Show all

கோத்தபய ராஜபக்சே தப்பியது எப்படி!

அதிபர் மாளிகையில் ஒரு பதுங்கு குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலியான கதவுடன், பூமிக்கு அடியில் தூக்கி (லிப்ட்) மூலம் சென்றடைகிற வகையில் இந்த பதுங்கு குழி அமைக்கப்பட்டுள்ளது. எனவே இந்தப் பதுங்கு குழியின் வழியாக அதிபர் கோத்தபய ராஜபக்சே தப்பினாரா என்ற புதிய கேள்வி எழுந்துள்ளது. 

27,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: இலங்கையின் பொருளாதார நெருக்கடி, அந்த நாட்டின் அரசியல் நெருக்கடிக்கும் வழிவகுத்து, ஆட்சியாளர்களைத் தோலுரித்துத் தொங்கவிட்டுக் கொண்டிருக்கிறது.

மகிந்த ராஜபக்சே தலைமைஅமைச்சர் பதவியில் இருந்து விலகினாலும், அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகாமல் ஏமாற்றிக் கொண்டிருந்தது மக்களின் உச்சநிலை சினத்தைத் தூண்டியுள்ளது.

அதிபர் கோத்தபயாவும், மாற்று தலைமைஅமைச்சரான ரணிலும் பதவி விலகியாக வேண்டும் என்கிற முழுக்கத்தோடு, கொழும்பு நகரில் அமைந்துள்ள அதிபர் மாளிகை முன் பல்லாயிரக்கணக்கானோர் அணி, அணியாக திரண்டதும், தடுப்பு வேலிகளை தகர்த்தெறிந்து அதிபர் மாளிகைக்குள் நுழைந்து வசப்படுத்தி ஆர்ப்பரித்ததும் சமூக வலைத்தளங்களில் காணொளிக் காட்சிகளாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.


மக்களவைத்தலைவர் மகிந்த யாப்பா அபேவர்த்தனே தலைமையில் அவசரமாக கூடிய அனைத்துக்கட்சி கூட்டம், அதிபர் கோத்தபய ராஜபக்சேயும், பிரதமர் ரணில் விக்ரம சிங்கேயும் பதவி விலக வேண்டும், அனைத்துக்கட்சி அரசு பதவி ஏற்க வேண்டும் என்று முடிவு எடுத்தது. 

இந்த நிலையில் ரணில் விக்ரம சிங்கே பதவி விலகுகினார். அதிபர் கோத்தபய ராஜபக்சே புதன்கிழமை பதவி விலகுவதாக ஒப்புக்கொண்டுள்ளார். இதை அதிபருடன் தொடர்பில் உள்ள மகிந்த யாப்பா அபேவர்த்தனே தெரிவித்துள்ளார்.

மாற்று தலைமைஅமைச்சர் ரணில் விக்ரமசிங்கேயின் மாளிகைக்கு போராட்டக்காரர்களில் சிலர் தீ வைத்ததில் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளதைக் காட்டும் காணொளிப் பதிவை தனது கீச்சுப் பக்கத்தில் உள்ளூர் ஊடகம் ஒன்று வெளியிட்டது. 

இந்த நிலையில், அதிபர் மாளிகை பொதுமக்களால் முற்றுகை இடப்பட்டு, அவர்களின் குளித்தல், சாப்பிடுதல், விளையாட்டு என்கிற வாழ்க்கை அங்கேயே முன்னெடுக்கப்பட்டது. 

இலங்கை மக்கள் அன்றாட வாழ்வாதாரத்துக்கு அல்லாடுகின்ற சூழ்நிலையில், அதிபர் மாளிகையின் கமுக்க அறையில் கட்டு, கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை போராட்டக்காரர்கள் கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். அந்த பணத்தை அவர்கள் கைப்பற்றினர்.

