Show all

வல்லரசுகளின் போட்டா போட்டி! சிரியாவில் ரஷ்யப் படை தாக்குதலால் பொதுமக்கள் 25 பேர் பலி

16,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தோண்ட தோண்ட பெட்ரோல் கிடைக்கும் நாடுகளில் சிரியாவும் ஒன்று. காய்த்த மரத்திற்கு கல்லடி என்பது போல அதுதான் அந்த நாட்டிற்கு அமைந்த சாபக்கேடு.

இரண்டு கோடிகளுக்கு குறைவான மக்கள் தொகையுடைய சிரியா மக்களில் 74 விழுக்காட்டு பேர்கள் இஸ்லாத்தின் சன்னிப் பிரிவைச் சேர்ந்தவர்கள். 13 விழுக்காட்டு பேர்கள் சியா மற்றும் அதன் உட்பிரிவைச் சேர்ந்தவர்கள். கிறித்துவர்கள் மற்றும் சிரியாவின் ஆதி இனத்தவர்கள் 10 விழுக்காட்டு பேர்கள். 3 விழுக்காட்டினர் ட்ரூஸ் இனத்தவர். 

சிரியாவில் சிறுபான்மை சியா பிரிவைச் சேர்ந்த அதிபர் ஆசாத்துக்கும் பெரும்பான்மை சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த பல்வேறு கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே 6 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடைபெறுகிறது.  அதிபர் ஆசாத்துக்கு உதவியாக ரஷ்யப் படைகள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. கிளர்ச்சி படைகளுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ஆதரவாய் உள்ளன.

மேலும்,  ரசாயன ஆயுதங்களை அழிப்பதற்காக, அமெரிக்க ராணுவத்தினர் கடந்த 3 மாதங்களாக அங்கு முகாமிட்டுள்ளனர். மேலும், அந்நாட்டில் உள்ள ரசாயன ஆலைகள், ஐஎஸ் தீவிரவாத முகாம்கள் மீதும் அமெரிக்கப் படையினர் அவ்வப் போது வான்வழித் தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறார்கள். இதில் ஏராளமான அப்பாவி மக்களும் பலியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

சிரியாவில் ரஷ்யப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில்  25 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். இதுகுறித்து லண்டனை தலைமையகமாக  கொண்டு செயல்படும் சிரிய கண்காணிப்பு குழு கூறும்போது, சிரிய அதிபர் பசார் அல் ஆசாத் தலைமையிலான  ரஷ்யப் படைகள் சிரியாவின் தென் பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் வியாழக்கிழமை ரஷ்யப் படைகள் அல் செப்ரா பகுதியில் நடத்திய தாக்குதலில் பொது மக்கள் 25 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலியானவர்களில் குழந்தைகளும் அடங்குவர் என்று கூறியுள்ளது.

சிரியாவின் இந்த ரத்தம் உறையவைக்கும் போரின் பின்னணியில் பல சர்வதேசக் கரங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஆசாத்துக்கு எதிராக சிரியா தலைநகர் டமாஸ்கஸில் பல்லாயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினார்கள.; அந்தச் சமயத்தில் எகிப்து, லிபியா, ஜோர்டான், சூடான், ஓமன், மொராக்கோ, பஹ்ரைன், துனிஷியா போன்ற அண்டை நாடுகளிலும் மக்கள்புரட்சி வெடித்துக்கொண்டிருந்தது. மக்கள் புரட்சியால் துனிஷியாவில் ஆட்சி மாற்றமே வந்தது. சிரியாவில் இந்தச் சூழலை இப்படியே விட்டுவிட்டால் நாளை துனிஷியாவின் நிலைதான் நமக்கும் என்று மக்கள்மீது பசர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தத் தொடங்கினார். மக்களும் பசருக்கு எதிராகப் போராடிக்கொண்டே இருந்தனர்.

