இலங்கை மற்றும் இந்திய அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. தரம்சாலாவில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் இன்று இரண்டாவது ஒரு நாள் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் திசாரா பெரேரா முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். இதையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் சர்மாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர். இருவரும் ஆரம்பம் முதலே மிகவும் பொறுப்புடன் விளையாடினர். தவான் 68 ரன்கள் சேர்த்தும் ஷ்ரேயாஸ் அய்யர் 88 ரன்கள் சேர்த்தும் ஆட்டமிழந்தனர். முறுமுனையில் அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா 151 பந்துகளில் இரட்டை சதமடித்தார். இது சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அவர் அடிக்கும் மூன்றாவது இரட்டை சதமாகும். இறுதியாக இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 392 ரன்கள் குவித்தது. ரோஹித் சர்மா 208 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 393 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின் வீரர் மேத்யூஸ் தவிர அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். மேத்யூஸ் 132 பந்துகளில் 9 பவுண்டரி, 3 சிக்ஸர்களின் உடன் 111 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். எனினும் இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய தரப்பில் சாஹல் 3 விக்கெட்டுகளும், பும்ரா 2 விக்கெட்டுகளும், புவனேஸ்வர் குமார், பாண்டியா, சுந்தர் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். இதனால் இந்திய அணி 141 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. இது தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு முதல் சர்வதேசப் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரின் வெற்றியை நிர்ணயிக்கும் மூன்றாவது மற்றும் கடைசிப் ஒரு நாள் போட்டி விசாகப்பட்டினத்தில் டிசம்பர் 17-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



