Show all

இது கதையல்ல உண்மை! தன்னை போலவே உருவம் கொண்ட பெண்ணை தேடிப்பிடித்து கொலை செய்தது ஏன்? எப்படி?

செருமானியத் தோற்றக்கலை அழகி ஒருவர், தன்னை போலவே உருவம் கொண்ட பெண்ணை தேடிப்பிடித்து கொலை செய்த முன்னெடுப்பில்- ஆறு மாதங்களுக்கு பின்பு விடை கிடைத்துள்ளது ஏன்? எப்படி? என்ற வினாக்களுக்கு காவல்துறையினரின் தீவிர விசாரணையில்.

19,தை,தமிழ்த்தொடராண்டு-5124: செருமானித்தைச் சேர்ந்த தோற்றக்கலை அழகி ஒருவர் தன்னை போலவே உருவம் கொண்ட பெண்ணை தேடிப்பிடித்து கொலை செய்த முன்னெடுப்பு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

ஜெர்மனியை சேர்ந்த 23 அகவை தோற்றக்கலை அழகி சகராபான், படவரி சமூக வலைதளத்தில் அழகு குறிப்புகளை வழங்கும் பேரறிமுகராக வலம் வந்தார். திருமாணமாகி மணவிலக்கு பெற்ற இவர் 24 அகவை சேகிர் கே என்ற இளைஞரை காதலித்து வந்தார். இந்த சூழலில் ஆறு மாதங்களுக்கு முன்பு சகராபான் தன் பெற்றோரிடம் தான் தனது முன்னாள் கணவரை சந்திக்கப்போவதாக கூறி விட்டு வீட்டில் இருந்து சென்றார். ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. 

இதுகுறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காணாமல்போன சகராபானைக் காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். அப்போது இங்கோல்ஸ்டாட் என்ற நகரில் சகராபானின் காரை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். 

அந்தக் காருக்குள் இளம்பெண் ஒருவர் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்தார். காருக்குள் கிடந்த இறந்திருந்த பெண் அச்சு அசலாக சகரபான் போலவே இருந்ததால் அது அவர்தான் என அவரது பெற்றோரும், காவல்துறையினரும் நம்பினர். 

இதையடுத்து, காவல்துறையினர் அந்த உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்துவிட்டு சகரபானின் கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்க தொடங்கினர். இதற்கிடையில் உடற்கூறு ஆய்வில் காருக்குள் இறந்து கிடந்தது சகரபான் அல்ல என்பது தெரியவந்தது. மேலும் கொலை செய்யப்பட்ட அந்த பெண் ஜெர்மனியை சேர்ந்ந மற்றொரு தோற்றக்கலை  அழகியான 23 அகவை கதீட்ஜா ஓ என்பதும் தெரியவந்தது. 

அதை அறிந்த காவல்துறையினர் கடும் அதிர்ச்சியடைந்தனர். கதீட்ஜா எப்படி கொலை செய்யப்பட்டார்? அவரது உடல் காணாமல்போன சகரபானின் காருக்குள் எப்படி வந்தது? சகரபான் சாகவில்லை என்றால் அவர் என்ன ஆனார்? என பல்வேறு கேள்விகள் எழுந்தன. இதுப்பற்றி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியும் எந்த துப்பும் துலங்கவில்லை. இதனால் இந்த மாறுபாடான வழக்கை விசாரிப்பது காவல்துறையினருக்கு பெரும் அறைகூவலாக அமைந்தது.

இந்த நிலையிம் தற்போது இந்த வழக்கில் தற்போது துப்பு துலங்கியுள்ளது. காணாமல் போன தோற்றக்கலை அழகி சகரபான் படவரியில் பல போலி கணக்குகளை பயன்படுத்தி வந்தது காவல்துறையினருக்குத் தெரியவந்தது. 

அதுகுறித்து தீவிரமாக விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. தோற்றக்கலை அழகி சகரபான் குடும்பச் சிக்கல்களில் இருந்து தப்பிக்க தான் இறந்துவிட்டதாக நாடகம் ஆட முடிவு செய்தார். அதற்கு தன்னை போலவே உருவ ஒற்றுமை கொண்ட பெண்ணை தேடி கொலை செய்து, தான் இறந்துவிட்டதாக பெற்றோரையும், காவல்துறையினரையும் நம்ப வைக்க அவர் திட்டம் திட்டினார். இந்த சதியில் தனது காதலரையும் அவர் கூட்டு சேர்த்துக்கொண்டார். 

அவர்கள் இருவரும் சகரபானை போலவே உருவ ஒற்றுமை கொண்ட பெண்ணை தேடிவந்தனர். இதற்காக சகரபான் படவரியில் பல போலி கணக்குகளை தொடங்கி தன்னை போன்ற பெண்ணை தேடினார். அப்போதுதான் தோற்றக்கலை அழகி கதீட்ஜா, சகரபானின் வலையில் சிக்கினார். 

கதீட்ஜாவுடன் படவரியில் இயல்பாகப் பேசி பழகிய சகரபான் அவருக்கு அவ்வப்போது அழகுக்கலைப் பொருட்களை வழங்கி வந்தார். அப்படி ஒரு நாள் அழகுக்கலை பொருட்களை தருவதாக கூறி கதீட்ஜாவை சகரபான் நேரில் அழைத்துள்ளார். அதை நம்பி சென்ற கதீட்ஜாவை சகரபான் மற்றும் அவரது காதலர் சேகிர் காரில் அழைத்து சென்றனர். அப்போது ஆள்நடமாட்டம் இல்லாத வனப்பகுதியில் காருக்குள் வைத்து கதீட்ஜாவை இருவரும் குத்திக்கொலை செய்தனர். முகம் அடையாளம் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக சகரபான், கதீட்ஜாவின் முகத்தில் 50க்கும் மேற்பட்ட முறை கத்தியால் குத்தி முகத்தை சிதைத்தார். பின்னர் சகரபானும், அவரது காதலரும் காரை ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு தலைமறைவாகினர். 

திரைப்படக் கதையை மிஞ்சும் இந்த பதபதைக்கும் கொலை முன்னெடுப்பு நடந்து 6 மாதங்களுக்கு பிறகு தற்போதுதான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனையடுத்து, சகரபானையும், அவரது காதலரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,512.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.