மத்தியக் கிழக்கு நாடுகளில் சவூதி அரேபியா, இஸ்ரேல், கத்தார், போன்ற நாடுகள் அமெரிக்காவின் மிக நெருங்கிய நட்பு நாடுகள். அமெரிக்காவைக் கேட்காமல் இந்த நாடுகள் எதுவும் செய்யாது. ஈராக்கைப் போலவே சிரியாவும் எண்ணெய்க் கிணறுகளால் வளம் கொழிக்கும் நாடு. இது ஒன்றே வல்லரசு நாடுகளுக்குப் போதுமானதாக இருந்தது. ஆசாத்தின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர சிரியாவில் ஏற்கெனவே பல இயக்கங்கள் உருவாகின. அதில் முக்கியமானவர்கள் குர்து இனமக்கள். இவர்களுக்குக் குடியுரிமையே இல்லாத நிலை. அதனால் சிரியாவுக்கு எதிராகப் போராட எந்த நேரமும் தயாராக இருந்தார்கள், மற்றொரு பக்கம் சுதந்திர சிரியன் ராணுவம் ஆசாத் ராணுவத்தில் பணியாற்றிய சில உயரதிகாரிகள் இணைந்து இந்த அமைப்பை உருவாக்கினார்கள். பல ராணுவ வீரர்கள், காவல்துறை அதிகாரிகள், இளைஞர்கள் எனப் பலரும் இந்த அமைப்பில் தங்களை இணைத்துக்கொண்டார்கள். இதன் நோக்கம் ஆசாத்துக்கு எதிராகச் செயல்பட்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதே. சிரியா அரசுக்கு எதிரான இயக்கங்கள் அத்தனை பேரும்  துருக்கியில் கூட்டம் போட்டு சிரியன் தேசிய கவுன்சிலை தொடங்கினார்கள். இவர்களுக்கான அத்தனை ஆயுத உதவிகளும், பண உதவிகளும், அமெரிக்கா, சவூதி அரேபியா, இஸ்ரேல், துருக்கி போன்ற நாடுகளிடமிருந்து கிடைத்தன. அரசுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே ஆயுதப்போர் தொடங்கியது. இருபுறமும் துப்பாக்கித் தோட்டாக்கள், வெடிகுண்டுகள், ஆனால், இவர்களால் இறந்தவர்களில் அப்பாவிப் பொதுமக்களே அதிகம். சவூதி அரேபியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு பூமி வழியாக எரிபொருள் அனுப்புவதற்காகப் பல ஆண்டுகளாக சவூதி அரேபியாவுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்தத் திட்டத்தின்படி பூமிக்கடியில் குழாய்களைப் புதைத்து அதன் வழியாகக் கொண்டு செல்ல வேண்டும். ஆனால், அந்தக் குழாய்கள் சிரியாவின் பெரும்பகுதியைக் கடந்துதான் செல்ல வேண்டும் என்பதால் சிரியா அதற்கு அனுமதியளிக்கவில்லை. 

இத்தனை நாடுகள் சிரியாவுக்கு எதிராக இருக்க ரஷ்யா மட்டும் சிரியாவுக்கு ஆதரவாக இருக்கிறது. 

சிரியா என்கிற தேசம் அமெரிக்காவின் கைகளுக்குள் சென்றுவிடாமல் பார்த்துக்கொள்வதில் ரஷ்யா எச்சரிக்கையாக இருக்கிறது. உலக வரைபடத்தில் ரஷ்யாவிற்குக் கீழ்தான் சிரியா இருக்கிறது. அமெரிக்கா, சிரியாவைக் கைப்பற்றும் நிலையில் அது தங்களுக்கே பிரச்னையாக முடியும் என்பது ரஷ்யாவின் எண்ணம். அதனால் வலிந்து சென்று சிரியாவுக்கு உதவி செய்கிறது. இரண்டு நாடுகளும் நேரடியாகவே தங்களது ஆயுதத் தளவாடங்களை சிரியாவில் குவித்துவருவது இதற்கான அத்தாட்சி. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,834.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.