இரண்டு முறை சர்வதேச
சாம்பியன் பட்டம் 5 முறை தேசிய அளவில் சாம்பியன் பட்டம் வென்ற கார் பந்தய வீரர் அஸ்வின்,
இன்று நள்ளிரவில் நிகழ்ந்த கார் விபத்தில் மனைவியுடன் உடல் கருகி உயிரிழந்துள்ளார்.
சென்னையில் சொகுசுகார்கள் விபத்தில் சிக்குவது அதிகரித்து வருகிறது. பிரபல கார் பந்தய
வீரர் அஸ்வினுக்கு இலங்கையைச் சேர்ந்த நிவேதா உடன் திருமணமாகி ஒராண்டு நிறைவடைந்துள்ளது.
அந்த மகிழ்ச்சியைக் கொண்டாட நட்சத்திர உணவகத்திற்குச் சென்று சாப்பிட்டு விட்டு நள்ளிரவு
2 மணிக்கு வீடு திரும்பினார். சென்னை கிரீன்வேஸ்
சாலையில் அதிவேகமாக வந்த போது பிஎம்டபிள்யூ கார் டயர் வெடித்ததாக கூறப்படுகிறது. இதில்
கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்புச் சுவரை மோதி உடைத்து மரத்தின் மீது மோதி சிக்கியது.
இதில் கார் திடீரென தீப்பற்றி எரிந்தது அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக தீயை
அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் எரிபொருள் அதிகமாக இருந்ததால் தீயை அணைக்க முடியவில்லை.
3மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் காருக்குள் சிக்கிக்கொண்ட அஸ்வினும் அவரது
மனைவி நிவேதாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரை உடைத்து எடுத்து உடல்களை மீட்டனர்.
இதனையடுத்து இருவரின் உடல்களையும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உடல் வைக்கப்பட்டுள்ளது.
விபத்தில் உயிரிழந்த அஸ்வின் இரண்டு முறை சர்வதேச
சாம்பியன் பட்டம் வென்றவர். ஐந்து முறை தேசிய அளவில் சாம்பியன் பட்டம் வென்றவர். கடந்த
ஆண்டு பிப்ரவரி மாதம் 16ஆம் தேதிதான் இவருக்கும் மருத்துவமாணவி நிவேதாவிற்கும் இடையே
திருமணம் நடைபெற்றது. ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் இருவரும் கார் விபத்தில் உடல்
கருகி உயிரிழந்தனர். கார் விபத்து குறித்து இரண்டு பிரிவுகளின் கீழ்
காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சொகுசு கார் முற்றிலும்
எரிந்து எலும்புக்கூடு போல காட்சியளிக்கிறது. இந்த விபத்து கார் பந்தய வீரர்களிடையே
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்து நிகழ்ந்தது ஏன்? கார் விபத்து நிகழ்ந்தது
எப்படி என்று விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், குடிபோதையில் விபத்து நேரிட்டதா?
அல்லது கார் ரேஸ் வீரரை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் யாரும் விபத்தை ஏற்படுத்தினார்களா
என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து குறித்து கேள்விப்பட்டு சம்பவ இடத்திற்கு
வந்த உறவினர்கள் கண்ணீருடன் அஸ்வின் உடனான நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். சாதாரண விபத்தாக
இருக்கலாம் என்று நினைத்து வந்த இடத்தில் இப்படி உடல் கருகும் அளவிற்கு விபத்து நேர்ந்தது
எப்படி என்று கேள்வி எழுப்பினர். கார் பந்தய வீரரான அஸ்வின் இதுபோல பலமுறை நள்ளிரவில்
பயணம் செய்துள்ளதாகவும் இதுவரை ஒருமுறை கூட விபத்தில் சிக்கியதில்லை என்றும் கண்ணீர்
மல்க தெரிவித்தனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



