Show all

அ.தி.மு.க பொதுக்குழுவில் அதிரடி தீர்மானங்கள்.

அ.தி.மு.க.வின் தற்காலிகப் பொதுச் செயலாளராக சசிகலா நியமனம் ரத்து செய்யப்படுவதாக, கட்சியின் பொதுக்குழுவில் அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, கட்சியின் தற்காலிகப் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். இதையடுத்து, அ.தி.மு.க சட்டமன்றத் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார்.

முதல்வராக சசிகலா பொறுப்பேற்கும் வேளையில், பன்னீர்செல்வம் திடீரென சசிகலாவின் தலைமை பிடிக்காமல் போர்க்கொடி தூக்கியதோடு, தனி அணியை உருவாக்கினார். இதன் தொடர்பில், சசிகலா சிறைக்கு அனுப்பப் பட்டார். தினகரன் துணைப் பொதுச் செயலாளராக நியமித்தார் சசிகலா.

இரட்டை இலைச் சின்னம் பெற, தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகத் தொடரப்பட்ட வழக்கில் தினகரன் கைது செய்யப்பட்டு, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே, கட்சியிலிருந்து தினகரனை ஒதுக்கிவைப்பதாக முதல்வர் பழனிசாமி அணியினர் அறிவித்தனர். பிரிந்துசென்ற பன்னீர் அணியினரை இணைக்கும் முயற்சி, நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர் நடந்தது.

இதற்கு, தினகரன் தரப்பு கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. அதோடு, முதல்வர் பழனிசாமி அரசுக்கு அளித்துவந்த ஆதரவைத் திரும்பப் பெறுவதாக தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேர் ஆளுநரைச் சந்தித்து தனித்தனியாகக் கடிதம் கொடுத்தனர். இதனிடையே, பழனிசாமி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது; இதனால் சட்டப்பேரவையைக் கூட்டி, பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வருக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஆளுநரைச் சந்தித்து வலியுறுத்திவந்தன. ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆட்சிக்கு எதிராக தினகரன் தரப்பும் எதிர்க்கட்சியினரும் போராடி வரும் சூழ்நிலையில், அ.தி.மு.க பொதுக்குழுகூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் இன்று தொடங்கியது.

அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழுவில், மூன்று வரிசையில் நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. 57 பேர் இந்த நாற்காலியில் அமர்ந்திருந்தனர். இதைத் தொடர்ந்து, மேடையிலிருந்த ஜெயலலிதா படத்துக்கு மலர்தூவி மரியாதைசெலுத்தப்பட்டது. பின்னர், உறுப்பினர்களை வரவேற்று முன்னாள் அமைச்சர் வளர்மதி பேசினார். இதைத் தொடர்ந்து, மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் செய்தியை பொள்ளாச்சி ஜெயராமன் வாசித்தார். பின்னர் பொதுக்குழு தீர்மானத்தை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வாசித்தார்.

முதலில்,

1.இரட்டை இலைச் சின்னத்தை மீட்க வேண்டும் என்ற தீர்மானத்தை வாசித்தார்.

2.தமிழகத்தைக் காக்க ராமர், லட்சுமணனைப் போல பழனிசாமி- பன்னீர்செல்வம் இணைந்துள்ளனர் என்றும் தீர்மானம் வாசித்தார்.

3.எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடத்தும் தமிழக அரசுக்குப் பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

4.தினகரன் வெளியிட்ட அறிவிப்புகள், நியமனங்கள் செல்லாது எனவும், ஜெயலலிதா நியமித்த உறுப்பினர்கள், கட்சிப் பொறுப்புகளில் நீடிப்பார்கள் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

5.ஜெயலலிதாவுக்கு 15 கோடி ரூபாய் செலவில் நினைவிடம் அமைக்க முடிவுசெய்த முதல்வர் பழனிசாமிக்கு நன்றி தெரிவித்தும்,

6.விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும்,

ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக்கும் முடிவை எடுத்த அரசுக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

7.பின்னர், அ.தி.மு.க-வின் தற்காலிகப் பொதுச்செயலாளராக சசிகாலா நியமனம் ரத்து செய்யப்படுவதாக, கட்சியின் பொதுக்குழுவில் அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அப்போது, கூட்டத்திலிருந்து எதிர்ப்பு எழுந்தது. அவர்களை உடனிருந்தவர்கள் சமாதானப்படுத்தினர். இதையடுத்து சலசலப்பு அடங்கியது. இதைத் தொடர்ந்து,

8.ஜெயலலிதாவுக்குப் பின், கட்சியில் பொதுச் செயலாளர் பொறுப்பு யாருக்கும் கிடையாது என்றும்

இனி பொதுச் செயலாளர் பதவி கிடையாது எனவும் சட்ட திருத்தம் கொண்டுவரப்படும் என்றும் தீர்மானம் வாசிக்கப்பட்டது.மேலும்,

9.அ.தி.மு.க.வின் முதன்மை ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்.

10.துணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி நியமனத்துக்கும் பொதுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. 11.அ.தி.மு.க.வில் இனி ஒருவரை சேர்க்கவும், நீக்கவும் பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.

12.ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் 11 பேர் இடம்பெற பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பொதுச் செயலாளருக்கான அதிகாரங்கள் அனைத்தும் ஒருங்கிணைப்புக் குழுவுக்கு வழங்கப்படும். எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்குப் பின் பொதுச் செயலாளர் பதவியை யாராலும் நிரப்ப முடியாது. அ.தி.மு.க.வின் சட்டவிதி 19ல் திருத்தம் செய்ய ஒப்புதல் அளித்தல் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.