Show all

கடலூரில் மேலும் சில ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று!

கடலூர் பெண்கள் அரசு பள்ளி ஆசிரியருக்கு தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, நேற்று நெய்வேலி அருகே தனியார் பள்ளியைச் சேர்ந்த 2 ஆசிரியர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை 4 ஆசிரியர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

20,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: கடலூரில் கடந்த மூன்று நாட்களில் 4 ஆசிரியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்னரை ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் முழுமையாக திறக்கப்படாமல் இருந்தன. முதல் அலையின் தாக்கம் குறைந்தபோது ஒரு சில நாட்கள் மட்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன.

ஆங்காங்கே தொற்று பரவல் அபாயத்தால் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன. இரண்டாவது அலையின் தாக்கம் அதிகமாக இருந்ததால் நடப்பு கல்வி ஆண்டும் பள்ளிகள் திறக்க வாய்ப்புகள் இல்லாத நிலை இருந்தது. இதனால், இயங்கலை வகுப்புகள் மூலம் தொடர்ந்து வகுப்புகள் நடந்து வந்தன.

இதனிடையே, தற்போது தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்ததால், பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு நான்கு நாட்களாக 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கின. தொடர்ந்து, தகுந்த வழிகாட்டு நெறிமுறைகளுடன் பள்ளி நிர்வாகம் செயல்பட வேண்டும் என அரசு அறிவித்தது.

உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்ட பிறகே, மாணவ, மாணவியர்கள் பள்ளிகளுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். வகுப்புகளுக்கு சுழற்சிமுறையில் பாடங்கள் எடுக்கப்பட்டு வரும் நிலையிலும் தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

பள்ளி திறந்து நான்கு நாட்களில் 4 ஆசிரியைகள் கடலூர் மாவட்டத்தில்  பாதிக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரியநெசலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் இயல்அறிவு ஆசிரியைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியானது.

இதையடுத்து, அந்த பள்ளியின் உடன் ஆசிரியர்கள் மற்றும் பாடம் எடுத்த மாணவ - மாணவிகளுக்கு பரிசோதனை செய்ய பள்ளி முடிவெடுத்துள்ளது, பள்ளியை தூய்மை செய்யும் பணியில் நலங்குத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

கடலூர் பெண்கள் அரசு பள்ளி ஆசிரியருக்கு தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, நேற்று நெய்வேலி அருகே தனியார் பள்ளியைச் சேர்ந்த 2 ஆசிரியர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை 4 ஆசிரியர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் அச்சமடைந்துள்ளனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,70,997.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.