Show all

வன்மையாகக் கண்டிக்கிறோம்! நூறு நாள் வேலை குறித்த பாஜகதனமான சீமான் பேச்சை

தீர விசாரித்து அறிந்ததில், 100நாள் வேலைகுறித்த சீமான் பேச்சு, பாஜகதனமானது என்பதை உறுதிசெய்வதாகவே உள்ளது. பாஜகவின் ஆ அணியே சீமான் கட்சி என்று பேசுவோருக்கு சீமான் பேச்சு வலுசேர்ப்பதாக அமைகிறது. 

16,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: தீர விசாரித்து அறிந்ததில், 100நாள் வேலைகுறித்த சீமான் பேச்சு, பாஜகதனமானது என்பதை உறுதிசெய்வதாகவே உள்ளது. பாஜகவின் ஆ அணியே சீமான் கட்சி என்று பேசுவோருக்கு சீமான் பேச்சு வலுசேர்ப்பதாக அமைகிறது. 

சீமானின் இந்தப் பேச்சு இதுவரை வெளிவட்டத்தில் இருந்து சீமானை ஆதரித்து வந்தவர்களுக்கு மிகப்பெரிய சம்மட்டி அடியாகும்.

தன் கட்சிக்கு உழவன் இலட்சினை கிடைத்ததை கொண்டாடும் சீமான், வேளாண்மையை வாழ வைக்க வேண்டுமெனில் நூறு நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ள கருத்து பாமரனின் உழைப்பைக் கிள்ளுக்கீரையாக மதிக்கும் பாஜகதனமானது என்று தெரிவித்து அவரின் இந்த ஆதிக்கவாத பேச்சை நாம் வன்மையாகக் கண்டிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.

உள்ளாட்சித் தேர்தல் குறித்து, விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நூறு நாள் வேலைத் திட்டத்தை விமர்சித்துப் பேசினார். இத்திட்டத்தின் மூலம் மனித உழைப்பு வீணடிக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். வேளாண்மைக் காப்பாற்ற வேண்டுமென்றால் 100 நாள் வேலைத் திட்டத்தை ஒழித்துக்கட்ட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

100 நாள் வேலைத் திட்டம் என்ற பெயரில், தேவையின்றி பலர் கூடி புரணி பேசுவது தான் நடக்கிறது என்றும் சீமான் கூறியுள்ளார். மேலும், மனித ஆற்றலை உழைப்பில் ஈடுபடுத்தி, உற்பத்தியைப் பெருக்கி, லாபத்தை ஈட்டுகின்ற நாடு எதுவோ அதுதான் வாழும், வளரும். மனிதனை உழைப்பிலிருந்து வெளியேற்றிவிட்டு, சோம்பி இருக்க வைத்து கூலி கொடுப்பதென்பது மிக ஆபத்தான போக்கு. என்றெல்லாம் பாமர வேளாண் கூலிகளின் உழைப்பைக் கொச்சைப்படுத்தியுள்ளார் சீமான்.

சீமானின் விமர்சனத்தை மறுத்துப் பேசிய அமைச்சர் பெரிய கருப்பன், நூறு நாள் வேலைத் திட்டம் என்பது பல லட்சம் ஏழை எளிய மக்களுக்கு அது வாழ்வாதாரமாக இருந்து வருவதாக கூறியுள்ளார். 

காந்தியார் ஒன்றிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் எனப்படும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் தமிழ்நாட்டில் 1 கோடியே 33 லட்சத்து 60 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். கடந்த மூன்று  ஆண்டுகளில் ஒரு கோடியே பதினாறு லட்சம் பேர் பயனடைந்துள்ளனர், இதில் 69,250 பேர் மாற்றுத்திறனாளிகள். கொரோனாவால் பலர் வேலை இழந்திருக்கும் இந்த கால கட்டத்தில் நூறுநாள் வேலைத்திட்டத்தால் பயனடைவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என புள்ளிவிவரங்கள் மூலமாக தெரியவருகிறது. 

