இலங்கையின் 70 வது ஆண்டு சுதந்திர தின விழாவை ஒட்டி இலங்கை, வங்கதேசம் மற்றும் இந்தியா பங்குபெறும் நிதாஹாஸ் டி20 முத்தரப்பு தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் ஐந்தாவது போட்டியில் இந்தியா இன்று வங்கதேசத்தை எதிர் கொண்டது. கொழும்பு நகரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி சார்பில் ரோகித்சர்மா மற்றும் தவான் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இவ்விருவரும் நிதானமாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 70 ரன் சேர்த்தனர். அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா அதிரடியாக ஆட ரோஹித்தும் அதிரடி காட்ட ஆரம்பித்தார். இறுதியாக இந்திய அணி 20 ஓவரில், 3 விக்கெட்டுக்கு 176 ரன்கள் எடுத்தது. தினேஷ் கார்த்திக் (2) அவுட்டாகாமல் இருந்தார். கடைசி ஓவரின் கடைசி பந்தில் ரோகித் 'ரன்-அவுட்' ஆனார். இந்திய அணியில் தவான் 37 ரன்களையும், ரோஹித் 89 ரன்களையும் மற்றும் சுரேஷ் ரெய்னா 47 ரன்களையும் குவித்தனர். வங்கதேசம் சார்பில் ரூபெல் ஹொசைன் 2 விக்கெட் வீழ்த்தினார். அடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது. ஆனால் வங்கதேச அணி 20 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்து தோவியை தழுவியது. வங்கதேச அணி சார்பில் அதிகபட்சமாக ரஹீம் 72 ரன்கள் குவித்தார். இந்திய அணியில், சுந்தர் 3 விக்கெட்டுகளையும், சிராஜ், தாகுர் மற்றும் சாகல் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். இந்த வெற்றி மூலம் இந்தியா, நிதாஹாஸ் டி20 முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டிக்கு நுழைந்தது. வரும் வெள்ளி கிழமை இலங்கை மற்றும் வங்கதேசத்துக்கு இடையே நடைபெறும் கடைசி லீக் போட்டியில் வெற்றி பெரும் அணியுடன், இந்தியா வரும் ஞாயிற்றுக்கிழமை இறுதிப்போட்டியில் விளையாடும்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



