Show all

இதழியலாளர்களைக் கண்ணியக்குறைவாக பேசிய அண்ணாமலைக்கு! எதிரான போராட்டத்தில் இதழியலாளர்கள்

மாற்றத்திற்கான ஊடகவியலாளர் மையம், சென்னை பத்திரிக்கையாளர் மன்றம், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் அண்ணாமலைக்கு எதிராக விமர்சனம் வைத்தன. 

17,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: இதழியலாளர்களைக் கண்ணியக்குறைவாக பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையைக் கண்டித்து சென்னையில் பல்வேறு இதழியலாளர்கள் சங்கங்கள் சார்பாக போராட்டம் நடத்தப்பட்டது.

ஒன்றியத் தலைமைஅமைச்சர் மோடியின் சென்னை வருகை குறித்தும், அதில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பேசியது குறித்தும் பாஜக தலைவர் அண்ணாமலை அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்து கருத்து தெரிவித்தார். முதல்வர் ஸ்டாலினின் உரையை திறனாய்வு செய்து அண்ணாமலை இந்த செய்தியாளர் சந்திப்பில் பேசினார்.

இதில் பல்வேறு வினாக்களுக்கு மறுப்பு அளித்த அண்ணாமலை செய்தியாளர் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நாகரிகமற்ற நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சாலை நடுவில் பாஜக கொடிகளை நட்டது குறித்து வினா  எழுப்பிய செய்தியாளர்களுக்கு- தவறுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டிய அண்ணாமலை, வினா எழுப்பிய செய்தியாளர்களைத் தாக்கி பேசினார். உங்களுக்கு அறிவாலயத்தில் இருந்து வர வேண்டிய 200 ரூபாய் வந்துவிடும் என்று அண்ணாமலை தமிழ்நாட்டு பாஜகவினருக்கே உரிய அருவருப்புக் கலச்சாரத்தை அள்ளி வீசினார். தொடர்ந்து செய்தியாளர் வினா எழுப்ப எழுப்ப.. உங்களுக்கு 1000 ரூபாய் வந்துவிடும்.. 2000 ரூபாய் வந்துவிடும் என்று கூறிக்கொண்டே சென்றார் அண்ணாமலை. அண்ணாமலையின் இந்தப் பேச்சு சர்ச்சையான நிலையில், செய்தியாளர்கள் அவருக்கு எதிராக கடும் விமர்சனங்களை வைத்தனர்.

மாற்றத்திற்கான ஊடகவியலாளர் மையம், சென்னை பத்திரிக்கையாளர் மன்றம், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் அண்ணாமலைக்கு எதிராக விமர்சனம் வைத்தன. 

இதற்கு பதில் அளித்த அண்ணாமலை, நீங்கள் என்னை புறக்கணிக்க வேண்டும் என்றால் புறக்கணிக்கலாம். ஆனால் நீங்கள் அறப்படி நடந்து கொள்கிறீர்களா என்று பார்த்துக்கொள்ளுங்கள் என்று விடாப்பிடியாக இதழியலாளர்களை இழிவு படுத்துவதில் இருந்து கொஞ்சமும் பின்வாங்கவேயில்லை.

இதற்கு விளக்கம் அளித்த மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம், நியாயமான கேள்வியை எழுப்பிய செய்தியாளரை இழிவுபடுத்தும் வகையிலும் அச்சுறுத்தும் வகையிலும் நடந்துகொண்ட நீங்கள் செய்தியாளர்களிடம் மன்னிப்பு கேட்கும் வரை உங்களை ஊடகங்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கையில் நாங்கள் உறுதியோடு இருக்கிறோம். 

செய்தியாளர்கள் மீது உங்களுக்கு அன்பும் பாசமும் உள்ளது என்று கூறியுள்ளீர்கள். நன்றி ஆமாம். நீங்கள் கூறியதுபோல ஒரு நாணயத்தில் இரண்டு பக்கம் உள்ளது. மரியாதை கொடுப்பதை பொறுத்துதான் அதை திரும்ப எதிர்பார்க்க முடியும். செய்தியாளர்களை அணுகிய விதம் தான், பலரை அறிவாளர்களாகவும், சிலரை கோமாளியாகவும் மாற்றியது தமிழக அரசியல் களம் என்பதை இந்த நேரத்தில் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம், என்று கூறியது.

அத்துடன் அண்ணாமலைக்கு எதிராக பல்வேறு இதழியலாளர்கள் சங்கங்கள் போராட்டங்களை அறிவித்தன. இந்த நிலையில் நேற்று மாலை இதழியலாளர்களைக் கண்ணியக்குறைவாக பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை கண்டித்து சென்னையில் பல்வேறு; இதழியலாளர்கள் சங்கங்கள் சார்பாக போராட்டம் நடத்தப்பட்டது. 

மூத்த இதழியலாளர்கள் பலர் அண்ணாமலையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கருத்துரிமையை,. கேள்வி கேட்கும் உரிமையை நசுக்க கூடாது, செய்தியாளர்களை அவமதிக்க கூடாது, அரசியல் அழுத்தங்களைத் தர கூடாது, நாவடக்கம் வேண்டும் என்பது உள்ளிட்ட முழகங்களை எழுப்பி போராட்டம் நடத்தப்பட்டது. அண்ணாமலை தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இந்த கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,265.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.