Show all

பதிவிட்டார் ஒரு ஆய்வு மாணவி- பாராட்டினார் சுந்தர்பிச்சை! பதிவு: தேர்வில் சுழியம் வாங்குவது உங்களது திறனுக்கான மதிப்பீடு அல்ல

“தேர்வில் சுழியம் வாங்குவது உங்களது திறனுக்கான மதிப்பீடு அல்ல” என்று ஓர் ஆய்வுமாணவி குறிப்பிட்டிருந்தார். கூகுள் தலைவர் சுந்தர் பிச்சை, சிறப்பாகச் சொன்னீர்கள். மிகவும் ஊக்கமளிக்கிறது எனப் பாராட்டியுள்ளார்.

06,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: சரபினா நான்ஸ் உலகின் உயர்மட்ட நிறுவனங்களில் ஒன்றான பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வான் பரியியலில் முனைவர் பட்டதிற்காக ஆய்வு செய்து வருகிறார். 26அகவை நான்ஸ்  வான் பரியியலில் மீயொளிர் விண்மீன் வெடிப்புகளை (சூப்பர்நோவா) ஆராய்ச்சி செய்து வருகிறார்.

மீயொளிர் விண்மீன் வெடிப்பு என்பது அளவில் பெரிய விண்மீன்கள் தம் எரிபொருள் எரிந்து தீர்ந்தபின் மாபெரும் அளவில் ஒளியாற்றலை வீசி பேரொளியுடன் வெடிப்பதை குறிக்கும். குறைந்த கால அளவிலே உணரக்கூடிய (சில கிழமைகள் அல்லது மாதங்கள்) இத்தகைய ஒளிர்வு ஆற்றல், ஞாயிற்றுக்கோள் தன் வாழ்நாள் முழுவதும் வெளியிடக்கூடிய மிகப்பெரும் ஆற்றலைவிட அதிகமானது என்கின்றார்கள். இத்தகைய வெடிப்பின் மூலம் சிதறும் விண்மீன் எச்சங்கள் ஒளியின் வேகத்தில் (வினாடிக்கு 186000 மைல்கள்) பத்தில் ஒரு மடங்கு வேகம் வரையிலும் கூட சிதறுகின்றன. மேலும் வெடிப்பின் அதிர்வலைகள் விண்மீன் மண்டலத்தின் முழுவதும் பரவ வல்லவை.

அளவில் பெரிய விண்மீன்கள் தம் பரிணாம வளர்ச்சியின் முடிவில் அவற்றில் உள்ள எரிபொருள் எரிந்து தீர்ந்தபின் தம் ஈர்ப்பு விசையில் மாற்றம் ஏற்படுவதனால் நொதுமி விண்மீனாகவோ அல்லது கருங்குழியாகவோ மாறுகின்றன. இம்மாற்றத்தை அடையும் முன் அவற்றின் வெளிப்பகுதி ஈர்ப்பு நிலை ஆற்றலால் வெடித்து சிதறுகின்றது.

சரபினா நான்ஸ் என்ற பெண் அவரது ‘அணு பரியியில்’ (குவாண்டம் பிசிக்ஸ்) தேர்வில் சுழியம் மதிப்பெண் பெற்றதாகவும் அதற்குப் பின்னர் தனது துறையை மாற்றி வான் பரியியல் (ஆஸ்ட்ரோ பிசிக்ஸ்) துறையில் சிறந்து விளங்குவதாகவும் குறிப்பிட்டிருந்தார். “தேர்வில் சுழியம் வாங்குவது உங்களது திறனுக்கான மதிப்பீடு அல்ல” என்றும் அந்த மாணவி குறிப்பிட்டிருந்தார்.

மாணவியின் இந்த கீச்சுப் பதிவை தனது பக்கத்தில் பகிர்ந்த கூகுள் தலைவர் சுந்தர் பிச்சை, சிறப்பாகச் சொன்னீர்கள். மிகவும் ஊக்கமளிக்கிறது எனப் பாராட்டியுள்ளார். இந்த மாணவியின் பதிவு இணையத்தில் விருப்பங்களை அள்ளி வருகிறது. பகிர்வுகளை வாரி இறைக்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,344.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.