Show all

தமிழ்த் தெருவில் தமிழ் இல்லை- தமிழ்த் தெருவில் தமிழர்களே இல்லை! அன்று பாவேந்தர் பாரதிதாசன். இன்று இயக்குநர் பேரரசு

தமிழ்த் தெருவில் தமிழ் இல்லை என்று அன்று, பாவேந்தர் பாரதிதாசன் கண்டித்திருந்த அதே தெருவில் இன்று தமிழர்களே இல்லையே என்ற ஆதங்கத்தை அறிக்கை ஆக்கியுள்ளர் இயக்குநர் பேரரசு.

05,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: இரண்டு தமிழ்த் தெருக்கள். அவற்றுள், பாரதிதாசன் தமிழ்த் தெருவில் தமிழ் இல்லை என்று கண்ட தெரு ஒன்று. ஆம் அந்தத் தெருவில் தற்போது தமிழர்களே இல்லை என்று இயக்குநர் பேரரசுவை அறிக்கை வெளியிட வைத்திருப்பது மற்றொன்று. இந்த இரண்டு தெருக்களிலிருந்து அயல்களை துடைத்தெறியும் வகையறியாமல் கடந்து கொண்டுதாம் இருக்கிறோம் தமிழ்மக்கள்.

 

தமிழ்த் தெருவில் தமிழ் இல்லை! - பாவேந்தர் பாரதிதாசன் .

வாணிகம் தம் முகவரியை

வரைகின்ற பலகையில்

ஆங்கிலமா வேண்டும்?

வானுயர்ந்த செந்தமிழால்

வரைக என அன்னவர்க்குச்

சொல்ல வேண்டும்!

ஆணி விற்போன் முதலாக

அணிவிற்போன் ஈறாக

அனைவர் போக்கும்

நாணமற்ற தல்லாமல்

நந்தமிழின் நலங்காக்கும்

செய்கை யாமோ?

உணவுதரு விடுதிதனைக்

'கிளப்' என வேண்டும் போலும்

உயர்ந்த பட்டுத்

துணிக்கடைக்கு 'சில்குஷாப்'

எனும் பலகை தொங்குவதால்

சிறப்புப் போலும்

மணக்க வரும் தென்றலிலே

குளிரா இல்லை? தோப்பில்

நிழலா இல்லை!

தணிப்பரிதாம் துன்பமிது

தமிழ்நாட்டின் தமிழ்த் தெருவில்

தமிழ்தான் இல்லை

தமிழ்நாட்டின் உப்பைத் தின்

றீரன்றோ கணக்காயத்

தந்தை மாரே!

தமிழ்நாட்டின் தமிழர்களின்

தன்னுணர்வு நாட்டுவதைத்

தவிர்ப்பீ ராயின்

உமிழாதோ, வருத்தாதோ

உம்மையே உம் மருமை

உள்ளச் சான்றே?

அமுதூட்ட நஞ்சூட்டி

அகமகிழும் தாயுண்டோ

அருமைச் சேய்க்கே?

கல்லூரித் தலைவரை நான்

கேட்கிறேன் கனிதமிழின்

பேரைச் சொன்னால்

சொல்லூறிப் போகாதோ

வாயூறிப் போகாதோ

தாய் தமிழ்க்கு

வல்லூறாய் வாய்த்தீரோ

வளம் செய்யும் எண்ணமினி

நீர் பிறந்த

நல்லூரின் நன் மணியாய்

அல்லாது நடந்திடுமோ?

நவில்வீ ரின்றே!

இந்தக் கவிதை, அன்று பாரதிதாசன் வாழ்ந்த காலத்தில் அவர் தமிழரை நோக்கி எழுதியது.

இன்று, தமிழ்த் திரையில் இயக்குனராக வலம் வரும் பேரரசு, தமிழர்களுக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

திருப்பாச்சி, திருப்பதி உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இயக்குனர் பேரரசு. இவர் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நாம் தமிழ்நாட்டில் வாழ்கிறோமா இல்லை, வெளிநாட்டில் வாழ்கிறோமா என்று கேள்விக்குறியாக இருக்கிறது! 

