இலங்கை அணி இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை ஏற்கனவே இந்தியாவிடம் இலங்கை இழந்துள்ள நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரின் இரண்டாவது T20 போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று நடைபெற்றது. கட்டாக்கில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1–0 என்ற கணக்கில் முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா மற்றும் லோகேஷ் ராகுல் களமிறங்கினர். ஆரம்பம் முதலே இருவரும் அதிரடியாகவும் சிறப்பாகவும் விளையாடினர். கேப்டன் ரோகித் சர்மா 45 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்சர்கள் உடன் 118 ரன்களிலும் லோகேஷ் 49 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 89 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த தோனி 21 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியாக இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் குவித்தது. ரோஹித் சர்மா 35 பந்துகளில் சதமடித்ததன் மூலம் அதிவேக சதம் விளாசியவர்களில் முதலிடத்தில் உள்ள தென் ஆப்பிரிக்காவின் டேவிட் மில்லரின் சாதனையை சமன் செய்துள்ளார். இதனையடுத்து 261 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக கடின இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 17.2 ஓவர்களில் 172 ரன்கள் மட்டுமே குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 88 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியத்துடன் இந்தியாவிடம் T20 தொடரையும் இழந்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக குஷால் பெரேரா 77 ரங்களும் தரங்கா 47 ரங்களும் குவித்தனர். இந்திய அணி சார்பில் சாகல் 4 விக்கெட்டுகளையும் யாதவ் 3 விக்கெட்டுகளையும் ஜெயதேவ் மற்றும் பாண்டயா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



