Show all

ஓதுவார் படிப்பிற்கு ஆர்வம் காட்டும் தமிழ்நாட்டு இளைஞர்கள்!

மூன்று ஆண்டு காலம் கற்பிக்கப்படும் ஓதுவார் பட்டப் படிப்பில் தேர்ந்த மாணவர்களுக்குத் திருமுறை இசைமணி என்ற பட்டம் வழங்கப்படுகிறது. பயிற்சி முடிந்த மாணவர்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்களில் ஓதுவாராக அமர்த்தப்படுவார்கள்.

02,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாடு அரசின் சார்பில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள ஓதுவார் பயிற்சிப் பள்ளியில் கடந்த மூன்று ஆண்டுகளாக தன்விருப்பத்தின் பேரில் இதுவரை 20 மாணவர்கள் சேர்ந்துள்ளதாகவும், மூன்று ஆண்டு காலம் கற்பிக்கப்படும் பட்டப் படிப்பில் தேர்ந்த மாணவர்களுக்கு திருமுறை இசைமணி என்ற பட்டம் வழங்கப்படும் என்றும் ஓதுவார் பயிற்சிப் பள்ளியின் ஆசிரியர் வி.ரத்தினம் தெரிவிக்கிறார்.

ஒவ்வொரு பாடலுக்கும் பொருள் புரிந்து, இசையோடு பாடவும், ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஏற்ற பாடல்களை தேர்ந்தெடுத்துப் பாடவும் இந்த மாணவர்கள் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். தேவாரப் பாடல்களில் நால்வர் வகுத்த அதே இசைவடிவை பாடவேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஓதுவார் பயிற்சியின்போது, ஆசிரியரின் உதவியுடன் குறைந்தபட்சம் 1,400 பாடல்களை மனப்பாடம் செய்யும் மாணவர்கள், விடுமுறை நாட்களில் மிடுக்குப் பேசிகளில் உள்ள செயலி மூலமாகவும் பாடல்களை கேட்பதாக கூறுகின்றனர். 

சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்லப்படுவதால், பலருக்கும் அது புரியாமல் இருக்கும். ஓதுவாமூர்த்திகளான நாங்கள் தமிழில் பாடல்களை, இசையோடு பாடுவதால், மக்களுக்கு எளிமையாக புரிந்து, பாடல்களின் பொருளை உணர்ந்து அவர்கள் கேட்கிறார்கள் என்பதை பலமுறை நாங்கள் கோயில்களில் பார்த்துள்ளோம். இது எங்களை மேலும் சிறப்பாக பாட ஊக்குவிக்கிறது என்று மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

மதுரை மீனாட்சி கோயிலில் அன்றாடம் ஒலிக்கும் பன்னிரு திருமுறைப் பாடல்களில் ஓதுவாமூர்த்திகளுடன் பயிற்சி மாணவர்களும் பாடல்களை பாட அனுமதிக்கப்படுகின்றனர் என்கிறார் கோயில் நிர்வாக அதிகாரி நடராஜன்.

இளைஞர்கள் ஆர்வத்தோடு பயில முன்வருவதால், அவர்களுக்கு ஊக்கம் தரும்வகையில் உதவித்தொகை அளித்து, விடுதியில் அவர்கள் தங்கி படிக்க அரசு வசதிகளை ஏற்படுத்தித் தருகிறது. பயிற்சி முடிந்த மாணவர்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்களில் ஓதுவாராக அமர்த்தப்படுவார்கள். தனியார் கோயில்கள் மட்டுமல்லாது, திருமணம் மற்றும் பல மங்கல நிகழ்வுகளுக்கும் ஓதுவார்கள் அழைக்கப்படுகிறார்கள். வெளிநாடுகளில் வாழும் தமிழர்களும் சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து ஓதுவார்களை வரவழைக்கிறார்கள், என்று நடராஜன் மேலும் தெரிவிக்கிறார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.