Show all

வெற்றிபெற வாழ்த்துக்கள்! பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களை தமிழ்நாடுஅரசே நியமிக்க வகைசெய்யும் சட்ட முன்வரைவு

தமிழ்நாடு சட்டமன்றத்தில் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களை ஆளுநருக்கு மாற்றாக தமிழ்நாடு அரசே நியமிக்க வகை செய்யும் சட்ட முன்வரைவு இன்று நிறைவேற்றப்பட்டது.

12,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழ்நாடு சட்டமன்றத்தில் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களை ஆளுநருக்கு மாற்றாக தமிழ்நாடு அரசே நியமிக்க வகை செய்யும் சட்ட முன்வரைவு இன்று நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டமுன்வரைவை உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி பதிகை செய்திருந்தார். இந்தச் சட்டமுன்வரைவின் மீதான விவாதத்தில் பல்வேறு கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளை முன்வைத்தனர்.

பண்ருட்டி வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி): பறிக்கப்பட்டு வரும் மாநில உரிமைகளை மீட்டெடுக்கும் தமிழ்நாடு முதல்வரின் முயற்சிக்கு நன்றி. இந்த சட்ட திருத்த முன்வரைவை தமிழக வாழ்வுரிமைக் கட்சி மனதார வரவேற்கிறது. குஜராத், தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்குதான் உள்ளது. அதே நிலையைத்தான் தமிழ்நாடு அரசும் கொண்டு வந்துள்ளது. இது மாநில உரிமைகளைப் பாதுகாக்கும் செயல். மாநில உரிமைகளை பறிகொடுப்பது போல் துணைவேந்தர்களாக கடந்த ஆட்சியில் வேற்று மாநிலத்தவர் கொண்டுவரப்பட்டனர். இதற்கு முடிவுகட்டுகிறது இந்த சட்ட திருத்த முன்வரைவு என்று பாராட்டினார்.

ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி): துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்குதான் இனி என்கிற இத்தீர்மானத்தை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது. இந்த தீர்மானம் ஏன் என்பதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விரிவாக விளக்கி இருக்கிறார். துணைவேந்தர்களை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான், முதல்வர்தான் நியமிக்க வேண்டும். 

சின்னப்பா(மதிமுக): இத்தீர்மானத்தை நாங்கள் வரவேற்கிறோம். மாநில அரசின் உரிமையைக் காப்பாற்றுகிற இத்தீர்மானத்தை மதிமுக வரவேற்கிறது.

இராமச்சந்திரன் (சிபிஐ): மாநில உரிமைகளைப் பாதுகாப்பதில் இந்தியாவிலேயே முதல் முதல்வர் நம்முடைய முதல்வர் ஸ்டாலின்தான் என்பதை நிரூபிக்கும் தீர்மானம் இது. இத்தீர்மானத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனதார வரவேற்கிறேன். வலதுசாரிகள், வெளிமாநிலத்தவர்களே துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்டனர். மாநில ஆளுநர் நடத்தும் துணைவேந்தர்கள் மாநாடு, மக்களாட்சி கோட்பாட்டுக்கு எதிரானது. 

நாகை மாலி (சிபிஎம்): இத்தீர்மானத்தை சி.பி.எம் கட்சி சார்பில் வரவேற்கிறேன்.

சிந்தனைச்செல்வன் (விசிக): இத்திருத்த சட்டத்தை விடுதலை சிறுத்தைகள் சார்பாக வரவேற்கிறோம். அதேநேரத்தில் 2 கோரிக்கைகளை நாங்கள் முன்வைக்கிறோம். கடந்த 4 ஆண்டுகளாக ஆளுநர் என்ற அடையாளத்துக்குப் பின்னால் இருந்து 2,000 ஆண்டுகால தமிழ்நாட்டு கல்வி மரபின் மீது ஒன்றிய அரசு மாபெரும் தாக்குதலை நடத்தி இருக்கிறது. ஆகையால் 4 ஆண்டுகளாக நியமிக்கப்பட்ட அனைத்து துணைவேந்தர்கள் குறித்து நீதி விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். 

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பேராளர்கள் குடியிருக்கும் கிரீன்வேஸ் சாலை குடியிருப்புகளில் ஒன்றையே ஆளுநருக்கு தமிழ்நாடு அரசு ஒதுக்க வேண்டும். ஊட்டியில் இருக்கிற ஆளுநர் மாளிகையை காலி செய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். என்று தெரிவித்தார்.

ஜி.கே.மணி(பாமக): தமிழ்நாட்டின் முதல்வர்தான் அனைத்து பல்கலைக் கழகங்களின் வேந்தராக இருக்க வேண்டும். இணைவேந்தராக உயர் கல்வித்துறை அமைச்சர்தான் இருக்க வேண்டும். இந்தச் சட்ட முன்வடிவை பாமக 100 விழுக்காடு வரவேற்கிறது. 

காங்கிரஸ் கட்சியின் செல்வப்பெருந்தகையும் இந்த மசோதாவை ஆதரித்து பேசினார்.

ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி): தமிழ்நாடு அரசின் தற்போதைய இந்த முன்னெடுப்பு முயற்சி பயன்தரக் கூடியதாக அமைய வேண்டும். 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,229.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.