கொரோனாவால் பற்பல ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்பது வரலாற்றில் மறக்க முடியாத பெருந்துயரம் ஆகும். இந்த நிலையில், 65 ஆண்டு பழமையான ஒரு தமிழக நிறுவனம், கொரோனாவால் மூடப்படுகிறது என்பதும் ஒரு துயரச் செய்தியாகும். வணிகத்தை மூடுவது என்பது சாதாரண நிலைப்பாடு அல்ல, ஆனால் கொரோனா மூலம் வணிகத்தைத் தொடர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளோம். இதனாலேயே வணிகத்தை முழுமையாக மூட முடிவு செய்துள்ளோம். எங்கள் நிறுவனத்திற்கு 65 ஆண்டுக் காலமாக உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி என விட்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது. விட்கோ நிறுவனம் சென்னையில் 10 கடைகளோடும், திருச்சி, கோழிக்கோடு, பெங்களூர், கொச்சி ஆகிய நகரங்களில் தனது வணிகத்தைச் சிறப்பாகச் செய்து வருகிறது. பயணப் பைகள் விற்பனையில் சிறந்து விளங்கும் இந்நிறுவனம் சென்னையில் சுமார் 65 ஆண்டுக் காலம் இயங்கி வருகிறது. ஒரு காலத்தில் சென்னையில் மொத்த பயணப்பை விற்பனை சந்தையில் சுமார் 60 விழுக்காட்டைத் தனது ஆதிக்கத்தில் வைத்திருந்த விட்கோ தொடக்க காலக்கட்டத்தில் ஆடம்பர பயணப்பைகள் பிரிவில் கொடிகட்டிப் பறந்த நிறுவனம் இது. மேலும் காலத்திற்கு ஏற்ப பயணப்பைகள், மடிக்கணினி பைகள், மாணவர் புத்தகப் பைகள், பெண்கள் தோள் பைகள் ஆகியவற்றை விற்பனை செய்கிறது. இதுமட்டும் அல்லாமல் இந்நிறுவனம் சாம்சோனைட், டெல்சே, அமெரிக்கன் டூரிஸ்டர், கேஸ் லாஜிக், நைக், பூமா, விஐபி, ஸ்கைபேக்ஸ், பேக்இட், ஹைய்டிசைன், வைல்டுகிராப்ட் ஆகிய நிறுவன தயாரிப்புகளையும் விற்பனை செய்கிறது. இதுமட்டும் அல்லாமல் அமேசான், பிளிப்கார்ட் போன்ற மின்வணிகத் தளங்களுடன் இணைந்து அனைத்து விதமான பைகளை விற்பனை செய்து வருகிறது. கீச்சுவில் பலர் இந்நிறுவனம் மூடுவதைக் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளனர். பலர் தங்களது பழைய நினைவுகளையும் பதிவிட்டு வருகின்றனர். பிரிட்டனில் கொரோனா தொற்றுக் காரணமாக வணிக இழப்பைச் சமாளிக்க முடியாமல் பல பழமையான நிறுவனங்கள் மூடப்பட்டதைப் போல் தற்போது இந்தியாவில், அதுவும் நம்முடைய சென்னையில் உருவான ஒரு தமிழக நிறுவனம் 65 ஆண்டுகளுக்குப் பின் மூடப்படுகிறது.
22,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: இந்தியாவின் முன்னணி பயணப்பைகள் தயாரிப்பு நிறுவனமான விட்கோ, கொரோனா தொற்று மூலம் அதிகளவிலான வணிகத்தை இழந்துள்ளது. குறிப்பாக பன்னாட்டுப் போக்குவரத்து பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளதால் தன்னால் வணிகத்தைத் தொடர முடியாது என்று தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது விட்கோ நிறுவனம்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.