள் ஒன்றியப் பாதுகாப்பு துறையின் கீழ் செயல்படும் 2 நிறுவனங்களால் கட்டமைக்கப்படும். 

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள தேர்தல் ஆணையம், பேலட் யூனிட் மற்றும் கன்ட்ரோல் யூனிட் ஆகிய அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் முழு கட்டுப்பாட்டில் மட்டும் இயங்கும் என தெரிவித்துள்ளது. மேலும் ஒவ்வொரு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கும் தனிப்பட்ட அடையாள குறியீடு இருக்கும். இவைகள் மிக கமுக்கமாக வைக்கப்பட்டிருக்கும் என்றெல்லாம் தேர்தல் ஆணையத்தால் தகவல் தெரிவிக்கப்பட்டு வந்தாலும், தேர்தல் முடிவின் தன்மையே இவைகள் அனைத்தின் உண்மை தன்மையை உணர்த்த முடியும் என்று எதிர்கட்சிகள் பரபரப்பில் இருந்து கொண்டிருக்கின்றன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.