மக்கள் அன்றாடம் செல்லும் இடங்களான உணவகம், துணிக்கடை, விமான நிலையம் தொடர்வண்டித் துறை நிலையம் போன்ற இடங்களில் பெரும்பாலும் தமிழர்கள் பணியில் இல்லை என்பது வேதனையான விடையம். வட இந்தியர்களே அதிகமாக வேலை செய்கிறார்கள் என்பதும் மிக மிக வேதனையான விடையம்.

ஓரளவு படித்தவர்கள் அவர்களுக்கு புரிய வைப்பதும் அவர்களின் கேள்விக்கு பதில் சொல்வதும் மிகவும் சிரமமான நிலையில் படிக்காத பாமர மக்களின் நிலையை எண்ணிப் பார்க்கும்போது மிகவும் வேதனையாக இருக்கிறது. ஒரு கடைக்குச் சென்றால் வாடிக்கையாளர்களை அங்குள்ள பணியாளர்கள் அன்போடு வரவேற்று பணிவோடு என்னவேண்டும் என்று விசாரிப்பது முதன்மையாக நம் தமிழர்களின் பண்பாடாக இருந்து வந்தது, ஆனால் இப்பொழுது அந்த பண்பாடு புண்பட்டு இருக்கிறது.

ஒரு உணவகத்திற்கு சென்றால் நம் அருகே வட இந்தியர்கள் இயந்திரம் போல் வந்து நம் அருகில் நிற்கிறார்கள். என்ன இருக்கிறது என்று கேட்கும் பொழுது அவர்கள் எங்கேயோ பார்த்தபடி ஒரு பட்டியலைச் சொல்லுகிறார்கள். நாம் அதில் என்ன வேண்டும் என்று சொல்லும்பொழுது அதற்கு எந்த உணர்வும் காட்டாமல் குறிப்பு எடுத்து விட்டு நம்மை கடந்து செல்கிறார்கள்.

அதேபோல் சில தங்கும் விடுதிகளுக்கு சென்று அறை பதிவு செய்யும் பொழுது அவர்கள் நம்மை ஒரு விசாரணைக் கைதி போல் விசாரிக்கிறார்கள். அது நமக்கு மிகவும் அவமானமாகவும் தோன்றுகிறது. அதேபோல் விமான நிலையம் இது தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையமா? இல்லை மும்பையில் உள்ள விமான நிலையமா? என்ற ஐயமே வருகிறது.

விமான நிலையம் எல்லா மொழியினருக்கும் பொதுவானதுதான். ஆனால் இங்கே தமிழர்கள் இருக்க வேண்டாமா? முதன்மையாக நுழைவாயில், அதிகமாக தமிழர்கள் செல்லும் நுழைவு வாயிலில் தமிழ் தெரிந்த ஒருவர் இருக்க வேண்டாமா? வட இந்தியரும் இருக்கட்டும் கூடவே ஒரு தமிழரும் இருக்க வேண்டாமா? தமிழ்நாட்டில் எத்தனை தமிழர்கள் அந்த இடத்தில் திணறுகிறார்கள் பயப்படுகிறார்கள் அவர்கள் என்ன கேட்கிறார்கள் என்று புரியாமல் தவிக்கிறார்கள். விமான நிலையத்தில் மட்டுமல்ல பல பொது இடங்களிலும் இன்று தமிழ்நாட்டில் இந்த நிலைமைதான்.

ஹிந்தி திணிப்பு வேண்டாம்! ஹிந்தி திணிப்பு வேண்டாம்! என்று போராடிய நாம் தமிழ்நாட்டில் ஹிந்திக்காரர்களை திணிப்பதை தாங்கிக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் தமிழில் பேச முடியாத நிலையை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். தமிழை வளர்க்கிறோமோ இல்லையோ தமிழை அழிந்து விடாமல் காக்கும் நிலையில்தான் நாம் இருக்கிறோம் என்பது மிகப்பெரிய உண்மை. நம் மொழியில் நமக்கு விழிப்புணர்வு வேண்டும். என்று பேரரசு தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,162.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.