Show all

'18.05.2009' திரைப்படம்தான்; வரலாற்று அவலத்தின் பதிவாக

04,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: 35ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் நடந்த இனக்கலவரத்தின் போது, பெற்றோரை இழக்கிறாள் ஆறு அகவை சிறுமி தமிழ்ச்செல்வி (தன்யா). சித்தப்பா, சித்தியின் தயவில் பள்ளிப் படிப்பை தொடர்கிறாள். இசையிலும், தமிழிலும் அதீக திறமை கொண்ட செல்வியை, வெளிநாட்டுக்கு அனுப்ப நினைக்கிறார்கள் அவளது வளர்ப்பு பெற்றோர்கள். ஆனால் தன் தாய் நாட்டைவிட்டு வெளியேறமாட்டேன் என உறுதியாக நின்று, அங்கேயே பள்ளிக் கல்லூரி படிப்பை முடிக்கிறாள். கல்லூரி விழாவின் போது நடைபெறும் ஒரு சம்பவத்தின் மூலம் இயக்கத்தின் (விடுதலை புலிகள்) மீது ஈர்க்கப்பட்டு, அதில் சேர நினைக்கிறாள். ஆனால் பிறப்பிலேயே இதயத்தில் ஓட்டை உள்ள பெண் என்பதால், உடல் நலன் கருதி இயக்கத்தார் அவளை ஊடகப்பிரிவில் பணியாற்ற அனுமதிக்கின்றனர். செய்தி வாசிப்பின் மூலம் தமது மக்களின் இன்னல்களை உலகுக்கு எடுத்துரைக்கிறாள் தமிழ்ச்செல்வி. இயக்கத்தை சேர்ந்த ஒருவர் தமிழ்ச்செல்வியைக் காதலிக்க, இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். குழந்தையும் பிறந்து வாழ்க்கை நிம்மதியாக சென்று கொண்டிருக்க போர் உச்சம் கொள்கிறது. 

இதனால், தங்கை, தாய் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களைப் படகில் ஏற்றி வெளிநாட்டுக்கு அனுப்பும் தமிழ்செல்வி, தன்னுடைய குழந்தையுடன் இலங்கையிலேயே இருக்கிறார். போர் உச்சம் அடைந்ததால், குடிக்கத் தண்ணீர் இல்லை, குழந்தைக்கு கொடுக்க பால்தூள் கூட இல்லை என்ற நிலை உருவாகிறது. பசியில் குழந்தை இறந்துவிட, ஒரு போராளி பெற்றோராக அந்த துன்பத்தை கடக்கிறார்கள் தமிழ்செல்வியும், அவரது கணவரும். 

ஒரு கட்டத்தில் கணவரும் தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழக்க, தமிழ்ச்செல்வி இலங்கை ராணுவத்திடம் சிக்கிக் கொள்கிறார். ராணுவத்தினர் அவரை இழிவான முறையில் துன்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொல்கின்றனர். இது தான் நெஞ்சை உறையவைக்கும் 18.05.2009 படத்தின் கதை. 

இந்தப் படத்தை இயக்கி இருக்கும் கு.கணேசன், கர்நாடக மாநிலத்தில் பிறந்த தமிழர். போராட்டக்களத்தில் ஒரு பூ என்ற படத்தை இயக்கி, பல பிரச்சினைகளை சந்தித்து, பிறகு 18.05.2009 படத்தை எடுத்திருக்கிறார். 

லட்சக்கணக்கான மக்கள் கொன்றொழிக்கப்பட்ட இலங்கை போரின் கொடூர முகம் காட்சிபடுத்தியதற்காகவே இயக்குனருக்கு பெரிய பாராட்டுக்கள். தணிக்கை துறை உள்ளிட்ட அமைப்புகள் ஏற்படுத்திய பிரச்சினைகளால், இலங்கை, பிரபாகரன், விடுதலை புலிகள் என்ற பெயர்களை எந்த இடத்திலும் அவரால் பயன்படுத்த முடியவில்லை. பாமர மக்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக, இலங்கை தமிழை தவிர்த்து, வழக்கமான தமிழ் வசனங்களே படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. 

எனினும் ஈழத்தமிழர்கள் அனுபவித்த கொடுமைகளையும், துன்பங்களையும் ஆழமாக அவணப்படுத்த முயன்றிருக்கிறார் இயக்குனர். 

இலங்கை ராணுவத்தின் குண்டு மழையில் அப்பாவி தமிழர்கள் எப்படி பலியானார்கள் என்பதை அழுத்தமாக சொல்லி இருக்கிறார் கு.கணேசன். ஆனால் தமிழ்ச்செல்வி இராணுவத்தால் அசிங்கப் படுத்துதல் சம்மாந்தமான காட்சிகளை அவ்வளவு நீளமாக வைக்க வேண்டியதில்லை. 

நம்மள ஏன் குண்டு போட்டு கொல்லாங்க, தமிழ்நாட்டு மக்கள் நம்மள காப்பாத்த வருவாங்கலா? போன்ற வசனங்கள் நம்முள் பல கேள்விகளை எழுப்புக்கின்றன. தமிழ்செல்வியாக நடித்திருக்கும் தன்யா, ஈழப்போரை முழுமையாக உள்வாங்கி நடித்திருக்கிறார். பல காட்சிகளின் மூலம் நம்முள் சோகத்தை கடத்துகிறார்.

இசைஞானி இளையராஜா இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை அற்புதம். அதுவும், எத்தனை எத்தனை கொடுமைகள் பாடல் நெஞ்சை கசக்கிப் பிழிகிறது. ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, கலை, ஒலிக்கலவை என படத்தில் வேலை பார்த்த அனைவருமே ஒரு வரலாற்றை பதிவு செய்ய அபாரமாக உழைத்திருக்கிறார்கள். 

ஆனால் தமிழகம் முழுவதும் 20 திரையரங்குகளில் மட்டுமே படம் வெளியாகிறது. தமிழ்நாட்டில் உள்ள ஈழத்தமிழ் ஆதரவு பேசும் அரசியல் கட்சியினர் மற்றும் உணர்வாளர்கள் அவசியம் திரையரங்குக்கு சென்று படம் பார்த்தால், இதுபோன்ற படங்கள் மேலும் எடுக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். 

இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு சிங்களவர்களுக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையே போர் உச்சக்கட்டத்தில் இருந்தது. அதுவும் குறிப்பாக போர் முடியும் தருவாயில் சிங்கள ராணுவம், இந்தியா உட்பட பன்னிரெண்டு நாடுகளின் உதவியோடு ஈழத்தமிழர்களை கொத்துக்கொத்தாக நவீன குண்டுகளை போட்டு கொன்று குவித்தது.

மே-16 முதல் 18-ம் அன்று வரையிலான மூன்று நாட்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிங்கள ராணுவம் நடத்திய தாக்குதலில் ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதனால் இந்த நாளை ஆண்டுதோறும் உலக தமிழர்கள் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு நாளாக கடைபிடித்து வருகின்றனர்.

இந்தாண்டும் உலகம் முழுவதும் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இந்த நாளை நினைவுகூறும் விதமாகவே இந்தப்; படத்திற்கு 18.05.2009 என்று பெயரிடப் பட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,791.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.