இத்திட்டத்தில் பயனாளிகளுக்கு வழங்கப்படும் ஊதியத்துக்கான நிதியில் ஒன்றிய அரசின் பங்கு 75 விழுக்காடும், மாநில அரசின் பங்கு 25 விழுக்காடும் ஆகும். இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு ஆளுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வழங்கப்படுகிறது, 

இத்திட்டத்தின் ஊதியமாக ஒரு நாளைக்கு 273 ரூபாய் ஒதுக்குகிறார்கள், ஆனால் ஒரு ஆளுக்கு, அவர்களின் வேலைத்திறன் அடிப்படையில் 220 முதல் 260 ரூபாய் வரை வழங்கப்படுவதாக தெரிகிறது. அந்த அடிப்படையில் ஒரு பாமர வேளாண்கூலி ஆண்டுக்கு அரசிடம் இருந்து அதிகபட்சமாக பெறும் சம்பளம் வெறுமனே 26000 மட்டுமே. 

இந்த வெறுமனே 26000 சம்பளத்தொகைக்கு அந்த பாமரக்கூலிகள் உரிய உழைப்பை தரவில்லை என்பதுதான் சீமானின் குற்றசாட்டு. உலகின் எந்தக் கார்ப்பரேட்டு கம்பெனிக்காரரும் கூட சீமானைப் போல, பாமரக் கூலிகளை இவ்வளவு இழிவாக கருதியிருக்கவும், கொச்சைப் படுத்திப் பேசியதுமான வரலாறு இருக்கவே முடியாது.

இது தொடர்பாக வேளாண் தொழிலாளர் சங்க நிர்வாகி கே.பக்கிரிசாமி பேசுகையில், சீமான் தெரிவித்திருக்கும் இந்த கருத்துக்கு என்னுடைய கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தக் கொரோனா காலகட்டத்தில் நூறுநாள் வேலையும், இலவச அரிசியும் இல்லையென்றால் வடமாநிலங்களைப் போல வேளாண் கூலியில் ஈடுபட்டுவரும் மக்கள் இங்கும் பட்டினியில் உழன்றிருப்பார்கள், இது புரியாமல் சீமான் பேசுகிறார். வேளாண்மையில் ஒரு ஆண்டுக்கு 20 முதல் 30 நாட்கள் கூட வேலை கிடைப்பதில்லை, எல்லாம் இயந்திரமயமாகிவிட்டது. அப்படியிருக்கையில் எப்படி மற்ற நாட்களை அவர்களால் கடத்த முடியும், அவர்கள் எப்படி குடும்பம் நடத்துவார்கள். இந்தத் திட்டம் வந்த பிறகுதான் கிராமப்புற பெண்களுக்கு அதிகாரம், சுதந்திரம் எல்லாம் கிடைத்துள்ளது. பெண்கள் இப்போது சொந்தக்காலில் நிற்கிறார்கள், இதற்கு காரணம் நூறுநாள் வேலைத் திட்டம்தான்.

நூறுநாள் வேலைத் திட்டம் மூலமாக வேளாண் கூலிகளின் பேரம் பேசும் உரிமை கிடைத்துள்ளது. வேளாண் தொழில் முனைவோர்களிடம் இவ்வளவு கூலி கொடுத்தால்தான் வேலைக்கு வருவேன் என்று இன்று வேளாண் கூலித்தொழிலாளிகளில் பேரம் பேசும் உரிமை இத்திட்டம் மூலமாகவே கிடைத்தது. 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலைக்கு வருகிறார்களில், 86 விழுக்காடு பெண்கள் ஆவர்.  ஆண்களில் மற்ற வேலைக்கு செல்ல முடியாதவர்கள்தான் இந்த வேலைக்கு வருகிறார்கள். ஆண்களின் சம்பாத்தியம் எல்லாம் டாஸ்மாக்கிற்கு செல்லும் இன்றைய சூழலில், பெண்களின் 100 நாள் சம்பளம்தான் குடும்பத்தை காக்கிறது.

கிராம அவைக்கூட்டத்தில் என்ன வேலை செய்யவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி அதன் அடிப்படையிலேயே பணிகள் நடைபெறுகிறது. ஒரு நபர் 32 அடி கன அடி அளவு வேலை செய்தால்தான் அவர்களுக்கு 273 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது, இதனை எல்லாம் அரசு அதிகாரிகள் முறையாக கண்காணிக்கிறார்கள், எனவே இத்திட்டத்தில் வேலை செய்யவில்லை, முறைகேடு நடக்கிறது என்பதில் உண்மையில்லை. என அவர் தெரிவித்தார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,024.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.