Show all

1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட செக்கு கல்வெட்டு கண்டுபிடிப்பு! சேலம், வாழப்பாடி அருகே

19,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டம் புழுதிகுட்டை அருகே வெள்ளிக்கவுண்டனூர் என்ற இடத்தில் ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முந்தைய செக்கு கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

வாழப்பாடியைச் சேர்ந்த கவிஞர் பெரியார் மன்னன் என்பவர் கொடுத்த தகவலின் பேரில் சேலம் வரலாற்று ஆய்வுமையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், ஆறகழூர் பொன்.வெங்கடேசன், கவிஞர் மன்னன், மருத்துவர் பொன்னம்பலம், பெருமாள் ஆசிரியர், ஜீவநாராயணன், வீராசாமி ஆசிரியர் ஆகியோர் அடங்கிய குழு புழுதிக்குட்டைப் பகுதியில் உள்ள கரியராமர் கோயிலில் ஆய்வுகள் மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள கல் செக்கில் ஒரு கல்வெட்டு கண்டறியப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

தரையிலிருந்து கல்செக்கானது 40 செ.மீ உயரமுடையது. இதன் வெளிவிட்டம் 57 செ.மீ.  உள் விட்டம் 45 செ.மீ அளவுடையதாகவும் இருக்கிறது. செக்கின் நடுவிலுள்ள குழியின் ஆழம் 30 செ.மீ, விட்டம் 20 செ.மீ ஆகும். உள்விட்டம் உள்ள பகுதியில் இரண்டு வரிகளில் 12 சொற்களில் கல்வெட்டானது அமைந்துள்ளது. 

விளக்கமாறன் என்பவர் தன் மகன் மூக்கனை என்பவர் இறந்துவிட்டதால் அவர் நினைவாக செய்து கொடுத்த கல்செக்கு இதுவாகும். இங்கு வந்து வணங்கி பூசை செய்பவர்களுக்கு பிழியப்பட்ட புண்ணாக்கு மூன்றைத் தரும்படி கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. 

பழங்காலத்தில் எண்ணை வித்துக்களை ஆட்ட ஊருக்குப் பொதுவாக கல்செக்கு செய்து தரும் வழக்கம். மக்கள் நிலக்கடலை, எள் போன்ற எண்ணெய் வித்துக்களை இந்த உரலில் ஆட்டி எண்ணையை எடுத்துக்கொண்டு கல்செக்குக் கூலியாக புண்ணாக்கைத் தரும் வழக்கம் இருந்துள்ளது. இப்போது கண்டறியப்பட்டுள்ள இந்த கல்செக்கு கல்வெட்டு மூலம் இங்கு வந்து வழிபடுவோருக்கு பிரசாதமாக பிழியப்பட்ட புண்ணாக்கு மூன்றை தர சொல்லியிருப்பது ஒரு புதிய செய்தியாகும்.

இந்தப்பகுதியில் மேலும் ஆய்வு செய்தால் இன்னும் பல வரலாற்றுத் தடயங்கள் கிடைக்கலாம் என்று சேலம் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ஆறகழூர்  பொன்.வெங்கடேசன் தெரிவித்தார்.

தமிழகத்தில் கிடைக்கப் பெற்ற கல்வெட்டுகளில் அறுபது விழுக்காடு கல்வெட்டுக்கள் இன்னும் படிக்கப் படாமலே இருக்கிறது என்கிற தகவலும் தமிழகத்தில் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,837.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.