மொத்தம் ரூ.1 கோடியே 78 லட்சத்து 50 ஆயிரம் சிக்கியதாகவும், அந்த பணத்தை உள்ளூர் காவல்துறையினரிடம் அவர்கள் ஒப்படைத்து விட்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

நேற்று 2-வது நாளாக அதிபர் மாளிகைக்கு மக்கள் அலை, அலையாக வந்து, ஆர்ப்பரித்தனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகாதவரையில், அதிபர் மாளிகையில் இருந்து வெளியேறப்போவதில்லை என்பதில் போராடும் மக்கள் உறுதியுடன் உள்ளனர்.

இதற்கிடையே இலங்கையின் முதலீட்டுத்துறை அமைச்சர் தம்மிகா பெரைரா நேற்று பதவி விலகினார். பதவி ஏற்ற ஒரு மாதத்திற்குள் அவர் பதவி விலகி உள்ளார். இதேபோன்று இந்தியா அனுப்பிய யூரியா உரத்தை ஏற்றுக்கொண்ட சிறிது நேரத்தில், வேளாண்அமைச்சர் மகிந்த அமரவீரா பதவி விலகியுள்ளார். ஏற்கனவே ஹரின் பெர்னாண்டோ, மனுச நாணயக்காரா, பந்துல குணவர்த்தனே ஆகிய 3 அமைச்சர்கள் பதவி விலகியுள்ளனர்.

இலங்கையில் பொதுமக்கள் கிளர்ச்சியால் தொடர்ந்து அமைதியற்ற சூழல் தொடர்கிறது. இந்த நிலையில், நாட்டில் அமைதியை நிலைநாட்ட பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று இலங்கைசேனை நேற்று கேட்டுக்கொண்டுள்ளது.

இதையொட்டி சேனைத்தலைவர் சவேந்திர சில்வா வெளியிட்ட அறிக்கையில், 'தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை அமைதியான முறையில் தீர்த்து வைப்பதற்கு ஒரு சந்தர்ப்பம் உருவாகி உள்ளது. நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதை உறுதிப்படுத்துவதற்கு அனைத்து இலங்கை மக்களும் ஆயுதப்படைகள் மற்றும் போலீசாருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்' என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இவைகளுக்கு எல்லாம் ஊடாக, அதிபர் கோத்தபய ராஜபக்சே எங்கே ஓட்டம் பிடித்தார் என்பது இன்னும் மர்மமாக உள்ளது. அவர் கொழும்பு பன்னாட்டு விமான நிலையத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த தனி விமானம் மூலம் வெளிநாட்டுக்கு தப்பியதாக ஒரு தகவல் வெளியானது. மற்றொரு தகவல் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த போர் கப்பல்களில் கடற்படை பாதுகாப்புடன் இருப்பதாக தெரிவித்தது.

ஆனால் இப்போது அதிபர் மாளிகையில் ஒரு பதுங்கு குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலியான கதவுடன், பூமிக்கு அடியில் தூக்கி (லிப்ட்) மூலம் சென்றடைகிற வகையில் இந்த பதுங்கு குழி அமைக்கப்பட்டுள்ளது. இந்த பதுங்கு குழியை அதிபர் மாளிகை சிறப்பு பாதுகாப்பு படையினர் உறுதி செய்தனர். எனவே இந்த பதுங்கு குழியின் வழியாக அதிபர் கோத்தபய ராஜபக்சே தப்பினாரா என்ற புதிய கேள்வி எழுந்துள்ளது. 

இலங்கையின் அரசியல் நெருக்கடிக்கு விரைந்து நீண்ட கால தீர்வுகளை விரைவாக காணுமாறு இலங்கை அரசியல் தலைவர்களை அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் நேற்று கூறுகையில், 'நாட்டின் நலன்களை கருத்தில் கொண்டு அர்ப்பணிப்புடன் இதை அணுகுமாறு இலங்கை நாடாளுமன்றத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம். தற்போதைய அரசோ அல்லது அரசியல் சாசனப்படி புதிதாக தேர்வு செய்யப்படுகிற அரசோ நீண்ட கால பொருளாதார நிலைப்பாட்டு வாய்ப்பை மீண்டும் கொண்டு வரும் தீர்வுகளை கண்டறிந்து, விரைவாக செயல்படுத்த வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,306.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.