Show all

உயிருடன் பிடித்துள்ளனர் வனத்துறையினர்! இருபத்தியோரு நாட்களாகப் போக்குக்காட்டி வந்த புலியை

இன்று காலையும் புலியைப் பிடிக்கும் பணியை வனத்துறையினர் தொடர்ந்தனர். அப்போது புலி, சாலையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் மான்களை வேட்டையாடத் துரத்திய போது மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கப் பட்டுள்ளது.

29,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: கடந்த இருபத்தியோரு நாட்களாக வனத்துறையினர் தேடிவந்த புலியை, நேற்று இரவு மசினகுடியிலிருந்து தெப்பக்காடு செல்லும் வழியில் பழுதான வாகனத்தைச் சிலர் சரி செய்துகொண்டிருந்த போது,  சாலையைக் கடப்பதைப் பார்த்தவர்கள் வனத்துறைக்குத் தகவல் கொடுத்தனர். 

இரவு 10 மணியளவில் வனத்துறையினரின் மருத்துவக் குழு அந்த இடத்திற்கு வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது புலிக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. மயக்க ஊசி செலுத்தப்பட்ட பிறகும் புலி அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் சென்றதாகக் கூறப்பட்டது. இதனையடுத்து, மசினகுடியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரண்டு கும்கி யானைகள் உதவியுடன் புலி பதுங்கிய அடர் வனப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. நள்ளிரவு 2 மணிவரை இந்த தேடுதல் வேட்டை நடந்தும் புலியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதன்பிறகு தேடுதல் வேட்டை  தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை மீண்டும் புலியைப் பிடிக்கும் பணியை வனத்துறையினர் தொடங்கினர். அப்போது மீண்டும் புலி, சாலையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் மான்களை வேட்டையாடத் துரத்தியதைக் கண்ட வனத்துறையினர் மற்றும் வனத்துறை மருத்துவர்கள் குழு, புலியைத் தொடர்ந்து கண்காணித்தனர். இதனால் மசினகுடி - தெப்பக்காடு இடையிலான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து டி23 என்று பெயரிடப்பட்ட அந்த புலிக்கு மீண்டும் ஒரு மயக்க ஊசி செலுத்தப்பட்ட நிலையில், தற்போது வனத்துறையினர் 21 நாள் போராட்டத்திற்குப் பின் புலியைப் பிடித்துள்ளனர்.   

புலியைப் பிடிக்கும் பணியில் 80க்கும் மேற்பட்ட வனத்துறை பணியாளர்கள், 5 தானுலங்கி படக்கருவிகள், 50க்கும் மேற்பட்ட தானியங்கி படக்கருவிகள், அதிரடி படையினர், இரண்டு கும்கி யானைகள், சிப்பிப்பாறை நாய்கள், மோப்ப நாய்கள் போன்றவை பயன்படுத்தப்பட்டன. 

புலியைக் கொல்ல வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து புலியைக் கொல்லக்கூடாது என அறங்கூற்றுமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது. இந்நிலையில், புலியைக் கொல்லாமல் மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கப்பட்டதால் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளது மசினகுடி. இப்புலி இதுவரை நான்கு மனிதர்களையும், 30க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் கொன்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
 -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,037.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.