1. முதலெனப்படுவது இடமும் காலமும் என்று தமிழ்முன்னோர் நிறுவியுள்ளனர். 2. இடம் என்பது எல்லையும் தான்தோன்றி இயக்கமும் இல்லாத வெளி 3. காலம் என்பது எல்லையும் தான்தோன்றி இயக்கமும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் அமைந்த மிக மிக நுட்பமான தனி ஒன்றுகள். 4. தனிஒன்றுகளுக்கு தான்தோன்றி சுழல் இயக்கம் இருப்பதால், அதற்கு, நேற்று இன்று நாளை என்கிற முக்காலம் அமைகிறது. அக்காரணம் பற்றியே தனிஒன்றுகளை, காலம் என்று நிறுவுகின்றனர் தமிழ்முன்னோர். 5. தனிஒன்றுகளின் பொருந்து முக எதிரியக்கம் காரணமாக இரண்டு நான்கு எட்டு என்பன போன்ற கூட்டியக்கங்கள் உருவாகின்றன. 6. ஒவ்வொரு கூட்டியக்கத்திற்குள்ளும், மையமாக அமைந்த ஒரு தனிஒன்றுக்கு மட்டுமே சுழல்இயக்கம் என்கிற இருப்புஇயக்கம் இருக்க, மாற்றவைகள் இருப்புஇயக்கத்தோடு பயணஇயக்கம் என்கிற புத்தியல் பெறுகின்றன. 7. தனிஒன்றுகள் சிலபல இணைந்து கூட்டியக்கம் பெற்றது வளர்ச்சி. கூட்டியக்கத்தில் ஒவ்வொரு தனியொன்றும் வேறுவேறு பயணஇயக்கம் பெற்றது புத்தியல் என்கிற உருவாக்கம். 8. ஆக இயற்கையின் நோக்கம் வளர்தலும், உருவாக்குதலும் என்று தமிழ்முன்னோர் தெளிவு படுத்துகின்றனர். நம்முடைய வாழ்க்கையின் நோக்கமும் அதுதான். 9. எண்ணிக்கை மாற்றமே இயல்பு மாற்றத்தின் அடிப்படை என்று கண்டறிந்த தமிழ்முன்னோர் அதைத் தெளிவுபடுத்தும் வகைக்கு கணியம் என்கிற நான்காவது முன்னேற்றக்கலையை நிறுவினர். 10. நானும் நீங்களும் வேறுவேறாக அமைவதற்குக் காரணம்- நாம் அமைந்த உள்ளெண்ணிக்கை மாறுபாடே என்று தெளிவுபடுத்துகிறது கணியக்கலை. 11. இயற்கையின் இந்த, வளர்தலும் உருவாக்குதலும் பாடாற்றலில், அடிப்படையாக உருவானவை- உள்ளெண்ணிக்கை மாறுபாட்டால், நான்கு மாறுபட்ட கூட்டியக்கங்களான நிலம், நீர், தீ, காற்று என்பன.  12 இந்த நான்கிலிருந்தே கோள்கள், விண்மீன்கள் உள்ளிட்ட பேரளவான விண்பொருட்கள் தோற்றம் பெற்றன. 13. இந்த விண்பொருட்களில் ஒன்றான புவியல் உருவான புத்தியல் ஆன, நிலவாழ் உயிரிகள், நீர்வாழ் உயிரிகளில் நான் நீங்கள்  எல்லாம் நிலவாழ் உயிரிகளில் ஆறாவது புலன் பெற்ற மனிதன் ஆவோம்.  14. நான் நீங்கள் அனைத்திலும் நிலமும், நீரும், தீயும், காற்றுமே மறைந்திருக்கிற காரணம் பற்றி அந்த நான்கையும் நான்மறை என்கிற தலைப்பில் அழைத்தனர் தமிழ்முன்னோர். 15. நான்மறைகள் விண்ணில் இறைந்து கிடக்கிற காரணம் பற்றியும், அவைகள் ஆற்றல்மூலங்கள் என்கிற காரணம் பற்றியும், அவற்றுக்கு இறை என்றும் தலைப்பிட்டனர் தமிழ் முன்னோர். 16. இறைகள் என்கிற நான்மறைகளால் உருவான அனைத்தும் கூட்டியக்கங்கள் என்கிற காரணம் பற்றி தனிஒன்றுகளுக்கு மட்டும் வெளியில் மட்டுமே அமைந்த இடம் என்கிற வெளி- நான், நீங்கள் உள்ளிட்ட அனைத்து கூட்டியக்கங்களுக்கும் கடந்தும் உள்ளும் அமைகிற காரணம் பற்றி அந்த இடத்தைக் கடந்தும் உள்ளும் அமைந்தது என்கிற பொருளில் கடவுள் என்று நிறுவினர் தமிழ்முன்னோர். 17. நிலம், நீர், தீ, காற்று என்கிற நான்மறைகள் இறை. விசும்பு என்கிற வெளி கடவுள். இறையும் கடவுளும் ஆற்றல் மூலங்கள். 18. கடவுளுக்கு தான்தோன்றி இயக்கம் கிடையாது. நம்முடைய இயக்கத்தைப் பெற்று நாம் கொடுத்த இயக்கத்திற்கு எதிர் இயக்கமாக நம்மை முயக்குவது. 19. முதலெனப்படுவதில் உள்ள காலத்தில், அதன் அடுத்த நிலையான நான்மறையில், புவிக்கோளில், நிலவாழ் உயிரிகளில் ஆறறவு பெற்ற மனிதரில், ஒரு கூட்டியக்கம் குமரிநாடன் என்கிற நான். 20. எனது செயல், எனது எண்ணம், என்னுடைய பேச்சும் எழுத்துமான என்னுடைய தமிழ்- ஒவ்வொரு தற்பரை நேரமும் கடவுளில் பதிவாகிறது.  21அந்தப் பதிவில் என்னுடைய தேவையைப் புரிந்து கொண்டு, அந்த தேவைகளை எனக்கு நிறைவேற்றித் தரும் நோக்த்திற்கு இயற்கையின் அனைத்தையும் முயக்குகிறது கடவுள். ஆம்! என்னுடைய தலையெழுத்தை நானே எழுதிக் கொள்கிறேன். 22. நான் மகிழ்ச்சியைக் கொண்டாடுகிறவாக இருந்தால் எனக்கு மகிழ்;ச்சியை மட்டும் ஒருங்கிணைக்கிறது கடவுள். 23. நான் புலம்பலைக் கொண்டாடுகிறவாக இருந்தால் நான் புலம்பிக் கொண்டே இருக்கும் வகைக்கு ஒட்டு மொத்த இயற்கையையும் ஒருங்கிணைக்கிறது கடவுள்.
 

 
                                            

