Show all

தெளிவூட்டிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்! நீட் விலக்கு சட்டமுன்வரைவு பற்றிய ஆளுநரின் மதிப்பீடுகள் அனைத்தும் தவறானவை

நீட் விலக்கு சட்டமுன்வரைவு பற்றிய ஆளுநரின் மதிப்பீடுகள் அனைத்தும் தவறானவை என்று, சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் தெளிவு படுத்தியுள்ளார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

26,தை,தமிழ்த்தொடராண்டு-5123: நீட் விலக்கு சட்ட முன் வடிவை ஆளுநர் திருப்பி அனுப்பியது அரசியலமைப்பு முறைப்படி சரியானதல்ல என சட்டமுன்வரைவைப் பதிகை தாக்கல் செய்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

நீட் தேர்வில் விலக்கு கோரி சட்டப்பேரவையில் சட்டமுன் வரைவு நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டதை ஆளுநர் ஆர்.என். இரவி அரசுக்கே திருப்பி அனுப்பினார். 

சட்டமுன்வரைவு திருப்பி அனுப்பியதை தொடர்ந்து காரிக்கிழமை சட்டமன்ற அனைத்துகட்சி கூட்டம் நடைபெற்றது. அனைத்துக்கட்சி கூட்டத்தின்போது எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி நீட் விலக்கு சட்டமுன் வரைவை மீண்டும் நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.

சிறப்பு கூட்டத்தில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு பேசும்போது கூறியதாவது:-
தனிப்பட்ட முறையில் ஆளுநர் பற்றி கண்டிப்பாக பேச கூடாது அதை நான் அனுமதிக்க மாட்டேன். 

ஏ.கே.ராஜன் தலைமையிலான உயர்மட்ட குழுவின் அறிக்கை காமாலைக் கண்ணுடன் உள்ளது. இது யூகங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது என ஆளுநரின்  கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு விளக்கம் அளித்தார்.

நீட் தேர்வு விலக்கு சட்டமுன் வரைவு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிகை செய்தார். அவர் கூறியதாவது:-

நீட் தேர்வை அதன் அறிமுக காலத்தில் இருந்தே தமிழ்நாடு அரசு எதிர்த்து வருகிறது. 142 நாட்களுக்கு பிறகு சில காரணங்களை சுட்டிக் காட்டி சட்டமன்றத்தின் மறுபரிசீலனைக்கு ஆளுநர் சட்டமுன்வரைவை அனுப்பி உள்ளார்.

அரசியல் அமைப்பு சட்டப்படி ஆளுநர், குடியரசு தலைவருக்குதான் சட்டமுன்வரைவை அனுப்பி இருக்க வேண்டும். சட்ட முன்வடிவை குடியரசு தலைவருக்கு அனுப்பாமல், ஆளுநர் திருப்பி அனுப்பி இருப்பது சரியல்ல.

குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் தன்னிச்சையாக ஆளுநர் திருப்பி அனுப்பி இருப்பது சரியான முடிவல்ல. பொதுமக்களின் கருத்தை கேட்டறிந்து உரிய ஆய்வுக்கு பிறகே நீட் விலக்கு கோரலாம் என அறங்கூற்றுவர் ஏ.கே.ராஜன் குழு பரிந்துரைத்தது. 

ஆளுநரின் கருத்த உயர்மட்டக்குழுவை அவமானப்படுத்துவது போல் உள்ளது. நீட் விலக்கு சட்டமுன்வரைவு பற்றிய ஆளுநரின் மதிப்பீடுகள் அனைத்தும் தவறானவை.

பட்டியலின, பழங்குடியின மாணவர்களுக்கு நீட் தேர்வால் மருத்துவ படிப்பு என்பதே எட்டாக்கனியாக மாறியுள்ளது. வசதி படைத்தவர்கள் மட்டுமே ஒன்றுக்கு மேற்பட்ட முறை நீட் தேர்வை எழுதுகிறார்கள். 

பழங்குடியின மக்கள் போன்ற நலிவுற்ற பிரிவினர் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற முடியாது. குடியரசு தலைவருக்கு சட்டமுன்வரைவை அனுப்பாமல், அறங்கூற்றுவர் குழு அறிக்கை பற்றி தனது கருத்தை ஆளுநர் கூறியிருப்பது அரசியல் சட்டத்துக்கு எதிரானது. கொள்கை அடிப்படையில் இயற்றப்பட்ட சட்டத்தை உரிய கண்ணோட்டத்தோடு பார்க்காமல் குறைகூறுவது சரியல்ல.

உச்சஅறங்கூற்றுமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் திருப்பி அனுப்புகிறேன் என்பது ஏற்கத்தக்கதல்ல. உச்சஅறங்கூற்றுமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி, ஒரு சட்டமன்றம் சட்டமே இயற்றக்கூடாது என்று கூறுவது ஏற்புடையதோ அரசியல் அமைப்புப்படி சரியானதோ அல்ல. இவ்வாறு கூறியுள்ளார்.

சட்டமன்றங்களும், பாராளுமன்றமும் சட்டம் இயற்றும் அமைப்புகள். அறங்கூற்று மன்றங்கள் அனைத்துமே அந்தச் சட்டங்களை பாதுகாக்கிற அமைப்புகள் மட்டுமே. எந்த அறங்கூற்றுமன்றமும் அந்த சட்டங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்க முடியுமே அன்றி, புதிய சட்டம் எதுவும் இயற்ற முடியாது. நீட்டை பாதுகாக்க நினைக்கிற யாரும், இதை புரிந்து கொள்ள மறுத்து, உச்சஅறங்கூற்று மன்றத் தீர்ப்பை, நீட்டை பாதுகாக்க இயற்றிய புதிய சட்டத்தைப் போல பயன்படுத்துவது தொடர் வாடிக்கையாக இருக்கிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,153.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.