Show all

கெட்டிக்காரன் புளுகு இரண்டு நாள்கூட தாங்கவில்லை!

கெட்டிக்காரன் புளுகு எட்டுநாளைக்கே என்பது ஒரு தமிழ்ப் பழமொழி. ஒரு பாஜக பேரறிமுகத்தின் புளுகு இரண்டு நாள்கூட தாங்கவில்லை என்பது இன்றைய நகைச்சுவை  செய்தியாகியுள்ளது.

04,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: தனது காரை தானே தீ வைத்து எரித்துவிட்டு அடையாளம் தெரியாத ஆட்கள் கொளுத்தியதாக நாடகமாடிய பாஜக பொறுப்பாளர் சதீஷ்குமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மதுரவாயல் பகுதியைச் சேர்ந்தவர் 48 அகவை சதீஷ்குமார். பாரதிய ஜனதா கட்சியின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளராக உள்ளார்.

இந்த நிலையில் வியாழக்கிழமை மாலை இவரது வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவருடைய கார் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதனை கண்டு அக்கம்பத்தினர் தண்ணீர் ஊற்றி தீயை கட்டுப்படுத்தினர்.

இதனை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்புப் படக்கருவியில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது அதில் ஒரு ஆணும் பெண்ணும் காரில் வந்து இறங்கி சதீஷ்குமாரின் கார் மீது பெட்ரோல் ஊற்றும் காட்சி பதிவாகி இருந்தது. அதற்கு கொஞ்சம் முன்னர், அவர்கள்- ஆட்கள் யாரும் வருகிறார்களா என்பதை சுற்றும் முற்றும் பார்க்கின்றனர்.

ஆட்கள் வருவதை கண்டதும் அவர்கள் காரின் உள்ளே சென்று உட்கார்ந்து கொள்வதும், ஆட்கள் சென்ற பின்பு வந்து காரை தீ வைத்து கொளுத்துவதும் அந்த கண்காணிப்பு படக்கருவி காட்சியில் தெளிவாகப் பதிவாகி இருந்தது. இந்த நிகழ்வு குறித்து மதுரவாயல் காவல்துறையினருக்குப் புகார் அளிக்கப்பட்டது.

நிகழ்வு இடத்திற்கு வந்த மதுரவாயல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அரசியல் பகையால் கார் கொளுத்தப்பட்டதா? சமூக விரோதிகள் யாரேனும் செய்தனரா? முன்பகை காரணமாக காருக்கு தீ வைத்தார்களா? என்ற கோணத்தில் கண்காணிப்புப் படக்கருவிக் காட்சியை கொண்டு அவர்கள் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையின் இறுதியில், காரை கொளுத்தியது பாஜக பொறுப்பாளர் சதீஷ்குமார்தான் என்பதை உறுதி செய்தனர். இதுகுறித்து அவரிடம் விசாரணை செய்ததில் காரை விற்றுவிட்டு மனைவி நகை வாங்கிக் கொடுக்கக்கேட்டு தொல்லை கொடுத்ததால் காரை எரித்ததாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து சதீஷ்குமாரை கைது செய்து காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கார் எரிக்கப்பட்ட வியாழக்கிழமை சென்னை கோயம்பேட்டில் நடைபெற்ற அம்பேத்காரின் பிறந்தநாள் விழாவில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த போது விடுதலை சிறுத்தைகள் - பாஜக இடையே மோதல் ஏற்பட்டது. அந்த நிகழ்வில் பங்கேற்ற சதீஷ்குமார் இரவு காரை தீவைத்து எரித்ததால், இதற்கு வேறு அரசியல் திட்டமிடல் காரணமாக இருக்குமா? என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,221. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.