Show all

தமிழ்நாட்டில் இரண்டாவது முறையாக மீண்டும் மாபெரும் தடுப்பூசி முன்னெடுப்பு!

காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை தமிழ்நாட்டில் இரண்டாவது முறையாக மீண்டும் மாபெரும் தடுப்பூசி முன்னெடுப்பு நிகழ்த்தப் பெறுகிறது.

03,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை தமிழ்நாட்டில் மாபெரும் தடுப்பூசி முன்னெடுப்பு நிகழ்த்தப் பெறுகிறது.

தமிழ்நாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாபெரும் தடுப்பூசி முன்னெடுப்பின் போது, 28 லட்சத்து 91 ஆயிரம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இன்று நடைபெறும் 2-வது பேரளவு தடுப்பூசி முன்னெடுப்பில் 30 லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தத் தமிழ்நாடு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. 

இந்த முன்னெடுப்பு காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நிகழ்த்தப்பெறும் நிலையில், சென்னை மாநகராட்சியில் மட்டும் ஆயிரத்து 600 இடங்களில் சிறப்பு முன்னெடுப்புகள் நிகழ்த்தப்படவுள்ளன. 
தடுப்பூசி செலுத்திக் கொள்வது நமது பாதுகாப்புக்கு என்பதையும் தாண்டி, தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டும் போதாது. தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கு முறையான சான்றிதழ் பெற்று வைத்துக் கொள்ள வேண்டியது கட்டாயத் தேவை என்கிற தேவையும் இருக்கிறது.

சான்றிதழ்கள் இருந்தால் மட்டுமே வெளிநாடுகள் செல்ல முடியும் என்ற நிலை மாறி, தற்போது அண்டை மாநிலங்கள், தமிழகத்தில் குறிப்பிட்ட மாவட்டங்களுக்குள் கூட செல்ல தடுப்பூசி செலுத்திக் கொண்ட சான்றிதழ்கள் தேவை என்ற நிலை நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், பல்வேறு துறை சார்ந்த உற்பத்தி நிறுவனங்கள், விற்பனை நிறுவனங்கள் தங்களது தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ்கள் இருந்தால் வேலைக்கு வரலாம் என அறிவித்துள்ளன.

பள்ளிகளில் ஆசிரியர்கள், பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. இதனால் தடுப்பூசி செலுத்துவதோடு, அதற்கான சான்றிதழை பெறுவதும் கட்டாயம் என்றாகிவிட்டது.

இந்நிலையில், தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் ஆங்காங்கே பல பேர்கள், தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக செல்பேசிக்கு சேதி வரவில்லை, தடுப்பூசி செலுத்தியதற்கான  சான்றிதழை கோவின் செயலியில் பெறலாம் என்று முயற்சித்தால், தடுப்பூசியே போட்டுக் கொள்ளவில்லை என்று கோவின் செயலி தெரிவிக்கிறது, என புகார் தெரிவித்து வருகின்றனர்.

இவைகளுக்கான காரணத்தை தடுப்பூசி செலுத்திக் கொள்கிறவர்கள் தெரிந்து கொள்ள இங்கே சில விடையங்களைப் பதிவு செய்கிறோம்.

தடுப்பூசி போடச் செல்வதற்கு முன்னால் உங்கள் செல்பேசியில் கோவின் செயலி இருக்கிறதே என்பதற்காக தடுப்பூசிக்கு பதிவு செய்து கொள்ள வேண்டாம். அது தடுப்பூசி போடுகிற இடத்தில் அவர்கள் உங்களுக்கான தடுப்பூசி பதிவை மேற்கொள்ள முடியாத சூழலை ஏற்படுத்துகிறது. 

ஒருவேளை நீங்கள் தடுப்பூசிக்குப் பதிவு செய்திருந்தால், நீங்கள் தடுப்பூசிக்கு பதிவு செய்த அதே ஆவணத்தை தடுப்பூசி போடும் இடத்திற்கு கொடுக்காமல் வேறு ஆவணத்தை கொடுத்து பதிவு செய்தால் உங்களுக்கு அவர்கள் பதிவு செய்வதில் சிக்கல் எழாது. தடுப்பூசிக்கு ஆவணமாக ஆதார் மட்டுமல்ல, ஓட்டுநர் உரிமம், எல்லைக் கடவு, குடும்ப அட்டை ஆகியவற்றையும் பயன்படுத்த முடியும்.

முடிந்தவரை தடுப்பூசி பதிவில் ஆர்வக்கோளாறு வேண்டாம். நீங்கள் தடுப்பூசி செலுத்தி பனிரெண்டு மணி நேரத்தில் நீங்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டு விட்டீர்கள் என்ற சேதி உங்கள் செல்பேசிக்கு வராவிட்டால் அடுத்த நாளே நீங்கள் தடுப்பூசி செலுத்திய மையத்திற்குச் சென்று தீர்வு காணுங்கள். 

எது எப்படி இருந்தாலும் கொரோனா தடுப்பூசிப் பாட்டில் தமிழ்நாட்டில் அதிகாரிகள், களப்பணியாளர்கள். மருத்துவர்கள் சிறப்பாக ஒத்துழைக்கின்றனர் என்பது கொண்டாடி மகிழ வேண்டிய செய்தியாகும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,011.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.