Show all

ஆசியக் கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது இந்தியா

வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றின் தனது மூன்றாவது மற்றும் கடைசி ஆட்டத்தில் பாகிஸ்தானை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது இந்திய அணி. விறுவிறுப்பான இந்தப் போட்டியில் இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 

முதல் பாதி நேரத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. 2-வது பாதி நேரத்தில் 39-வது நிமிடத்தில் குர்ஜந்த் சிங் முதல் கோலை பதிவு செய்தார். அதன்பிறகு ஹர்மன் ப்ரீத் ஒரு கோலும், லலித் உபத்யாய் ஒரு கோலும் அடித்தனர். பிறகு குர்ஜந்த் சிங் மீண்டும் ஒரு கோல் அடிக்க இந்தியா 4-0 என வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 

‘ஏ’ பிரிவில் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா, பாகிஸ்தான் அணிகளும், ‘பி’ பிரிவில் முதல் 2 இடங்களை பிடித்த மலேசியா, தென்கொரியா அணிகளும் சூப்பர் 4 சுற்றில் விளையாடி வருகிறது. இச்சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதவேண்டும். இதன்முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இதில் இந்திய அணி இரண்டு வெற்றியும் ஒரு டிராவும் பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இன்று நடக்கும் மற்றொரு போட்டியில் மலேசியா தென் கொரியா அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெரும். இறுதிப் போட்டி நாளை நடைபெற உள்ளது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.