Show all

வலிமையோடு நிறைவேற்ற போகிறோம்! நீட் விலக்கு சட்டமுன்வரைவு அடுத்த கட்டம் குறித்து தமிழ்நாடு முதல்வர் விளக்கம்

சட்டமன்றச் சிறப்பு கூட்டத்தில், 'நீட் தேர்வு எதிர்ப்பு சட்டமுன்வரைவை' இன்னும் வலிமையோடு நிறைவேற்றப்போகிறோம் என்று காணொளி மூலம் நடந்த கோவை தேர்தல் கருத்துப்பரப்புதலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

25,தை,தமிழ்த்தொடராண்டு-5123: நீட் தேர்வு என்பது பல லட்சம் கொடுத்து பயிற்சி மையங்களில் படிக்க வசதி உள்ள மாணவர்களுக்குத்தான் வசதியானது. முதல் ஆண்டு இடம் கிடைக்கவில்லையா? அடுத்த ஆண்டும் லட்சக்கணக்கில் பணம் கட்டி பயிற்சி பெறுகிறார்கள். இது எல்லா மாணவ, மாணவியராலும் முடியுமா? ஏழைகளால் முடியுமா? முடியாது. அரசு பள்ளியில் படிப்பவர்களால் முடியுமா? முடியாது.

நீட் தேர்வில் இருந்து விலக்கு தர வலியுறுத்தும் சட்டமுன்வரைவை ஆளுநர் திருப்பி அனுப்பினார் என்று தெரிந்ததும், மறுநாளே அதாவது, நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடத்தினோம். அடுத்ததாக, நாளை தமிழ்நாடு சட்டமன்றம் கூட இருக்கிறது. மீண்டும் அதே சட்டமுன்வரைவை இன்னும் வலிமையோடு நிறைவேற்ற போகிறோம்.

நூற்றாண்டுகளாக மறுக்கப்பட்ட கல்வி உரிமையை பல போராட்டங்களுக்கு பிறகு மீட்டு, தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்குப் பிறகு பலரும் படிக்க தொடங்கியிருக்கிறார்கள். படித்தால் தானாக தகுதி வந்து வாழ்க்கையில முன்னேறிவிடுவார்கள். ஆனால் படிப்பதற்கே உனக்கு தகுதி வேண்டும் என்று தடுக்கும் பழைய சூழ்ச்சியின் புது வடிவம்தான் நீட்!

அதனால்தான் நாம் தொடர்ந்து நீட் தேர்வை எதிர்க்கிறோம். மருத்துவ படிப்புகளில் சேர்வதாலேயே யாரும் மருத்துவர் ஆகிவிட மாட்டார்கள். மருத்துவ படிப்புகளில் தேர்ச்சி அடைந்தால்தான் மருத்துவர் ஆவார்கள். அப்படித்தான் உலகின் தலைசிறந்த மருத்துவர்களாக நமது தமிழ்நாட்டு மருத்துவர்கள் இருக்கிறார்கள். நீட் தேர்வை மேலோட்டமாக பார்க்கக்கூடாது. அதன் முகமூடியைக் கழற்றி பார்க்க வேண்டும்.

மக்கள் விரோத ஒன்றிய பாஜக அரசை எதிர்ப்பதற்கு எத்தனையோ விடையங்கள் கொட்டிக்கிடக்கின்றன. மக்களுக்கு எதிரான அவ்வளவு செயல்களை அவர்கள் செய்துகொண்டு இருக்கிறார்கள். எனவே, நீட் தேர்வை வைத்துதான் அரசியல் நடத்த வேண்டிய கட்டாயம் எங்களுக்கு இல்லை.

இதோ இப்போது நாம் துணிச்சலோடு, ஆளுநர் திருப்பி அனுப்பிய சட்டமுன்வரைவை மீண்டும் நிறைவேற்றி அவருக்கு அனுப்ப இருக்கிறோம். நீட் எதிர்ப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம். நீட் மட்டுமல்ல் தமிழ்நாட்டுக்கு விரோதமான திட்டம் எது வந்தாலும் அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு அவர் பேசினார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,152.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.