நாகபுரியில் புதன்கிழமை தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். முதல் இன்னிங்ஸில் இந்தியா 78.2 ஓவர்களில் 215 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.தென் ஆப்பிரிக்க தரப்பில் ஹார்மர் 4 விக்கெட்டுகளையும், மோர்கல் 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
அதன் பிறகு ஆடிய தென் ஆப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 9 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 11 ரன்கள் எடுத்தது. எல்கர் 7 ரன்களுடனும், ஆம்லா ரன் ஏதுமின்றியும் களத்தில் இருந்தார்கள். அதை தொடர்ந்து இரண்டாம் நாள் ஆட்டத்தை ஆடிய தென் ஆப்பிரிக்க அணியின் அணைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். டுமினி மட்டும் அதிகபட்சமாக 35 ரன்கள் குவித்தார். இதனால் முதல் இன்னிங்ஸில் 79 ரன்களில் ஆல் அவுட் ஆனது தென் ஆப்பிரிக்கா. இந்திய அணி தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டுகளையும் ஜடேஜா 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
அதனை தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்க்ஸை ஆடிய இந்திய அணி 46.3 ஓவர்களில் 173 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கத் தரப்பில் இம்ரான் தாஹிர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் தென் ஆப்பிரிக்க அணி இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற 310 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
310 ரன்களைவேற்றி இலக்காக கொண்டு இரண்டாவது இன்னிங்க்ஸை ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 2-ம் நாளின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 32 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணி வெற்றி பெற இன்னும் 8 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 278 ரன்கள் தேவைப்படுகிறது என்ற நிலமையுடன் மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடங்கியது.
ஆனால் தென்ஆப்பிரிக்க அணி 2–வது இன்னிங்சில் 89.5 ஓவர்களில் 185 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அஸ்வின் 66 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை அள்ளினார். ஒரு இன்னிங்சில் அஸ்வினின் சிறந்த பந்து வீச்சாக இது பதிவானது. அமித் மிஸ்ரா தனது பங்குக்கு 3 விக்கெட்டுகளை சாய்த்தார். ஏற்கனவே முதல் இன்னிங்சிலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்த அஸ்வின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி டெஸ்ட் தொடரை 2–0 என்ற கணக்கில் சொந்தமாக்கியது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி வெல்வது 11 ஆண்டுகளுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். இவ்விரு அணிகள் இடையிலான 4–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 3–ந்தேதி டெல்லியில் தொடங்குகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.