Show all

இந்தியாவுக்கு என்ன இடமாக இருக்கும்? உலகிலேயே பெண்களுக்கு அதிக ஆபத்து நிறைந்த நாடுகள் பற்றிய ஆய்வில்

12,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியாவுக்கு என்ன இடமாக இருக்கும்? உலகிலேயே பெண்களுக்கு மிக அதிக ஆபத்து நிறைந்த நாடுகள் பற்றிய ஆய்வில்!

அப்படி மனதில் அசை போட்டுக் கொண்டே இந்த ஆய்வு விவரத்தைப் படியுங்கள்.

இங்கிலாந்தில் தாமஸ் ராய்ட்டர்ஸ் தொண்டு நிறுவனம் சார்பில் உலகில் உள்ள 193 நாடுகளில் பெண்களுக்கு ஆபத்து நிறைந்த நாடுகள் பற்றிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.

இதற்காக ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா கண்டங்களிலும் மற்றும் தென்கிழக்கு ஆசியா, தெற்காசியா மற்றும் பசிபிக் பகுதிகளில் உள்ள சிலரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.

அதில் பாலியல் தொழிலில் அடிமை மற்றும் பணிப்பெண் சேவை உள்ளிட்டவைக்காக பெண்களை கடத்துதல் மற்றும் கட்டாயத் திருமணம், கல் எறிந்து கொல்லுதல் மற்றும் பெண் சிசு கொலை உள்ளிட்ட நடைமுறைகளால் பெண்களுக்கு மிக அதிக ஆபத்து நிறைந்த நாடுகளின் வரிசையில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது.

இந்தியாவில் பெண்களை புறந்தள்ளுவது மற்றும் அவர்களுக்கு உரிய மரியாதையை மறுப்பது ஆகியவை அதிகம் உள்ளது.  கற்பழிப்பு, பாலியல் தொல்லை மற்றும் துன்புறுத்தல், பெண் சிசு கொலை ஆகியவை குறையாமல் உள்ளன.

இந்த வரிசையில் போரால் சீரழிந்த நாடுகளான ஆப்கானிஸ்தான் 2-வது இடமும், சிரியா 3-வது இடமும் பெறுகின்றன.  தொடர்ந்து பஞ்சம் நிறைந்த நாடான சோமாலியா 4-வது இடத்திலும், சவூதி அரேபியா 5-வது இடத்திலும் உள்ளன.

உலகளவில் பெண்களை கடத்துவோர் ஆண்டு ஒன்றிற்கு ரூ.10 லட்சத்து 23 ஆயிரத்து 225 கோடி அளவிற்கு வர்த்தகம் மேற்கொள்கின்றனர் என மதிப்பிடப்பட்டு உள்ளது.

இந்தியாவில் அரசு ஆவண தகவல்களின்படி, கடந்த பத்து ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 83 விழுக்காடுகள் உயர்ந்துள்ளன.  ஒவ்வொரு மணிநேரத்திற்கும் 4 பேர் கற்பழிக்கப்படுகின்றனர் என தகவல்கள் பதிவாகி உள்ளன.

கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இதே ஆய்வில் ஆப்கானிஸ்தான், காங்கோ ஜனநாயக குடியரசு, பாகிஸ்தான், இந்தியா மற்றும் சோமாலியா ஆகிய நாடுகள் இருந்தன.

ஆப்கானிஸ்தானில் 17 வருட தலீபான்களுக்கு எதிரான போரால் பெண்கள் மற்றும் சிறுமிகளின் வாழ்க்கை ஆபத்தில் உள்ளது.  அவர்கள் பாலின அடிப்படையிலான வன்முறை, பாலியல் துன்புறுத்தல், கல்வியறிவு இன்மை, வறுமை மற்றும் பிற மனித உரிமைகள் குற்றங்களால் கடுமையான பாதிப்பிற்கு ஆளாகின்றனர்.

7 ஆண்டு போர் சூழலில் சிக்கிய சிரியாவில் ஆரோக்கியம் மற்றும் பாலியல் மற்றும் பாலியல் அல்லாத வன்முறைக்கு அவர்கள் இலக்காகின்றனர்.  அரசு படைகளால் பெண்களுக்கு பாலியல் வன்முறை ஏற்படுகிறது.  குழந்தை திருமணம் அதிகரித்து உள்ளதுடன், குழந்தை பிறக்கும்பொழுது அதிக அளவில் பெண்கள் உயிரிழக்கின்றனர்.

4-வது இடம் வகிக்கும் சோமாலியாவில் 20 ஆண்டு போரால் வன்முறை கலாசாரம் பெருகி உள்ளது.  இது மீண்டும் முதல் 5 இடங்களில் ஒன்றாக இடம் பிடித்துள்ளது.

5-வது இடம் வகிக்கும் சவூதி அரேபியாவில் சமீப ஆண்டுகளில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது.  ஆனால் பெண்கள் வாகனங்கள் ஓட்ட விதித்திருந்த தடை ரத்து செய்யப்பட்ட நிலையிலும், பெண் சமூக ஆர்வலர்களின் சமீபத்திய கைது நடவடிக்கைகளால் அங்கு இன்னும் முன்னேற்றம் ஏற்பட வேண்டிய தேவை உள்ளது.

இந்த முதல் 10 பட்டியலில் மேற்கத்திய நாடுகளில் ஒன்றான அமெரிக்காவும் இடம் பிடித்துள்ளது.  இவற்றில் முதல் 10 நாடுகளில் பாகிஸ்தான், காங்கோ ஜனநாயக குடியரசு, ஏமன் மற்றும் நைஜீரியா ஆகிய மற்ற நாடுகளும் இடம் பிடித்துள்ளன.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,830.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.