Show all

குவிகிறது பாராட்டு, ஆணையர் வெகுமதி! 17 அகவை சூர்யா துணிச்சலாக திருடனை விரட்டி பிடித்தார்.

06,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமுதா தனது சிகிச்சையகத்தில் இருந்தபோது மர்ம நபர் ஒருவர் உள்ளே வந்து, அமுதாவை மிரட்டி சற்றும் எதிர்பாராத நேரத்தில் அவர் கழுத்திலிருந்த 10 சவரன் சங்கிலியைப் பறித்துக்கொண்டு ஓடியுள்ளார். இதனால் அமுதா திருடன், திருடன் என கத்தி சத்தம்போட, சிகிச்சையகத்தின் எதிர்புறம் இருக்கும் கடையில் வேலைபார்க்கும் 17 அகவை சூர்யா, திருடனை விரட்டிக் கொண்டு ஓடினார் கிட்டதட்ட ஒரு கிலோ மீட்டர் வரை துரத்திச் சென்று, திருடனை மடக்கிப் பிடித்த அவர், திருடனிடம் இருந்த தங்க சங்கிலியை மீட்டு வந்து அமுதாவிடம் கொடுத்தார். அத்துடன் அந்த திருடனை காவல்துறையினரிடமும் சூர்யா ஒப்படைத்தார். அமுதாவின் கூப்பாடுக்கு பொதுமக்கள் யாரும் உதவாத நிலையில் திருடனை துரத்தி நகையை மீட்ட சிறுஅகவை சூர்யாவிற்கு பாராட்டுக்கள் குவியத் தொடங்கியுள்ளன. 

திருடனிடம் கத்தி போன்ற ஆயுதம் இருந்து தாக்கியிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று கேட்டபோது, பெரிய அளவில் காயம் ஏற்பட்டிருக்கும், இல்லையென்றால் உயிரே கூட போயிருக்கலாம், ஆனால் அதையெல்லாம் அந்த நேரத்தில் நான் யோசிக்க வில்லை என சூர்யா பதிலளித்துள்ளார். சூர்யாவின் இந்த பதிலை செய்திதாள்களில் படித்த சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் இன்று நேரில் வரவழைத்து, பாராட்டும் வெகுமதியும் அளித்தார். திருடன் தன்னைத் தாக்க முயன்றபோதும், விரட்டிச்சென்று பிடித்த சிறுவன் சூர்யாவின் மன உறுதி பாராட்டத்தக்கது என்றார் அவர். 

சூர்யவைபோல் பொதுமக்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவினால் எந்த திருடனும் திருடவே பயப்படுவேன் என்றும், பொதுமக்கள் உதவிகளை செய்ய தைரியமாக முன்வரவேண்டும் என்றும் ஆணையர் கேட்டுக்கொண்டார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,762.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.