Show all

புதன்கிழமை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகுகிறார்!

இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட, அனைத்து கட்சி அவசர கூட்டத்தில், அதிபர் கோத்தபய ராஜபக்சே, ரணில் விக்கிரமசிங்கே உடனே பதவி விலக வேண்டும்; தற்காலிக அதிபராக பேரவைத்தலைவர் பொறுப்பேற்க வேண்டும்; அனைத்துக்கட்சி அடங்கிய இடைக்கால அரசு அமைய வேண்டும்; விரைவில் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் ஆகிய அம்சங்கள் வலியுறுத்தப்பட்டது.

26,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: இலங்கை கண்டுள்ள  பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருகிறது அல்லது மீள முடியும் என்பதற்கு எந்த நம்பிக்கையான தரவுகளும் கிடைக்கவில்லை.

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க முடியாத ஆட்சி அதிகாரத்திற்கு எதிராக இலங்கையில் சில மாதங்களுக்கு முன்பு மக்கள் போராட்டம் வெடித்தது. இதையடுத்து, இலங்கை தலைமைஅமைச்சர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்சே விலகினார். 

இலங்கையில் புதிய தலைமைஅமைச்சராக ரணில் விக்ரமசிங்கே இரு மாதங்களுக்கு முன்பு பதவியேற்றார். ஆனால், அவருக்கும் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க தோதுப்படவில்லை என்பது தௌ;ளத்தெளிவாகத் தெரிகிறது.

தற்போது மக்கள் அரசு எதிராக மீண்டும் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் தலைமைஅமைச்சர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இலங்கை நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது. போராட்டக்காரர்களுடன் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களும், மாணவர் அமைப்புகளும், பொதுமக்களும் கைகோர்த்துள்ளனர். அவர்களுடன் சேனையினர் சிலரும் இணைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிபர் மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்களை பாதுகாப்பு படையினரால் கட்டுப்படுத்த முடியவில்லை. மேலும், தலைமைஅமைச்சர் ரணில் விக்ரமசிங்கேவின் வீட்டையும் போராட்டக்காரர்கள் தீக்கிரையாக்கினர். போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் இலங்கை முழுவதுமே பதட்டமாக காணப்படுகிறது.

இதனிடையே, ரணில் விக்ரமசிங்கே அழைப்பின் பேரில், பேரவைத்தலைவர் தலைமையில் நாடாளுமன்ற அனைத்து கட்சியின் அவசர கூட்டம் நடைபெற்றது. அதில், அதிபர் கோத்தபய ராஜபக்சே, ரணில் விக்கிரமசிங்கே உடனே பதவி விலக வேண்டும்; தற்காலிக அதிபராக பேரவைத்தலைவர் பொறுப்பேற்க வேண்டும்; அனைத்துக்கட்சி அடங்கிய இடைக்கால அரசு அமைய வேண்டும்; விரைவில் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் ஆகிய அம்சங்கள் வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து, தலைமைஅமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக ரணில் விக்ரமசிங்கே அறிவித்தார். அனைத்துகட்சி ஆட்சி பொறுப்பேற்க வழிவகை செய்யும் பொருட்டும், மக்களின் பாதுகாப்பு கருதியும் தான் பதவியைவிட்டு விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிபர் கோத்தபய ராஜபக்சே வருகிற புதன் கிழமை பதவி விலக முடிவு செய்துள்ளதாக இலங்கை பாராளுமன்ற பேரவைத்தலைவர் மகிந்த அபேவர்தா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். முன்னதாக, போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைந்ததையடுத்து, அங்கிருந்து தப்பியோடிய கோத்தபய ராஜபக்சே கமுக்க இடத்தில் பதுங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,305.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.