Show all

தென்னாப்பிரிக்காவில் காந்தியார் நினைவுகளை அசைபோட்ட மோடி

மோகன்தாஸ் காந்தி, மகாத்மாவாக உருவாகுவதற்கான விதை தூவப்பட்ட இடம், தென்னாப்பிரிக்காவில் உள்ள பீட்டர்மேரிட்ஸ்பர்க் தொடர்வண்டி நிலையம்தான் என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

 

பிரிட்டனின் கட்டுப்பாட்டின்கீழ் தென்னாப்பிரிக்கா இருந்தபோது, கடந்த 1893-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7-ஆம் தேதி டர்பனில் இருந்து பிரிட்டோரியாவுக்கு தொடர்வண்டி மூலம் மகாத்மா காந்தி பயணம் மேற்கொண்டார்.

 

இதற்காக முதல் வகுப்பு பயணச் சீட்டை அவர் எடுத்திருந்தார். ஆனால், காந்தி தொடர்வண்டியில் முதல் வகுப்பில் பயணம் செய்வதற்கு வௌ;ளையர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தார். காந்தியை 3-ஆம் வகுப்பு பெட்டிக்கு செல்லும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

 

ஆனால், காந்தி செல்லவில்லை. இதையடுத்து, பீட்டர்மேரிட்ஸ்பர்க் தொடர்வண்டி நிலையத்தில் காந்தி தொடர்வண்டியில் இருந்து தள்ளிவிடப்பட்டார். அதைத் தொடர்ந்து, அந்தத் தொடர்வண்டி நிலையத்திலேயே காந்தி இரவு முழுவதும் தங்கியிருந்தார்.

 

அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பத்தை இந்தச் சம்பவம் ஏற்படுத்தியது. இதையடுத்தே, தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக காந்தி போராட்டத்தைத் தொடங்கினார். பிறகு, இந்தியா திரும்பி வந்து விடுதலை போராட்டத்துக்கு தலைமை தாங்கினார்.

 

இந்நிலையில், தென்னாப்பிரிக்காவில் 2-ஆவது நாளாக சனிக்கிழமை சுற்றுப்பயணம் செய்த பிரதமர் மோடி, காந்தி ரயிலில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்ட பீட்டர்மேரிட்ஸ்பர்க் தொடர்வண்டி நிலையத்துக்கு சென்றார். பீட்டர்மேரிட்ஸ்பர்க் தொடர்வண்டி நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்பவர், மகாத்மாவாக உருவாகுவதற்கான விதை தூவப்பட்ட இடம் இதுதான்

எனத் தெரிவித்தார்.

 

அதையடுத்து, ரயில் நிலையத்தில் காந்திக்கு மோடி மரியாதை செலுத்தினார். அப்போது அவர் கூறுகையில், தென்னாப்பிரிக்காவில் நான் மேற்கொண்ட பயணமானது, புனித யாத்திரையாக மாறிவிட்டது

என்றார்.

 

பின்னர், தொடர்வண்டி நிலையத்தில் உள்ள பதிவேட்டில் தனது கருத்துகளை மோடி பதிவு செய்தார். அதில் அவர், பீட்டர்மேரிட்ஸ்பர்க் தெடர்வண்டி நிலையத்தில் நடந்த சம்பவமே, இந்திய வரலாற்றை மாற்றியமைக்கக் காரணமாக அமைந்தது எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

அதைத் தொடர்ந்து, பீட்டர்மேரிட்ஸ்பர்க் தெடர்வண்டி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காந்தி தங்கியிருந்த அறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியை மோடி தொடங்கி வைத்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.